நீங்கள் நேர்மையானவரா? இல்லை நேர்மையானவராக நடிக்கிறீர்களா?

Honesty
Honesty
Published on

நேர்மையாக இருக்கிறோம், நேர்மையாக இருக்கிறேன் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சில இடங்களில் நாம் நேர்மை தவறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் அதை தெரிந்தும் சில பேர் வெளியுலகத்திற்கு நான் நேர்மையாக தான் வாழ்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேர்மையாக வாழ்பவர்களும், நேர்மையாக இருப்பது போல் நடிப்பவர்களுக்கும் உள்ள  வேற்றுமைகளை தெரிந்து கொள்வோம்.      

நேர்மையான வருமானத்துடன் நேர்மையான வாழ்க்கை வாழ்வது நம்முடைய நிலைத்தன்மை மற்றும் சுயமரியாதையின் அடித்தளமாகும். நாம் நேர்மையான வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை நாம் உணர, நமது வேலை மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் என்று அனைத்து அம்சங்களிலும் நெறிமுறையான கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பது, ஏமாற்றும் நடைமுறைகளைத் தவிர்ப்பது மற்றும் எந்த ஒரு  பரிவர்த்தனையிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தாலே, ஒரு வித தெளிவான மன பக்குவத்துடன் நாம் நேர்மையாக தான் வாழ்கிறோம் என்பதை உணர முடியும்.

நாம் நினைத்தபடி நாம் நேர்மையான பாதையில்தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, நமது செயல்களையும் அதன் முடிவுகளையும் பற்றி  தவறாமல் சிந்திக்க வேண்டும். முதலில் நம்முடைய தகவல்தொடர்புகளில் (Communications) நாம் உண்மையாக தான் நடந்து கொள்கிறோமா? நாம் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கிறோமா? நாம் நமது பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுகிறோமா? இந்தக் கேள்விகளுக்கு நாம் வெளிப்படைத்தன்மையுடன் உறுதியாக நமக்கு நாமே பதில் அளிக்கும் போது, நாம் நேர்மையாக தான் வாழ்கிறோம் என்பதற்கான உறுதியான பதில் கிடைத்துவிடும்.

பிறரின் நேர்மையை எப்படி கணிக்கலாம்?

மற்றவர்கள் நேர்மையாக வாழ்கிறார்களா என்பதை புரிந்துகொள்வது அவரவர்களின் செயல்களில் உள்ள வெளிப்படை தன்மை அல்லது அதன் முடிவுகளை வைத்தே கணித்து விடலாம். நேர்மையாக வாழும் மக்கள் தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் நிதானமாகவும், கவனம் சிதறாமலும் இருப்பார்கள். அவர்களின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையைத் தங்குதடையின்றி அனைவரிடமும் காட்டுவார்கள். சட்டங்கள் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு ஏற்றவாறு எல்லாநேரமும் தயங்காமல் எதிர்கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால் அவர்கள் பொதுவாக எல்லோரிடமும் (அது செல்வம் இருப்பவரோ அல்லது  இல்லாதவரோ) அனைவரிடமும் நம்பகமானவர்களாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?
Honesty

மாறாக, நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தங்கள் நடத்தையில் முரண்பாடுகளைக் காட்டலாம். முக்கியமான தகவல்களை எல்லாரிடமும் மறைக்கலாம் (பலரிடம் மாற்றி மாற்றி பேசுவது) அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக அடிக்கடி விதிகளை மீறலாம்.

இது போன்று பல காரணங்கள் இருந்தாலும், காலப்போக்கில் இந்த நடவடிக்கைகளை கவனித்தாலே ஒருவரின் நேர்மையான தன்மையைப் பற்றிய நுண்ணறிவு நமக்கு கிடைத்துவிடும்.

நேர்மைக்கும் குணநலன்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கா?

நேர்மை என்பது நல்ல குணாதிசயத்தின் முக்கிய அங்கமாக இருந்தாலும், அந்த நேர்மையான நபர் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்ல இதயம் கொண்டவராகதான் இருக்கிறார் என்பது அவசியம் இல்லை. ஒருவர் நேர்மையாக இருக்கலாம். அதே நேரம் அவர்களிடம் பரிதாபம், இரக்கம் போன்ற தேவையான பிற குணநலன்கள் இல்லாமலும் இருக்கலாம். அதனால் ஒருவர் மற்றவர்களை எப்படி நடத்துகிறார்? சமூகத்தில் அனைவரிடமும் எப்படி பழகுகிறார்? என்பது, கணிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களாகும்.

எனவே, நேர்மை முக்கியமானது மற்றும் அனைவராலும் பாராட்டப்படுவது  என்றாலும், இரக்கம், மரியாதை மற்றும் பரிதாபம் போன்ற பிற நற்பண்புகளுடன் சேரும் நேர்மையின் கலவையே உண்மையான நல்ல இதயம் கொண்ட நபரை வரையறுக்கிறது. 

மன அமைதி, வலுவான உறவுகள் உட்பட, நேர்மையான வாழ்க்கை வாழ்வதன் நன்மைகள் ஏராளம். மறுபுறம் நேர்மையின்மை என்பது, ஒரு வகையான குற்ற உணர்வு, மன அழுத்தம் மற்றும் மற்றவர் நம்பிக்கையை சேதப்படுத்துவதாகும். எனவே நேர்மையாக வாழ முயற்சிப்பதன் மூலம், நம்மைச் சுற்றி ஒருமைப்பாட்டின் சூழலை வளர்க்கலாம். மேலும், காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒரு நிறைவான மரியாதைக்குரிய, வாழ்க்கைக்கான அடித்தளத்தையும் உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com