
இயற்கை ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்- இது ரூசோவின் கூற்று.
எந்தச் சூழ்நிலையிலும் எதை நினைக்கின்றோமோ எதைச் செய்கின்றோமோ அதுதான் நடக்கும்.
நல்லதை நினைத்தால் நல்லதுதான் நடக்கும். தீயவற்றை நினைத்தால் இதுதான் நடக்கும்.
ஒரு பாதையில் ஒருவன் நடந்து சென்று கொண்டு இருக்கிறான். போகும் வழியில் நல்ல பாதை, தீய பாதை என இரண்டு வழிகள் பிரிகின்றன.
இரண்டு பாதைகளும் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத்தான் செல்கின்றன. நல்ல பாதையில் சிறிது தூரம் அதிகம் செல்ல வேண்டும்.
தீய பாதை குறுகியது. சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம் எனவே, அவன் தீய பாதையில் பயணம் செய்தான். அவனது பயணத்தில் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தான். முடிவில் அவன் ஆரோக்கியம் இழந்து சோர்ந்து, மன வேதனையுடன் சேரவேண்டிய இடத்தை அடைந்தான்.
அப்பொழுதுதான் அவன் நிலையை உணர்ந்தான். தீய வழி எவ்வளவு மோசமானது. இதை முன்பே தெரிந்திருந்தால் நல்ல பாதையில் வாழ்ந்திருக்கலாம் என நினைத்தான்.
அவனுக்குப் பின்னால் வந்தவன், நல்ல வழியைத் தேர்ந்தெடுத்து, இனிமையாகப் பயணம் செய்து, வந்து சேர்ந்தான். அவன் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாய் இருந்தான். இருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
எந்த இலக்கை அடைவதாய் இருந்தாலும் 'குறுகிய புத்தியுடன் தீய வழியில் செல்லக்கூடாது. காலம் எவ்வளவு ஆனாலும் நேர் வழியில் சென்று சேர்வதுதான் முறையானது.
இதில்தான் மனநிறைவும். நிம்மதியும் கிடைக்கும். நாம் என்ன செய்தாலும், அந்த வினைகள் நம்முடன் நிழல்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நல்லதை நினைத்துச் செய்யும்பொழுது நன்மையே நடக்கிறது. இதைத்தான் செய்தார் வினை செய்தாருடன் என்கிறார்கள். நமக்கு எப்பொழுதும் நன்மை கிடைக்க வேண்டுமானால், நாமும் நல்ல எண்ணங்களையே நினைக்கவேண்டும்.
தீய எண்ணங்களுக்கு மனதில் எப்பொழுதும் இடம் தரக்கூடாது. நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்தால் நல்லபடியாகப் பயணம் இருக்கும்.
தவறான குறுக்குப் பாதையைத் தேர்தெடுத்து பயணம் செய்தால் தவறுக்கு பின் வருந்த நேரிடும். அதேபோல்தான் நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் மட்டுமே நல்ல வாழ்க்கையை அனுபவித்து வாழமுடியும்.
தீய எண்ணங்கள் மனதில் குடிபுகுந்துவிட்டால் தீய பலனைத்தான் அனுபவிக்க வேண்டும்.
அதே சமயம் தீயவர்களிடம் நட்புக் கொண்டுவிட்டால், அத்தகைய தீய பழக்கங்களும் ஒட்டி கொண்டு வாழ்க்கையை வீணாக்கிவிடும். கெட்டவர்களுக்கு ஆண்டவன் அனைத்தையும் கொடுப்பான். அதையே விரைவில் பறித்துக் கொள்வான். கடவுள் நல்லவர்களைச் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்.
கோபம். பொறாமை போன்ற தீயகுணங்கள் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்போது. அவை தீமைதான் செய்யும். இதை அனுபவத்தில்தான் உணரமுடியும்.
நமக்கு என்றும் பிறர் நன்மை செய்யவேண்டும் என நினைத்தால், நாமும் நன்மையையே நினைக்கவேண்டும். நன்மையை மட்டும் செய்யவேண்டும்.
வாழு வாழவிடு
பிறரை மகிழ்வித்து மகிழ்ச்சியாய் இரு. அதுதான் உண்மையான வாழ்க்கை ஆகும்!