

பலர் நிம்மதியாய் அமைதியாய் வாழ்கிறாா்கள். சிலர் நிம்மதி இழந்து வாழ்கிறாா்கள். நிம்மதியைத்தேடி எங்கே போவது?
அது தொலைந்துவிட்டதா அல்லது தொலைத்து விட்டோமா அதற்கெல்லாம் சுயபரிசோதனைதான் தேவை. அதே நேரம் நாம் நமது வாழ்வில் எதைத்தொலைத்தாலும் அமைதியை மட்டும் தொலைத்துவிடக்கூடாது.
அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடலின் படி அமைதிதான் நமக்கான வாழ்வியல் தத்துவம். அதன்படி நாம் எந்த நிலை வந்தாலும் எவ்வளவு இடர்பாடு வந்தாலும் அமைதியை மட்டும் இழந்துவிட்டால் நமது வாழ்வில் நடப்பது எல்லாம் எதிா்மறையாகவே வந்து சேருமே! அதைஉணர்ந்து நடப்பவர்களே புத்திசாலியாவாா்கள்.
அமைதியை விட பொிய செல்வம் நமக்கில்லை. அதுதான் செல்வத்திற்கெல்லாம் தலையாய செல்வமாகும்.
நமது வாழ்வில் பலவித தேடல்கள் இருக்கலாம். தேடுவது அனைத்தும் நமக்கு எளிதில் கிடைப்பதில்லை. அதற்காக தேடல் இல்லாமல் இருக்கமுடியுமா என்ன? புதையலைக்கூட சிலர் தேடுவாா்கள், ஆனால் வாழ்க்கையின் தேடலில் நமக்கு கிடைக்கும் பொிய புதையலே அமைதிதான்.
அது இறைவன் நமக்கு பரிசளித்தது அதை எந்த நிலையிலும் தொலைத்துவிடக்கூடாது. பலர் நம்மீது வெறுப்பினைக் கொட்டும்போதும் நம்மை பயன்படுத்திக் கொண்டு உதாசீனம் செய்யும்போதும் நாம் அமைதியாய் இருப்பதே நல்லது. அது நமது பலவீனமல்ல! மாறாக நமக்கு அதுவே பலம்.
எந்த நிலையிலும் எந்த தருணத்திலும் யாா் நம்மை வெறுத்தாலும் நம்மீது துவேஷம் கொண்டாலும் நம் நிலை மாறாமல் விவேகத்துடன் நிதானம் கடைபிடித்து அமைதியாய் வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும். எனவே, அமைதி காப்போம் பொறுமை எனும் நகை அணிந்து பெருமை கொள்வோமாக!
பொதுவாகவே நம்மைக்கண்டு கொள்ளாதவர்களிடம் கண்ணீா் சிந்துவது அர்த்தமில்லாதது. அதேபோல செவி சாய்க்காதவர்களிடம் கதறி அழுவதிலும் நம்மை விட்டு விலகியவர்களிடம் விளக்கம் கேட்பதும் எந்த வகையிலும் பொருத்தமானதல்ல, என்பதை உணர்ந்து வாழ்வதே சிறப்பான ஒன்றாகும். வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்துதான் பாா்க்கலாமே!