

அங்கீகாரம் என்பது எந்தவொரு உறவிற்கும் மிக முக்கியமான அடிப்படையாகும். அன்பில்லாத உறவு கூட சில காலம் நீடிக்கும்; ஆனால், உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காத உறவுகள் விரைவில் உடையத் தொடங்கும். நம்முடைய தேவைகள் புறக்கணிக்கப்படும் பொழுதோ, நம் கருத்துகளுக்கு மதிப்பளிக்காத பொழுதோ, உணர்ச்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத பொழுதோ - அது எந்த வகையான உறவாக இருந்தாலும் - விரிசல் ஏற்படுவது சகஜம்.
அங்கீகாரம் இல்லாத உறவு உடைய ஆரம்பிக்கும்; அன்பு இல்லாத உறவு வலிக்கும். அங்கீகாரம், மரியாதை மற்றும் அன்பு இல்லாத உறவுகள், தனிநபர் மதிப்பை உணர்த்தாமல் ஆழ்ந்த மன உளைச்சல், தனிமை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்கும்.
இத்தகைய சூழலில், பரஸ்பர சமத்துவம் இல்லாத நிலையில் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் குற்ற உணர்வுகள் அதிகரிக்கலாம். ஏதோ தன்மேல் தான் தவறு இருப்பது போல், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் உணர்வும் ஏற்படும்.
உதாரணத்திற்கு, குடும்பத்திற்குள் நமக்கான அங்கீகாரம் கிடைக்காத பொழுது, "நான் இந்த குடும்பத்தின் ஒரு பகுதி அல்ல", "இந்தக் குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர் அல்ல" என்ற உணர்வு ஆழ்ந்த தனிமை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
நம்மை ஒருவர் தொடர்ந்து புறக்கணிக்கும் பொழுது, நம் மீதே நமக்கு சந்தேகம் ஏற்படுவதுடன் தாழ்வு மனப்பான்மையும் பற்றிக்கொள்ளும். எவ்வளவுதான் சொந்த திறமைகள் இருந்தாலும், நம்மை நேசிக்காத அல்லது புறந்தள்ளும் உறவுகளால் நம் திறமைகள் மீது நமக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும். "நாம் எதற்கும் லாயக்கில்லையோ?" என்ற எண்ணம் ஏற்பட்டு, நம்மை ஒரு பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வைக்கும்.
குடும்பத்தில் உணர்வு ரீதியான ஆதரவு இல்லாமல் போகும் பொழுது, நமக்கான அங்கீகாரம் கிடைக்காத பொழுது, நம்மைச் சுற்றி இருக்கும் உறவினர்களிடம் கருத்துப் பரிமாற்றம் என்பது குறைந்துவிடும். இதனால் தவறான புரிதல்கள் ஏற்பட்டு, மனக்கசப்பும் சண்டைகளும் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். அன்பு இல்லாத உறவு வலிக்கும்; ஆனால், அங்கீகாரம் கிடைக்காத உறவோ உடைந்து விடும். ஒரு நபர் தொடர்ந்து மதிக்கப்படாமலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, அந்த உறவு அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிடும் ஆபத்து உள்ளது.
அன்பு இல்லாத உறவு, குடும்பத்தில் இருந்தாலும் தனித்து விடப்பட்ட உணர்வை உருவாக்கும். இதில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இல்லாவிட்டாலும், உணர்வு ரீதியான புறக்கணிப்பு என்பது மிகவும் வேதனையான அனுபவத்தைத் தரும்; உறவின் பிணைப்பைத் தளர்த்தும். சமமில்லாத அணுகுமுறை, ஒப்பீடு, தேவையான மதிப்பு கிடைக்காமல் புறக்கணிப்பது போன்றவை உறவின் ஆயுளைக் குறைக்கும்.
எனவே, ஆரோக்கியமான உறவு நீடிப்பதற்கு ஒருவரின் சுதந்திரம் பறிக்கப்படாமலும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம். இல்லையெனில் கசப்புணர்வு அதிகரித்து, உறவுகளிடையே இடைவெளி பெருகி பிளவை உண்டாக்கும்; குடும்பத்தில் மன அமைதியும் குலைந்துவிடும்.
ஆகவே, மனிதர்களுக்கு தங்களின் உழைப்பு, அன்பு மற்றும் இருப்புக்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் சின்னச் சின்ன பாராட்டுகளும் மதிப்பும் மிகவும் முக்கியம். இல்லையெனில், அந்த உறவின் மீதான பிடிப்பு குறையத் தொடங்கிவிடும். அன்பும், ஆதரவும், அரவணைப்பும் இல்லாத பொழுது அந்த உறவு வெறும் கடமையாக மாறி, இறுதியில் கசப்பையே தரும். சரியான புரிதலும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் மதிப்பும் மட்டுமே எந்தவொரு உறவையும் நீண்ட காலம் நிலைக்கச் செய்யும்.