
வெற்றி என்பதன் பின்னணியில் முயற்சி ,உழைப்பு , ஆர்வம் இவைகளைக் கடந்து நேர மேலாண்மை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகின் பிரபலமான அமெரிக்க தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளரான எலான் மஸ்க் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் உலகில் பல தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கவும், முதலீடு செய்யவும் உதவியுள்ளார். சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்துக்களின் உரிமையாளரான எலான் மஸ்க் உலகின் மிகச் சிறந்த செல்வந்தர்களில் ஒருவராவார்.
இவர் வாரம் ஒன்றுக்கு 100 மணிநேரம் வேலை செய்வதாகவும் இந்த 100 மணிநேரத்தில் ட்விட்டர், ஸ்பேசெக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பனி என நாலு கம்பனிகளை நிர்வாகம் செய்வதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவித்தன. இந்த பணிகள் நிமித்தம் செயல்படும் நேர மேலாண்மைக்காக "பொமோடோரோ உத்தி" (Pomodoro Technique) எனும் உத்தியை பயன்படுத்துவதாக குறிப்பிடுகிறார் மஸ்க். அதென்ன உத்தி? நாமும் பார்ப்போம்.
பொமோடோரோ நுட்பம் என்பது 1980 களில் பிரான்செஸ்கோ சிரில்லோ எனும் இத்தாலிய பல்கலைக்கழக மாணவரால் உருவாக்கப்பட்ட நேர மேலாண்மை முறையாகும். அவர் தக்காளி (இத்தாலிய மொழியில் பொமோடோரோ) போன்ற வடிவிலான கடிகாரம் ஒன்றை பயன்படுத்தி அதன் மூலம் தன்னுடைய வேலை நேரத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வேலை செய்தார். எனவே தான் இந்த நுட்பத்திற்கு அந்த டைமரின் பெயரிடப்பட்டு "பொமோடோரோ டெக்னிக்" என்று பெயர் வந்தது.
2006 ல் சிரில்லோ இந்த உத்தியை "பொமோடோரோ உத்தி" எனும் பெயரில் மின் நூலாக இலவசமாக வெளியிட்டார். அது இருபது லட்சம் முறை தரவிறக்கபட்டது. அதில் ஒருவர்தான் எலான் மஸ்க். இதன் செயல்பாடு வழிமுறை என்ன?
நீங்கள் விரும்பும் பணியைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக வேலையாக இருக்கலாம் அல்லது வேறு எந்த பணியாகவும் இருக்கலாம். 25 நிமிடங்களுக்கு செல்போனில் ஒரு டைமரை செட் செய்துவிட்டு, அந்த வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இந்த 25 நிமிடங்களுக்கு எந்தவிதமான இடையூறும் அல்லது இடைவேளையும் இன்றி வேலையில் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும்.
இந்த 25 நிமிட வேலை நேரத்திற்கு தான் ஒரு "பொமோடோரோ" என்று பெயர். 25 நிமிடம் பணிக்குப் பின் 5 நிமிடம் கட்டாய இடைவெளி எடுத்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம், ஓய்வெடுக்கலாம் அல்லது வேறு விரும்பும் விஷயங்களைச் செய்யலாம். இது போன்ற நான்கு 25 நிமிட சுழற்சிகளுக்குப் பிறகு, 15-30 நிமிடங்கள் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறையில் கிடைக்கும் நன்மைகள்
பொமோடோரோ நுட்பம் ஒரு பணியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த உதவுவதன் மூலம் பணிகளை மிகவும் திறமையாக முடிக்க முடிவதால் அதிக உற்பத்தி திறன் பெறலாம். பணிகளுக்குத் தேவையான நேரத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிட இந்த நுட்பம் உங்களுக்கு உதவுகிறது.
வழக்கமான இடைவெளிகள் சோர்வு ஏற்படுவதைத் தடுக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். செயல்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய வெவ்வேறு டைமர் நேரங்களுடன் பரிசோதனை செய்யுங்கள். பணி அமர்வுகளின் போது அலைபேசி அறிவிப்புகளை முடக்குவது அல்லது அமைதியான பணியிடத்தைக் கண்டறிவது போன்ற கவனச் சிதறல்களை நீக்குங்கள். உற்பத்தித்திறன் மற்றும் நேர மேலாண்மையை மேம்படுத்துவதற்கு பொமோடோரோ நுட்பம் நிச்சயம் ஒரு உதவிகரமான கருவியாக இருக்கும்.
இப்படி ஒரு நாலைந்து பொமோடோரோக்களை பழக்கப்படுத்தினால் ஒரு இரண்டு மணிநேரத்திலேயே பெரிய விசயங்களை சாதிக்க முடியும் என்கிறார் மஸ்க்.
என்ன தக்காளி உத்தியை பயன்படுத்தி நாமும் வெற்றியை ருசிப்போமா?