திட்டமிட்ட உழைப்பே வெற்றியின் மூலதனம்!

Motivaion image
Motivaion imageImage credit - pixabay.com

ண்பர் ஒருவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். ஆனால் அவர் பல தொழில்களை கையிலெடுத்தும் எதிலும் அதிக வெற்றி என்பதைக் காணாமல் "பரமபதபாம்பு" போல இருக்கும் இடத்துக்கே கீழிறங்கி வருவதே வாடிக்கையாயிற்று. அவர் இடத்தில் யார் இருந்தாலும் இத்தனை தோல்விகளால் உடைந்திருப்பார்கள். ஆனால் அவரோ அடுத்து அடுத்து என தன்னம்பிக்கையுடன் இறங்குகிறார். இது ஒருவகையில் பாராட்டுக்குரியது என்றாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரத்தில் இறங்கி உழைக்கும் அவரது உழைப்பு "விறலுக்கு இறைத்த நீராகவே வீணாகிறது" என்பதுதான் உண்மை.

இந்த உலகில் நம்மைச் சுற்றிப் பலர் இந்த நண்பர் போலவே கடினமாக உழைக்கின்றனர். ஆனால் தோல்வி என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியை மருந்துக்காகக் கூட இவர்கள் பார்ப்பது இல்லை. காரணம்  செயலைத் திட்டமிடாமல் செய்த பின் தோல்வியடைந்து பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.   

மேலும், பலர் பலமுறைகள் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது கிடையாது. அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களும் உள்ளனர்.

அடிப்படையில் சரியான திட்டங்கள், சரியான இடம், சரியான கால நேரம், சரியான பணியாட்கள், லாபம் கொடுக்கும் திறன் இவைதான் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான தேவையாகும். திருக்குறளிலும் திட்டமிடுதல் பற்றி வள்ளுவர் வரையறுத்துள்ளார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்: (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும், இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சமீபகாலமாக "SWOT" எனப்படும் மதிப்பீட்டு முறை பிரபலமானது. அவை வலிமைகள், பலவீனங்கள், சமயோசிதம், அபாய எச்சரிக்கைகள் ஆகிய நான்கும் ஆகும். இதையும் திருக்குறள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆம் வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும்!, வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனையும் அவர்கள் அடைகிறார்கள்.

திட்டமிடாத செயல் என்பது இலக்கை நோக்கி செல்லத் தடையாகும் என்பது உறுதி. தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட செயலைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

''கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது. "சிந்தனையோடு திட்டமிட்ட கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பதுதான் இன்றைய அவசர காலகட்டத்துக்கு உகந்தக் கோட்பாடு.

இதையும் படியுங்கள்:
பணக்காரர்களின் 9 விதமான வெற்றி ரகசியங்கள் தெரியுமா?
Motivaion image

ஆகவே   சரியான முறையில் திட்டமிடுவதில்தான் வெற்றியின் மறைபொருள் (ரகசியம்) அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான பணி அல்லது தொழிலை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாகப் பொருள்.

முதலில் சொன்ன உழைப்பாளி நண்பரிடம் வருவோம்.
அவர் போல் வெறுமனே கடுமையாக உழைத்தால் வெற்றியடைய முடியாது. உழைப்புக்குண்டான பலனைப் பெற வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய்விடும். மேலும் காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும்.

ஆகவே வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்று இல்லாமல், எதைச் செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனையோடு வெற்றியை அணுக வேண்டும்.  எனவே!, திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலனும் குறைவே என்பதை உணர்ந்து   எந்த செயலையும் வெற்றிகரமாக்க திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com