

LIVE! WORK!! CREATE!!!
உணர்வூக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பலரும் குழம்பிக் கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேற இரண்டும் தேவை தான்!
உணர்வூக்கம் என்பது வெளிக்காரணங்களால் ஏற்படுவது. உத்வேகம் என்பது ஒருவனின் உள்ளுக்குள் ஏற்படும் எழுச்சி!
உணர்வூக்கத்தை PUSH என்று சொன்னால் உத்வேகத்தை PULL என்று சொல்லலாம்.
ஒரு பெரிய விருந்துக்குப் போகிறீர்கள். அங்கு பரிமாறப்படும் சுவை மிகுந்த பல்வேறு உணவு வகைகள் உங்களை மிகவும் கவர்கிறது. விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் அதைப் புகழ்கிறார்கள். அப்போது உங்கள் மனதில் ஒரு பெரும் எழுச்சி ஏற்படுகிறது. அடுத்த வாரம் நீங்கள் நடத்தப் போகும் விருந்து இதே போல் அல்லது இதை விட பிரமாதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் ஏற்படுகிறது. அதற்கான திட்டமிடலை உடனே ஆரம்பிக்க மனம் துடிக்கிறது. வெற்றி கண்ட போது அதற்குக் காரணமாக அமைந்திருந்தது உங்கள் உத்வேகம் – INSPIRATION - தான்!
தியான வகுப்பிற்கோ, யோகா பயிற்சி நடக்கும் இடத்திற்கோ நீங்கள் நண்பருடன் செல்கிறீர்கள். அங்கு அதனால் ஏற்படும் பயன்களைப் பற்றி ஒருவர் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அவரால் பயிற்சி பெற்ற பலரும் தாங்கள் பயிற்சி பெறுவதற்கு முன்னர் இருந்த நிலையையும் பயிற்சி பெற்ற பின்னர் தங்கள் வாழ்க்கை நல்ல விதமாக மாறி பெற்ற பயன்களையும் உணர்ச்சி பொங்கச் சொல்கிறார்கள். அப்போது நீங்கள் தூண்டப்படுகிறீர்கள். அதே பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பிக்கிறீர்கள். இது ஏற்படுவது உணர்வூக்கத்தினால். இது தான் MOTIVATION!
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டு இரண்டையும் பெற எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டியது தான்!
உணர்வூக்கம் ஏற்பட்டவுடன் ஒரு திட்டமிடல், பாதையை வகுத்தல், தேவையானவற்றைத் திரட்டல், செயலில் ஈடுபடுதல் என்ற ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கான பாதை தேவை.
ஆனால் உத்வேகமோ கண நேரத்தில் உங்கள் உள்ளத்தை ஆட்கொண்டு விடும். பரபரப்பூட்டும் இதை உள்ளம் என்னும் குடத்தில் முழுவதுமாக நிரப்பிக் கொள்ள வேண்டியது தான்!
உணர்வூக்கம் பெற ஏராளமான சுயமுன்னேற்ற வகுப்புகளும், பயிற்சிகளும் உள்ளன. அவற்றில் சேர்ந்து முன்னேறலாம்.
உத்வேகம் பெறவோ வெற்றி அடைந்தவர்களுடன் இணக்கமாக இருந்து அவர்களுடன் பழகினாலே போதும்.
உணர்வூக்கமோ அல்லது உத்வேகமோ எதைப் பெற்றாலும் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
முடியவே முடியாத ஒரு பயணம் நீங்கள் ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத ஒரு பயணம் தான்!
ஒரு வருடம் உங்கள் குறிக்கோளை நினைத்துக் கொண்டே இருப்பதை விட அதை நோக்கி ஒரே ஒரு அடி எடுத்து வைப்பது ஆயிரம் மடங்கு மேல்!
நேற்றைய நாள் நேற்றோடு போகட்டும். நாளைய நாள் தாராளமாக வரட்டும். இதோ இன்றைய நாளில் நான் என் வேலையை உடனே தொடங்குகிறேன்.
ஒரு மரத்தை நட்டுப் பலன் பெற மிக சிறப்பான காலம் இருபது வருடங்களுக்கு முன்பாகும். அடுத்த நல்ல நேரம் இன்றே, இப்போதே தான்!
என்ன தொடங்கலாமா, உணர்வூக்கத்துடன், உத்வேகத்துடன்!
வாழ்த்துக்கள்!