

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு அரசியல் கட்சியில் இருந்தார்கள். தேர்தல் காலம் வந்தது. மூன்று நண்பர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தனர். அதன்படி தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் களத்தில் பணியாற்றினர். அந்த சமயத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது.
அந்த கருத்துக்கணிப்பில் மூன்று நண்பர்கள் இருந்த கட்சிகள் தோல்வியடையும் எனவும் வேறு ஒரு கட்சிக்காரர் தான் ஜெயிப்பார் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின. இதனால் நண்பர்கள் மூவரும் சோர்வுற்றனர். அதன் பிறகு நடந்த ஆலோசனையில், "கருத்துக்கணிப்பில் தோல்வி அடைவோம் என்றால் எதற்காக தேர்தலில் நிற்க வேண்டும். போட்டியிடாமல் ஒதுங்கி விடலாம்" என முதலாவது நண்பர் முடிவெடுத்து தேர்தலில் போட்டியிடவில்லை.
"இப்போது போட்டியிடவில்லை என்றால், தொண்டர்கள் அனைவரும் சோர்ந்து விடுவர். மேலும் பின் வாங்கி விட்டோம் என வெளியில் பேசத் தொடங்கி விடுவார்கள்" என யோசித்த இரண்டாவது நண்பர் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்து போட்டியிட்டார்.
கருத்துக்கணிப்பை பற்றி சிறிதும் கவலைப் படாத மூன்றாவது நண்பர்," என்னுடைய முயற்சியை தந்து போட்டியிடுவேன்" என முழு மூச்சில் களத்தில் இறங்கி வேலை பார்த்தார். நாட்கள் செல்ல செல்ல முதலாம் நபரின் தொண்டர்களும், இரண்டாம் நபரின் தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது நண்பரிடம் சேர்ந்து தேர்தல் வேலையை கவனித்தனர்.
வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தலில் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகின. மூன்றாவது நண்பர் மாபெரும் வெற்றி பெற்றார். இரண்டாம் நண்பர் தோல்வியடைந்தார். தேர்தலில் போட்டியிடாத தொண்டர்களின் நம்பிக்கை இழந்த முதலாம் நண்பர் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்.
ஆனால் தோல்வியே அடைந்திருந்தாலும் இரண்டாவது நண்பர் மிகவும் நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனெனில் போராடும் தைரியம் இருந்ததால், எதிர்காலத்தில் வெற்றி அடையலாம் என்ற நம்பிக்கை அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் வெகுவாக இருந்தது.
"மனிதன் இரண்டு சூழ்நிலைகளில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றான். ஒன்று அவன் ஒரு செயலை செய்யாமல் விடும்போது அல்லது ஒரு செயலை செய்து முடிக்கின்ற போது" என்பது சிந்தனையாளர் மார்க் ட்வெய்ன் கூறிய கருத்து.
பகல் மட்டுமே இருந்தால் வேலையின் காரணமாக ஓய்வு என்பது இருக்காது. அதே சமயம் இரவு மட்டுமே இருந்தால் அதிக ஓய்வு ஆபத்தாக முடிந்து விடும். ஆகவே இரவும் பகலும் இருந்தால்தான் உலகம் திறம்பட இயங்கும். மகிழ்ச்சியும், பிரச்சனையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மனதில் நிலை நிறுத்தி பிரச்சனைகளை கண்டறிந்தால் 'முன்னேற்றம்' நம் கண் முன்னே தெரிய ஆரம்பிக்கும்.