

அன்றாடம் எல்லார் வீட்டிலேயும் இந்த குக்கர் இல்லை என்றால் வேலையே ஆகாது. அதுவும் அவசரமா ஆபீசுக்கு கிளம்பும்போது நமக்கு கை கொடுப்பது இந்த குக்கர் தான். ஏனென்றால் இந்த குக்கரில் சமைக்கும் போது விரைவிலேயே வெந்துவிடும். எரிவாயு குறையும் மற்றும் நேரமும் குறைவாகத் தான் எடுத்துக் கொள்ளும்.
சரி குக்கரில் நமக்கு நன்மை கிடைக்கிறது ஓகே, ஆனால் அந்த குக்கரை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த குக்கரின் மூலமாக ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தது உண்டா (Pressure cooker life lesson)?
குக்கரை பொறுத்தவரையில் தலைப்பகுதியில் அதிகமான அழுத்தம். அடிப்பகுதியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தனை அழுத்தங்களுக்கும் அனலுக்கும் இடையில் குக்கர் இருந்தபோதிலும், அது அழகாக சிரித்துக்கொண்டே சத்தமாக விசில் அடிக்கிறது. அப்படி அந்த குக்கர் விசில் அடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அழுத்தத்தின் காரணமாக குக்கர் வெடித்து விடும். எத்தனை ஒரு அழகான விளக்கம் இந்த குக்கரில் இருக்கிறது.
எத்தனை பெரிய இன்னல்கள் இருந்த போதிலும் தலைக்கு மேலே பிரச்னைகள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் எல்லோரிடமும் சிரித்து பேச வேண்டும் என்பதுதான் இந்த குக்கரின் மூலம் நமக்கு கிடைக்கும் விளக்கமாகும்.
குக்கரின் விசிலிலோ அல்லது ரப்பரிலோ அல்லது மூடியிலோ ஏதாவது அடைசல் இருந்தால் குக்கரில் இருக்கும் அழுத்தத்தின் காரணமாக விசில் வராமல் குக்கர் வெடித்து விடும்.
அதைப் போலவே, நமக்கு இருக்கும் பிரச்னைகளையும் குழப்பங்களையும் மனதில் அடைத்து வைத்துக் கொண்டு எப்போது குழம்பிக் கொண்டே இருந்தால் நமக்கும் ஹார்ட் அட்டாக் வரலாம், மூளை ரத்தக் கசிவு வரலாம், இல்லையென்றால் பக்கவாதம் வரலாம். எது வேண்டுமானாலும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
மனதை எப்போதும் பாரமாக வைத்துக் கொள்ளாதீர்கள். கூடியவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும், நண்பர்களிடமும், அலுவலகத்தில் வேலை புரியும் சக ஊழியர்களிடமும் மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரித்துப் பேச முயற்சி செய்யுங்கள்.
அவ்வாறு சிரிக்கும் போது உங்கள் உள்ளே இருக்கும் அழுத்தமானது வெளியே ரிலீஸ் ஆகிவிடும். எப்படி குக்கரில் விசில் வந்தால் அதன் உள்ளே இருக்கிற அழுத்தம் ரிலீஸ் ஆகிறதோ அதைப்போலவே தான். உங்கள் உள்ளே இருக்கும் அழுத்தங்களும் ரிலீசாக ஆரம்பித்தாலே மனம் லேசாகிவிடும்.
இனிமேல், நீங்கள் பிரச்னைகள் காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, உங்கள் குக்கரை ஆசையாகப் பாருங்கள். அதிலிருந்து வரும் விசில் சத்தத்தை கேளுங்கள். அவ்வாறு கேட்கும் போது கண்டிப்பாக உங்களுக்கும் குக்கரை போலவே சிரிக்க தோன்றும்.