வார்த்தைகள் தோற்கும் இடத்தில் மௌனத்தால் வெல்வது எப்படி?

அதிகம் பேசுவதா, அளவாக மௌனமா? தேவையற்ற வார்த்தைகள் எப்படி சிறு விஷயங்களைப் பெரும் பிரச்சினையாக்குகின்றன, நிம்மதியான வாழ்க்கைக்குத் ‘அளவான பேச்சு’ ஏன் அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை
Silence power - A Silent Woman
Silence powerImage credit: AI
Updated on

நம்மில் சிலர் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். வேறு சிலர் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவர். வேறு சிலரோ தேவைப்படும் சமயங்களில் கூட வாயைத் திறக்க மாட்டார்கள். நாம் யார் ? நமது ஆற்றல் என்ன? என்பதை நமது பேச்சே பிறருக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

அதிகம் பேசுபவர் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தனது நண்பர்களைப் பற்றியும் என எல்லாவற்றையும் எல்லோரிடமும் ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்துக் கொண்டே இருப்பார். குறைவாக பேசுபவர் தன் சம்பந்தப்பட்ட எதையும் எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் தெரிவிக்காமல் ரகசியம் காப்பார். இதனால் அவர் யார் எப்படிப்பட்டவர் அவருடைய பின்புலம் என்ன என்பதை ஒருவராலும் தெரிந்து கொள்ளவே முடியாது. இது அவருக்கு பலமும் கூட.

சிலர் தான் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பார். தனக்கு எதிரில் நின்று பேசுபவர் தனது கருத்தைச் சொல்ல முன்வந்தாலும் அவரைப் பேசவிடாமல் தடுத்து தானே பேசிக்கொண்டே இருப்பார். தான் சொல்வதே சரி என நினைப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பிறர் கருத்து அது சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவராக இருப்பார்.

வேறு சிலரோ தன்னைச் சுற்றி நிற்பவர்களை பேச விட்டு தான் மட்டும் எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதியாக எல்லாவற்றையுமே கேட்டுக் கொண்டே இருப்பார். கடைசி வரை தன் கருத்தை வெளியிடவே மாட்டார். பிரச்சினை உருவாவது போலத் தெரிந்தால் சரியான சந்தர்ப்பத்தில் அங்கிருந்து நாசூக்காக நகர்ந்து சென்று விடுவார். இதனால் அவர் எல்லோருக்கும் நல்லவராக இருப்பார்.

சிலர் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் அவருடைய குறைகளைப் பற்றி பேசியவண்ணம் இருப்பார். அந்த “மற்றவர்” சம்பந்தப்பட்டவரிடம் சென்று ‘அவர் உங்களைப் பற்றி இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார்’ எனச் சொல்லிவிடுவாரே என்ற எண்ணம் துளிகூட இல்லாமல் பேசி விடுவார். இந்த சந்தர்ப்பத்தில் உண்மையைச் சொன்னவர் கெட்டவராகிவிடுவார். உண்மையைச் சொன்னவரைப் பற்றி சம்பந்தப்பட்டவரிடம் சொன்னவர் நல்லவராகிவிடுவார்.

வேறுசிலர் ஒருவர் சொன்ன கருத்தோடு தான் சொல்லவிரும்பும் விஷயங்களைச் சேர்த்து அதை ஒரு கதைபோலாக்கி பிறரிடம் சொல்பவர்களும் உண்டு. இதில் இரண்டாவது நபர் தான் சொல்ல வந்ததை முதல் நபர் சொன்னதுபோலவே சொல்லி தன் காரியத்தை சாதித்துக் கொண்டு நல்ல பெயரையும் தட்டிக் கொண்டு சென்று விடுவார்.

ஒருசிலர் ஒருநபரைப் பற்றிய ஒரு கருத்தை பொதுவெளியில் தெரிவித்து அது அந்த நபரைச் சென்றடைந்து அவர் வந்து விசாரிக்கும் போது “நான் உங்களைப் பற்றி அப்படிச் சொல்லவே இல்லையே” என்று சத்தியம் செய்யும் வழக்கம் உடையவராக இருப்பார்.

இதையும் படியுங்கள்:
ஏன் நம்மால் சில காரியங்களை முடிக்க முடிவதில்லை? Motivation-க்கும் Inspiration-க்கும் உள்ள அந்த நுட்பமான வித்தியாசம்!
Silence power - A Silent Woman

நம் அன்றாட வாழ்வில் பல சிறு பிரச்சினைகள் பிரம்மாண்டமான மரமாக வளர ஆணிவேராக அமைவது ஒருவர் பேசும் “தேவையற்ற பேச்சுக்களே” என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். பேசாமல் இருக்கவும் கூடாது. பேசிக்கொண்டே இருக்கவும் கூடாது. தேவையான சமயத்தில் அளவாகப் பேசப் பழக வேண்டும். இது ஒரு பெரிய கலை என்பதே உண்மை.

பேசிய வார்த்தைகளைவிட பேசாத வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். ஒருசிறு வார்த்தை சிலருடைய மனதைப் புண்படுத்தி பெரிய சண்டையில் ஏன் கொலையில் கூட முடிவதையும் நாம் பார்க்கிறோம்.

யாராவது உங்களிடம் கோபமாகப் பேசினால் நீங்கள் அமைதியாக அந்த இடத்தைவிட்டுக் கடந்து சென்று விடுங்கள். பிரச்சினை அதோடு முடிந்து விடும். பதில் வார்த்தை பேசி பிரச்சினையைப் பெரிதாக்குவானேன். பின்னர் அதைத் தீர்க்க இங்கும் அங்கும் அலைவானேன்.

வாரத்தில் ஒருநாள் யாரிடமும் பேசாமல் இருந்து பழகுங்கள். இது உங்கள் எண்ணங்களை வலிமையாக்கும். உங்களுக்கு சமுதாயத்தில் நற்பெயரைப் பெற்றுத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com