

மனிதர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் எத்தனையோ எண்ணங்களை எண்ணுகிறார்கள். அவை இன்பம், இனிமை, துன்பம், துணிவு, நகைச்சுவை, அழுகை, அச்சம் என்று நவரசமும் கலந்ததாக இருக்கும்.
நல்ல நாள் சந்தோசம் தரும், கெட்ட நாள் அனுபவம் தரும், மோசமான நாள் பாடம் கற்றுத்தரும் எனவே எந்த நாளும் நமக்கு இனிய நாளே என்பதை மனதில் ஏற்றுவோம்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா நாட்களிலும் நல்லவைகளாகவோ அல்லது நம்மால் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாகவோ மற்றும் விரும்பி சுவைக்கக் கூடியதாகவோ அமைந்து விடாது. அதில் தோல்விகள், எதிர்பாராதவைகள், ஏமாற்றங்கள் ஏற்படுவது சகஜமே. அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் நம் வாழ்க்கைக்கு பயன்படும் விஷயம். அல்லது அதனால் ஏற்படும் விளைவுகளின் மறுபக்கம் என்ன என்பதை யோசித்தால் அடுத்து என்ன செய்தால் வெற்றியை எளிதாக எட்டிப் பிடிக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். இதற்கு ஆக்க ரீதியான பயிற்சி அவசியம் தேவை.
நல்ல விவரமானவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். பல புத்தகங்களை படித்து புரிந்து முடிவு எடுக்கலாம். அப்படி செய்வதால் இளமை காலத்தில் ஏற்பட்ட எத்தனையோ இழப்புகளை ஈடு கட்டி மனத்தெளிவு பெறலாம். ஒரு டம்ளரில் அரை டம்ளர் தான் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். நமக்கு தாகம் அதிகமாக இருக்கிறது. அப்பொழுது அதைப் பார்த்து அடடே.
அரை டம்ளர் தண்ணி தானே இருக்கிறது என்று அதை குடிக்காமலோ அல்லது குடித்து விட்டோ புலம்பினால் நமக்கு மகிழ்ச்சியற்ற மனநிலை தான் மிஞ்சும்.
அதையே மற்றொருவன் அந்த அரைக்குவளை தண்ணீரைக் கண்டு மகிழ்ந்து அது தாகத்தைத் தீர்க்க அந்த தண்ணீர் கிடைத்தது எண்ணி எண்ணி மகிழ்ந்து குடித்தான் என்றால், அவன் அடுத்த பணிக்கு ஆயத்தமாகிறான் என்று பெயர். இந்த நபர்களில் முன்னவரை போல வாழ எண்ணி மேலும் அரை டம்ளர் குவளையோ ஒரு குவளையோ மறுபடியும் பெறுவேன் அல்லது வெறும் தாகத்தை தீர்த்துக் கொள்ள நம்பிக்கையுடன் செயல்படுவேன் என்பவனே சிறப்பானவன். எதையும் பார்க்கும் விதம்தான் முக்கியம்.
அதனால்தான் வள்ளுவரும்
"கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண் என்று உணரப்படும்"
என்று கூறியுள்ளார். ஆதலால் முன்பு நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு எல்லோரிடத்திலும் மிகவும் எரிந்து விழுவது அல்லது ஆத்திரத்தை கொட்டுவது , சலிப்பும் விரக்தியுமடைந்து வாழ்க்கையை படிப்படியாக வெறுப்பது, தோல்வி மனப்பான்மையை சதா சர்வ காலமும் வளர்த்துக் கொண்டே வாழ்வது போன்றவைகளால் எந்த ஒரு மனிதனும் வளர்ச்சியோ முன்னேற்றமோ அடைந்து விட முடியாது.
இந்த எதிர்மறை எண்ணங்களை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நேர்மறை எண்ணங்களுக்குத் திரும்ப வேண்டும். அப்படி திரும்புவதற்கு எதையும் எப்படி பார்க்கிறோம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது நமது இன்பமும் துன்பமும். இதை மறவாமல் வாழ்வில் கடைபிடித்தால் எதையும் எப்போதும் வெல்லலாம். வெற்றித் திருமகள் நம் வாசலில் காத்திருப்பாள்.