
இந்த உலகத்தில் பேருக்கும் புகழுக்கும் மயங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது. அந்த எதிர்வினை பலருக்கு பயன்படும்போது அச்செயலை செய்தவர் சுற்றியிருப்பவர்களின் பெயருக்கும் புகழுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப் போகிறார். நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் நட்புகளிடமும் நாம் வளர்ச்சியை ஏற்படுத்த விரும்பினோமானால், அதற்கு முதலில் நாம் அவர்களது நிறைகளை சுட்டிக்காட்டப் பழக வேண்டும்.
எப்பொழுதுமே நம்மை சுற்றி இருப்பவர்களின் கருத்துக்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு.
ஒரு நாள் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் மாணவர்களுக்கு இரண்டு சோதனைகளை நடத்தினார். முதல் சோதனையில் ஒரு வினாத்தாளை மாணவர்களிடம் கொடுத்து, "நாம் இந்த கணக்கு பாடத்தை பலமுறை படித்து இருக்கிறோம். ஒருவேளை கேள்விகள் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட, இதுபோன்ற மாதிரிகளில் நாம் நிறைய கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்திருக்கிறோம். எனவே உங்களிடம் உள்ள திறமையை மையமாக வைத்தே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் பொறுமையாக நன்கு யோசித்து விடைகளை எழுதி நல்ல மதிப்பெண் பெறுங்கள்," என்று கூறி தேர்வினை தொடங்கி வைத்தார்.
சிறிது நேரத்திற்குப்பின் அவர் தேர்வு வைத்த விடைத்தாளை திருத்தியபோது, பெரும்பாலான மாணவர்கள் அதிக அளவிலான மதிப்பெண்கள் பெற்று இருந்தனர்.
சிறிது நாட்கள் கழித்து மீண்டும் ஒரு வினாத்தாளை கொடுத்து, "குழந்தைகளே, போன வருடமே இந்த பாடத்தின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. எனவே இந்த வருடமும் இந்த வினாத்தாள் கடினமாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதற்குரிய வினாக்களுக்கு விடை அளிக்கும் அளவுக்கு உங்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் முடிந்தவரை சிறப்பாக பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்," என்று கூறி தேர்வினை தொடங்கி வைத்தார். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை திருத்தியதில், பெரும்பாலான மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர்.
நாம் ஒருவருடைய மனநிலையை எந்த குறிக்கோளோடு தயார்படுத்துகிறோமோ அதைப்பொருத்தே அவருடைய மனநிலையும் மாறுகிறது. ஒருவரிடம் இருக்கும் நிறைகளை சுட்டிக்காட்டும் போது இயல்பாகவே அவர்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரித்து ஒரு தேடல் உருவாகிறது. அது மிகவும் கடினமான பிரச்சனைகளுக்கு கூட தீர்வுகளை தேடும் மனநிலையை உருவாக்குகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள திறமை மற்றொருவரால் சுட்டிக்காட்டப்படும் போது அது மிகவும் பலமான ஒன்றாக மாறி விடுகிறது.
ஆனால் அதுவே ஒருவரிடம் இருக்கும் இயலாமையை, குறையை சுட்டிக்காட்டி ஒரு வேலையை முன்னிறுத்தும் போது, இயல்பிலேயே அவர்களுடைய மனமும் நம்பிக்கையும் பலவீனப்பட்டுப் போகிறது. இதனால் அவர்கள் தங்களால் ஓரளவுக்கு நன்கு செய்ய முடிந்ததை கூட முறையாக செய்யாமல் அரைகுறையாக விட்டு விடுகிறார்கள். மேலும் அது அவர்களின் மனநிலையையும் பலவீனமாக மாற்றி ஒருவித அச்சத்தையும் பதட்டைத்தையும் கொண்டு வந்து விடுகிறது.
எனவே புகழ்ச்சி எனும் அற்புதமான இந்த மாமருந்துதான் ஒருவரை தொடர் வெற்றி பாதையில் பயணிக்க வைக்கும் சிறந்த டானிக் ஆகும்.