
மனிதர்களின் வாழ்வில் நோய்கள், பொருளாதாரக் குறைபாடுகள், மனரீதியான பிரச்னைகள், உறவுச்சிக்கல்கள் என ஏராளமாக இருக்கின்றன. இவற்றால் மனிதர்கள் எளிதில் மனதளவிலும் உடல் அளவிலும் துவண்டு விடுகிறார்கள். அவர்களுக்கு Positive affirmations எனப்படும் நேர்மறை உறுதிமொழிகள் நன்றாகக் கை கொடுக்கும்.
நேர்மறை உறுதிமொழிகளின் பயன்கள்:
இவை தன்னம்பிக்கையை அதிகரித்து நேர்மறையான மனநிலையை வளர்க்க உதவுகின்றன. மனிதர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி பொருளாதாரப் பிரச்னைகளை சீர்படுத்தி, அவர்களின் மனதையும் வாழ்வையும் மாற்றும் சக்தி படைத்தவை.
நேர்மறை உறுதிமொழிகளை சொல்லும் விதமும், நேரமும்:
இந்த நேர்மறையான உறுதிமொழிகளை நம்பிக்கையோடு தினமும் சொல்லிக் கொண்டு வந்தால் ஏராளமான நற்பயன்கள் கிடைக்கும். காலையில் எழுந்ததும் நமது எண்ணங்கள் தூய்மையாக இருக்கும். உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். எனவே காலையில் கண்விழித்ததும் இவற்றை சொல்லலாம். நாள் முழுக்க மனிதர்களை உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வைக்கும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு நேர்மறையான உறுதிமொழிகளை சொல்வதன் மூலம் தெளிவான, குழப்பம் இல்லாத ஆழமான தூக்கம் கிடைக்கும். நாள் முழுவதுமே இவற்றை சொல்லலாம். மிகவும் மனம் சோர்ந்து இருக்கும்போது, தன்னை பற்றிய சுய சந்தேகம் எழும்போது, ஏதாவது பிரச்னைகள் நேரும்போது இவற்றை சொல்லலாம்.
வீட்டில் இருக்கும்போதும், வெளியில் அருகில் யாரும் இல்லாத போதும் இவற்றை வாய்விட்டு சொல்லலாம். கண்ணாடியைப் பார்த்து சொல்லும்போது பலன் அதிகமாக கிடைக்கும்.
வாய் வார்த்தையாக சொல்லிக்கொள்ளலாம் அல்லது எழுதவும் செய்யலாம். ஆனால் இந்த உறுதி மொழிகள் எப்போதும் நிகழ்காலத்தில்தான் இருக்க வேண்டும்.
இவற்றை திரும்பத் திரும்ப மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை சொல்லலாம். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வது நல்ல பலன்களை கிடைக்கச்செய்யும்.
உடல் ஆரோக்கியத்திற்கான நேர்மறை உறுதிமொழிகள். (இவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்).
1. எனது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கின்றன.
2. எனது உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
3. எனது உடல் நலம் மற்றும் நல்வாழ்வுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
4. நான் என் உடலை நேசிக்கிறேன். அதை நன்றாக பராமரிக்கிறேன்.
5. ஒவ்வொரு நாளும் என் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் செயல்களை செய்கிறேன்.
செல்வம் செல்வம் சேர்வதற்கான உறுதிமொழிகள்:
1. எனக்கு தொடர்ந்து வருமானம் அதிகரித்து வருகிறது.
2. நான் நேர்மையான வழியில் ஏராளமாக பணம் சேர்க்கிறேன்.
3. என் வாழ்வில் செல்வம் எளிதாகவும் ஏராளமாகவும் கிடைக்கிறது.
4. தினமும் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நியாயமான வழிகளில் பணம் வருகிறது.
5. நான் உயர்ந்த செலவந்தராக இருக்கிறேன்.
தன்னம்பிக்கை உறுதிமொழிகள்:
1. நான் என்னை மிகவும் மதிக்கிறேன்.
2. எனது தன்னம்பிக்கை என்னை தினமும் உயர்த்துகிறது.
3. ஒவ்வொரு நாளும் எனது தன்னம்பிக்கையால் நான் முன்னேறுகிறேன்.
4. என்னுடைய தன்னம்பிக்கையால் பிறரை வசீகரிக்கிறேன்.
உறவு ரீதியான உறுதி மொழிகள்:
1. என்னுடைய நட்பு வட்டமும் உறவு வட்டமும் பலமாக இருக்கின்றன.
2. எனது குடும்பத்தை மனதார நேசிக்கிறேன்.
3. எனது குடும்பத்தினரும் உறவுகளும் நட்புகளும் என்னை ஆழமாக நேசிக்கின்றனர்.
4. அலுவலகத்தில் சகநண்பர்களிடம் சிறந்த நட்புணர்வு பேணுகிறேன்.
வெற்றிக்கு வித்திடும் உறுதி மொழிகள்:
1. நான் தினமும் என்னுடைய செயல்களில் வெற்றியைக் காண்கிறேன்.
2. என்னுடைய இலக்குகளையும் கனவுகளையும் எளிதில் அடைந்து வெற்றி காண்கிறேன்.
3. நான் வெற்றியையும் செழுமையையும் மிக எளிதாக ஈர்க்கிறேன்.
4. எல்லா வழிகளிலும் வெற்றி என்னை வந்து சேர்கிறது
5. என்னுடைய சிறிய மற்றும் பெரிய வெற்றிகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்.