சோர்வடையும் போது நீங்கள் செய்ய வேண்டிய அந்த 1 விஷயம் இதுதான்!

Self confidence
Self confidenceImage credit: AI
Updated on

எகிப்து பாலைவனத்தின் ஒரு பகுதியில் ஞானி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தின் போது சுழலும் காற்று திடீரென செல்வதை உணர்ந்தார். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்த அந்த சுழலும் காற்றிடம், "யார் நீ? எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறாய் என ஞானி கேட்டார்.

"நான் கொள்ளை நோயாக இருப்பதால் டமாஸ்கஸ் நகரத்திற்கு சென்று ஆயிரம் பேரை கொல்ல வேண்டும்" என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை; ஆகவே என்னை தடுக்காதீர்கள்! என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டது.

ஆறு மாத காலமாக டமாஸ்கஸ் நகர மக்களை கொள்ளை நோய் பாடாய்ப்படுத்தியதால், இருபதாயிரம் பேர் இறந்துவிட்டனர் என்ற சோக செய்தியும் ஞானிக்குக் கிடைத்தது. இந்நிலையில் ஞானி தியானத்தில் இருந்தபோது அந்த சுழல் காற்று மீண்டும் சென்று கொண்டிருந்தது.

சுழல் காற்றை நிறுத்தி, கொள்ளை நோயே! நீ ஏன் பொய் கூறினாய்? ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்பது தானே உனக்கு இடப்பட்ட கட்டளை. அதை விடுத்து இருபதாயிரம் பேரை கொன்று விட்டாயே! இது நியாயமா? எனக் கேள்வி கேட்டார்.

அதற்கு சுழற்காற்று, பொறுமையாக ஞானியே! நான் உண்மையிலேயே கொள்ளை நோயால் ஆயிரம் பேரை மட்டுமே கொன்றேன். ஆனால் அந்த நோயின் பீதியால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து விட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் எனக் கூறி சென்றது.

மனிதர்களின் மனங்களில் எழுதும் நம்பிக்கையை சார்ந்ததே வாழ்க்கையாகும். கொள்ளை நோய் ஒருவரை தாக்கினாலும் மற்றவர்களும் தன்னை தாக்கியதாக எதிர்மறையாக நம்பி அச்சத்தின் காரணமாக இறந்தவர்கள் தான் அதிகம்.

அச்சம் என்பது நம்பிக்கையின் எதிரியாகும். நம்பிக்கையை பலப்படுத்திக் கொண்டால், அச்சத்தை விரட்டி அடித்து தடைகளை உடைத்தெறியலாம். நமது பேராற்றலாக அமைவது நம் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையே.

இதையும் படியுங்கள்:
அறிவால் உலகை வெல்வது எப்படி? சட்ட மேதை அம்பேத்கரின் வைர வரிகள்!
Self confidence

ஒரு மனிதரின் திறமையை மிகத் துல்லியமாகவும் சிறப்பாகவும் தெரிந்து வைத்திருப்பவர் அந்த மனிதர் மட்டுமே. "நம்பிக்கையுடைய ஒருவர் ஆர்வம் மட்டுமே கொண்டிருக்க கூடிய 99 நபர்களுக்கு சமம்" என தத்துவ மேதை ஜான் ஸ்டூவர்ட் மில் கூறியுள்ளார்.

ஆகவே ஒவ்வொருவரும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, சில சமயங்களில் நம்பிக்கை சோர்வடையும்போது இறை நம்பிக்கை வைத்து செயல்படும் போது வெற்றியின் வாசல்களுக்கு கட்டாயம் சொல்வோம்.

logo
Kalki Online
kalkionline.com