
மனித இயல்பின் முத்தான தத்துவமே புகழ்ச்சிதான். வாழ்வில் நாம் மற்றவர்களை மனதார புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித வளர்ச்சிக்கு ஒரு காயகல்பம் நீங்கள் மகிழ்வாகப் பாராட்டுகின்ற போது புகழ்கின்றபோது அவர்களது சிறப்பும் மேன்மையும் உங்களின் சொத்தாகி விடுகிறது.
பெற்றோர்கள் தங்களது மழலைகளைப் புகழவேண்டும். உற்சாகத்தால் குதித்தோடி முன்னேற்றப் பாதையில் முதலாவதாக நிற்பார்கள். கணவன்மார்கள் மனைவியை புகழுங்கள். புகழ்ச்சியை சந்தையிலே காசு கொடுத்தா வாங்கப் போகின்றீர்கள்? மனைவியின் சமையலில் உப்பு இல்லாவிட்டாலும் அருமையான சமையல் அற்புதமான ருசி என வாயாரப் புகழ்ந்து பேசுங்கள். உடுத்தியுள்ள ஆடை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அழகோ அழகு என பாராட்டுங்கள். உங்கள் குடும்பத்தில் விம்மலுக்கும் விரிசலுக்கும் இடமே இருக்காது.
புகழ்ச்சி என்பது போதைக்கு ஒப்பானது. தவறான வழிக்கு ஒருவனை அழைத்துச் செல்லக்கூடிய பாராட்டுதலைத் தவிர்த்து ஆக்க வழிக்குச் செல்ல அவனிடம் உள்ள ஒரு சில நல்ல குணங்களை பெரிதுப்படுத்திப் புகழ்ந்து உற்சாகப்படுத்துங்கள். உங்களது பாராட்டு அவனைத் திருத்தும். அவனது தீய எண்ணத் தீர்ப்புகள் கூட திருத்தி எழுத உதவும்.
பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் எதிர்பார்த்து ஏங்காத மனிதர்கள் இந்த வையகத்தில் யாருமே இல்லை.
ஒன்றிரண்டு பேர்கள் இருக்கலாம். அவர்கள் மகாத்மாக்கள்.
மருத்துவத்துறையில் இன்றைக்கு மன இயல் அடிப்படையில் நோயாளியின் நோயைக் குணப்படுத்த கையாளப்படுகின்ற உத்திகளுள் "புகழ்ச்சி" ஒன்று.
நாம் பிறரை மகிழ்வாக புகழ்கின்றபோது நம்மிடம் உள்ள கசப்பும் காழ்ப்பும். வெறுப்பும் உப்பாய் கரைந்து போகிறது. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க புகழ்ச்சி துணையாக வருகின்றது. நாம் வெற்றி பெறுவதற்கு நமது உள்ளத்திற்கு புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் கொடுக்கின்றது. உங்கள் மீது நீங்களே வெளிச்சம் பாய்ச்சுவதை விட பிறரை வாழ்த்தும்போது நீங்கள் வெளிச்சத்தில் பிறருக்கு பிரகாசமாகத் தெரிகின்றீர்கள்.
புகழ்ச்சி என்பது கொடுக்கப்படுகின்ற செயல் "பெறுவதைவிட கொடுப்பது ஆசிர்வதிக்கப்பட்ட செயல்" என்கிறது விவிலிய வேதம்.
வெற்றி ஆனாலும் தோல்வி ஆனாலும் மனத்தின் ஆற்றலைப் பொறுத்து அமைவதைவிட, மனோபாவ நிலைகளைப் பொறுத்தே அது அமையும்.
புகழ்ச்சியும், பாராட்டுதலும் உங்களிடமே உள்ள ஔவையின் அருநெல்லிக்கனி வாரிவழங்குங்கள்.
ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க இயலுமோ அந்த அளவுக்கு அவனது மகிழ்ச்சியை கட்டுக்குள் கொண்டு வருகிற ஆற்றலும் பயிற்சியும் மனதிற்குத் தேவை.
மன அளவிலேயும் உணர்ச்சி பூர்வமாகவும் சின்னஞ் சிறிய செய்திகள் மனம் உளைச்சலில் ஆழம் புதைத்து வெளிவர இயலாதுப் போகிறது. அவ்வாறு தடுமாறும்போது புகழ்ச்சியும் பாராட்டுதலும் உங்களை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வரும் என்பது உறுதி.
மகிழ்ச்சியை அறுவடை செய்வதற்கு இந்த பாராட்டுதல் உரமாக அமையும். ஏமாற்றத்தின் விளைவாக உங்கள் மனத்தில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள ஒரு பயஉணர்ச்சியை போக்க வல்ல வடிகால் புகழ்ச்சி.
மனத்தினுள் இருண்ட சோக மேகம் கல்விக் கொண்டதாலேயே ஒரு கதவு மூடிக் கொள்ளும்போது மற்றொரு கதவு திறக்கும் என்பது உறுதி. திறந்து வைக்கும் வலிமை பிறரது பாராட்டுதலில் இருக்கும்.
ஆகவே புத்துணர்ச்சி கொடுக்கும் புகழ்ச்சி என்ற அருமருந்து தெவிட்டாதுக் கொடுங்கள்.