
கோபம் இந்த மூன்று எழுத்து நமக்கு எவ்வளவு இழப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா உறவுகளில் நண்பர்களில் பணியாற்றும் இடங்களில் ஏன் பல சமயங்கள் இந்த சமுதாயத்தோடு கூட கோபம் நமக்கு இழப்புகளை சம்பாதித்து சரி கோபப்படாமல் எப்படித்தான் வாழ்வது அது ரொம்ப சுலபம்தானே!
1.ஏன் எனக்கு கோபம் வருகிறது?
உங்களுக்குக் கோபம் தரும் விஷயங்கள், வெளிப்படுத்தும் முறைகளைக் கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக முயற்சியெடுத்துப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இவை, உங்கள் கோபத்தின் முதல் அடையாளங்கள். இவை உங்களுக்குக் கோபம் வரும் நேரத்தில், நாம் கோபமடையப் போகிறோம் என்ற சிக்னலைத் தரும். இந்த விஷயங்களையும், அதை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாக மனதில் பதிய விடுங்கள். சில வாரப்பயிற்சியில், உங்கள் மூளை அவசியமானபோது அந்தக் கட்டளைகளைத் தர ஆரம்பித்துவிடும்.
2.நான் என் கோபத்தை எப்படிக் காட்டுகிறேன்?
கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய முறைகளைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். எல்லா சமயத்திலும் ஒரே மாதிரியான முறை கோபத்தை வெளிப்படுத்த பலனளிக்காது. எந்தவிதப் புறவெளிப்பாடுமில்லாமல் தங்கள் கோபத்தை புரிய வைத்திருப்பவர்கள், ஆர்ப்பாட்டமாக அதை வெளியிட்டவர்களைவிட சாதிப்பதைப் பார்க்கிறோம் அல்லவா? அதனால், இந்தப் பயிற்சி அவசியமாகிறது.
3.யார் மீதான கோபம்?
பல சமயங்களில் கோபப்படுபவர்களும், கோபத்திற்குள்ளாகிறவர் களும் செய்யும் தவறான ஒரு விஷயம், சரியான நியாயமான கோபத்தை தவறான இடத்தில் வெளிப்படுத்துவதுதான். நிர்வாகத்தின் தவறுக்குக் கூட வேலை செய்பவரிடம் தனிப்பட்ட முறையில் கோபத்தைக் காட்டுபவர்களையும், வாங்கிய பொருளின் குறைவான தரத்திற்காக விற்பனையாளர்களிடம் கோபம் கொள்பவர்களையும் நாம் பல முறை பார்க்கிறோம்.
அதனால், கோபப்படும் விஷயம் நியாயமானதாகவே இருந்தாலும் அதை நாம் சரியான இடத்தில் சரியாகக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல் நம்மீது காட்டப்படும் கோபமா அல்லது நம்மை பிரதிநிதியாகப் பாவித்து நமது நிறுவனத்தின் மீதா என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.
4.வந்த கோபத்தை எப்போது நிறுத்த வேண்டும்?
உங்களைப் போலவே உங்கள் கோபத்தால் பாதிக்கப் பட்டவருக்கும் கோபம் வரும் என்பதை உணர்ந்தே செயல்படுங்கள். உங்கள் பதவி, முடிவெடுக்கும் அதிகாரம், பணம் கொடுக்கும் பொறுப்பு போன்றவற்றால் அவர் உங்கள் கோபத்தின் வெளிப்பாட்டினைப் பொறுத்துக் கொண்டிருப்பதால், நீங்கள் கட்டுப் பாட்டினை இழக்கும் அபாயமிருக்கிறது. அவர் தனது கோபத்தை உங்கள் மீது பின்னால் காட்டக் காத்திருக்கும் நிலையை உருவாக்குகிறீர்கள். அதனால், கோபம் வரும் தருணத்தில் மனதளவில் ஓர் ஒத்திகை பார்த்துக்கொண்டு தக்க முறையில் அதை வெளியிட்டு சரியான நேரத்தில் நிறுத்தி விடுங்கள்.
5.வரும் கோபத்தை தடுப்பது எப்படி?
கோபம் என்பது மனதையும், எண்ணங்களையும் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அந்த உணர்வின் வெளிப்பாடு உடலிலும் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது. நாளமில்லாச் சுரப்பிகளில் இருந்து அட்ரிலின் வெளிப்படுகிறது. அதாவது,சக்தி வெளியாகிறது.
இது பல சமயம் எதிர்மறை சக்தியாக விஸ்வரூப மெடுத்து வன்முறையாக வெளிப்படுகிறது. கோபப்பட நேரிடும் போது இந்தச் சக்தியை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தினால் அது உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய விஷயமாகிவிடும் என்பதால் அந்தச் சக்தியை நேர்மறையாக்கும் முறை ஒன்றை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அது தியானம், பத்து வரை (இப்போது 90 வரை என்கிறார்கள்) எண்ணுவது, இசை கேட்பது, ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது, மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பது இப்படி எது எளிதோ, எது பலனளிக்கிறதோ அதைப் பயிற்சி செய்து பழகுங்கள்.
இந்தப் பயிற்சிகளைச் செய்து, கோபத்தை நிர்வகிக்க அறிந்து கொண்டவர்கள் நல்ல நிர்வாகிகளாக வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், தனி மனிதனாக அவர்களது வாழ்க்கையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்களும் முயற்சியுங்களேன்.