
இளமை இருக்கும்வரை உடம்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நாற்பது வயதுக்கு மேல் உடம்பைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற ஆட்களாக இருக்கிறோம். உடம்பு ஒத்துழைக்கிறவரை, அதுபற்றி எந்த நிலையும் இல்லாமல் அது ஓர் இயந்திரம், அதை சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இல்லாமல் உழைத்துக்கொண்டேயிருக்கிறோம். தேவையில்லாமல் உடம்பை பாடாய்படுத்துகிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு நாம் செய்ய நினைக்கிற எதையும் செய்ய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.
உடம்பு லேசாக கோளாறு செய்ய ஆரம்பிக்கிற பருவத்தில்கூட இப்பொழுதாவது இந்த உடம்பைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தெளிவோ புரிதலோ நமக்கு வந்து விடுவதில்லை. அதெல்லாம் ஒன்றும் செய்யாது பார்த்துக் கொள்ளலாம் என்று உத்தேசத்தோடேயே அடுத்தபடியை நோக்கி நகர்கிறோம்.
உடம்பே ஒரு விஷயத்தை ஏற்க மறுக்கிறது என்பது தெரிந்த பிறகும் விடாப்பிடியாய் அதை செய்து கொண்டு இருப்பது நிச்சயமாய் பெரும் ஆபத்தில்தான் போய் முடியும். தம்முடைய வாழ்க்கை குறித்து நாமாகவே சில தீர்மானங்களை வைத்திருக் கிறோம்.
உடம்பில் இளமையும் தெம்பும் இருக்கிறபோது ஓடியாடி உழைக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் அந்த உடம்பை பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு உத்வேகம் என்றும் உற்சாகம் என்றும் பெயரிட்டுக்கொள்கிறோம்.
ஆனால் உண்மையிலேயே உடம்பு ஒரு கருவி என்பதையும் அதை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதைச் சரியாக பயன்படுத்தாத பட்சத்தில் அது கெட்டுப்போகும். என்பதையும், இருக்கிறபோது இளமை நம்மால் உணர்த்துகொள்ள முடிவதில்லை சற்று வயதானவர்கள் அது குறித்து நமக்கு அறிவுறுத்துகிற போது நம்மிடம் இருக்கக்கூடிய இளமை, அவர்களின் வார்த்தையை அனுமதிப்பதில்லை.
இந்த உடம்பு தொடர்ந்து சீராக இயங்க வேண்டும் என்றால், அதற்குத் தேவைப்படக்கூடிய நியாயமான விஷயங்களை நாம் கொடுத்தாக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நம்மிடம் எவ்வளவு உழைப்பிருந்தாலும், செயல்படும் திறன் இருந்தாலும், செயல்பட வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும் அதைச் செய்துமுடிக்க நம்முடைய உடம்பு ஒத்துழைக்காமல் போய்விடும்.
எனக்கு நேரமில்லை, அவகாசமில்லை, இதையெல்லாம். என்னால் இப்பொழுது செய்யமுடியாது என்பது போன்ற பல்வேறு விதமான சாக்குபோக்குகளைச் சொல்லி நாமே நம்மை சமாதானம் செய்துகொள்கிறோம். ஆசைப் பட்டதை கடைசிவரை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டால், உடம்பைப் பார்த்துக்கொள்வதைவிட வேறு முக்கியமான வேலை ஒன்றும் நமக்கு இருந்துவிட முடியாது.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு உடம்பு எந்தவகையிலும் ஒத்துழைக்காது. என்ற நிலைமை ஏற்பட்டாலன்றி அதை நான் புரிந்துகொள்ள மாட்டேன் என்று நினைப்பது ஓர் அபத்தமான செயலாகும். இழுத்த இழுப்பிற்கெல்லாம் நம்முடைய உடம்பு வரும் என்ற நம் நம்பிக்கையை யாராவது கேள்விக்குறியோடு எதிர் நோக்கினால் அதை ஒருபோதும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
போய் சாப்பிட்டுட்டு வந்து வேலையைப் பாருப்பா என்று நம்முடைய பெரியவர்கள் சொல்லுவதற்கு பின்னால், காலம் முழுக்க வேலை பார்க்கவேண்டும் உழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், சரியான நேரத்தில் சாப்பிட்டு உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அர்த்தம் ஒளிந்துகிடக்கிறது. ஊரார் சொல்லி கேட்காவிட்டாலும் உடம்பு சொன்ன பிறகாவது கேளுங்கள். அது இழுத்த இழுப்புக்கெல்லாம் வருமென்று மனக்கோட்டை கட்டாதீர்கள்.