புகழ்ச்சியே மகிழ்ச்சி என்று வாழ்பவர் பலர். புகழ்ச்சி என்ற மாய வலையில் சிக்கிய நினைத்தால் கூட வெளியே வர முடியாமல் தவிப்பவர் பலர். தானே உலகத்தை விட பிரதானம் என்று மனப்பான்மையே புகழுக்கு ஆசைப்பட வைக்கிறது. புகழும் ஒருவித போதைதான். புகழ் என்ற ஆபத்தான பாதை என்பதை வரலாறு திரும்பத் திரும்ப நம் காதில் கிசுகிசுக்கிறது.
தன் பெயர் நிலை பெறவேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் போர் என்ற பெயரில் வன்முறையையும் கொலைகளையும் நிகழ்த்தியவர்கள் பலர். புகழ் ஒருவரின் புத்தியை மழுங்கடித்து விடும். அந்தக்காலத்தில் பிரம்மாண்டமான படைப்புகளைப் செய்தவர்கள் தங்களுக்கும் பாராட்டோ புகழோ கிடைக்கும் என்று செய்யவில்லை.
இன்று நாம் பார்த்து மகிழும் சிற்பங்களை யார் செதுக்கினார் என்று யாருக்கும் தெரியாது. அவற்றையெல்லாம் படைக்கும் மகிழ்ச்சிக்காகவே படைத்தார்கள். மக்களும் சில நேரங்களில் பரபரப்புகளில் சிக்கி உள்நோக்குடன் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். அவரை தாமஸ் க்ரீன் என்பவர் மயிலிறகை போர்த்திய காகம் என்று வசை பாடினார். ஆனால் காலம் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
பழங்காலத்தில் நடந்த கதை இது. சொர்ணபுரி ஜமீன்தார் தன்னை கண்ணாடி முன் அழகு பார்த்தவர் தன் மனைவியிடம் தான் அழகா அல்லது ரத்னபுரி ஜமீன்தார் அழகா எனகேட்க நிச்சயமாக நீங்கள்தான் என்றார்மனைவி. சொர்ணபுரி ஜமீர்தாருக்கு உண்மையாக ரத்னபுரி ஜமீன்தார்தான் அழகு என்று தெரியும். பிறகு பணிப்பெண்ணிடம் அதே கேள்வியைத் கேட்டார். அவர் நீங்கள் மலை அவர் மடு என்றாள்.
தன் விருந்தினர் ஒருவரிடம் கேட்க அவரும் இவர்தான் அழகு என்றார். சில நாட்களுக்குப் பிறகு ரத்னபுரி ஜமீன்தாரை சந்தித்தார். இவ்வளவு தேஜஸாக இருக்கிறாரே. தான் அந்த அளவு இல்லை என புரிந்தது. அந்நாட்டு அரசரிடம் நான் ரத்னபுரி ஜமீந்தார் அளவுக்கு அழகில்லை ஆனாலும் என் மனைவி பணிப்பெண் மற்றும் விருந்தினர் ஆகிய மூவரும் நான்தான் அவரைவிட அழகு என்றார்கள். என் மனைவி என்னை நேசிக்கிறார். அதனால் அப்படிச் சொன்னாள். பணிப்பெண் பயத்தினால் அப்படிச் சொன்னாள். விருந்தினர் என்னால் காரியம் ஆக வேண்டிய அப்படிக் கூறினார். அரசரே எல்லா அதிகாரிகளும் உங்களிடம் பயந்து கொண்டிருக் கிறார்கள். உங்களிடம் காரியம் ஆக வேண்டியவர்கள். அதனால் உங்களை புகழ்கிறார்கள் என்றார். உடனே அரசர் தன் ஆட்சியில் நடக்கும் குறைகளை நேருக்கு நேர் சுட்டிக் காட்டுபவருக்கு முதல் பரிசு அளிக்கப்படும் என்ற ஆணை பிறப்பித்தார்.
மேலும் எழுத்து மூலமாகத் தெரிவிப்பவர்களுக்கு இரண்டாம் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். சில நாட்களிவேயே அவரைத் தேடி வந்து நிர்வாகத்தில் இருக்கும் குறைகளை எல்லோரும் கூற ஆரம்பித்தனர். அவரும் குறைகளைக் களைய ஆரம்பித்தார். ஓராண்டுக்குப் பிறகு பரிசு பெறவும் சுட்டிக்காட்டும் எந்த குறையும் இல்லாத அளவுக்கு நிர்வாகம் நிமிர்ந்து நின்றது.
நாம் மகிழ்ச்சி பெறுவதற்கு செயற்கையான புகழ்ச்சிகளை எதிர்பார்த்தால் குறைகள் பெருகிக் கொண்டே இருப்பத்தோடு நம்மைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாகவும் நமக்குக் கற்பனை ஏற்படும். உண்மையான புகழ் நம்மைத் தாண்டியது. புகழ் திருப்புகழ் ஆக ஒளிர வேண்டுமே தவிர தெருப்புகழாக மங்கக் கூடாது. நம்முடைய புகழ் கேட்கும் செவிகளில் எல்லாம் தேனைப் பாய்ச்சும் தெய்வீக சக்தியாக மாறும்போது அனைவரும் இன்புற்றிருக்க கதவுகள் அகலமாகத் திறக்கும்.