
சிலர் வியாபாரம் செய்யும்போது தங்கள் சகோதரர்களை மட்டும் சேர்த்துக்கொள்ள விரும்புவார்கள். பிறகு அவர்களால் கஷ்டப்படும்போது வருந்துவார்கள். உங்களுக்குச் சொந்தமானவர்களால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?. அப்படி எவ்வளவுதான் கொண்டாட முடியும்.
கவனிப்பாரற்று ஒரு முட்டை கிடந்ததைப் பார்த்து பருந்து ஒன்று எடுத்து வந்தது. அதை பருந்து முட்டை என அடை காத்தது. முட்டையிலிருந்து வெளிவந்தது பருந்துக்குஞ்சு அல்ல. ஒரு ஆமை. அதை தன்னைப் போலவே ஆக்க பருந்து உறுதி பூண்டது. ஒருநாள் " இதோ, இப்படித்தான் பறக்க வேண்டும். நீயும் பற என்றது. ஆமை தயங்கியது. விடாமல் வற்புறுத்தியது பருந்து. பெரும் முயற்சிக்குப் பின் ஆமை கிளை நுனி வரை வந்தது. "வா, உன்னால் பறக்க முடியும் " என பருந்து நம்பிக்கை ஊட்டியது. கிளையின் உச்சியிலிருந்து குதித்தது. அதற்கு என்ன ஆகியிருக்கும். அப்படித்தான் இருக்கிறது நீங்கள் ஆசைப்படுவதும். நீங்கள் வியாபாரத்தில் பெரிதாக சாதிக்க விரும்பினால் அதற்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரத்தத்தின் அடிப்படையில் அல்ல.
மலை ஏற ஆசைப்படுகிறீர்கள். உறுதியான கால்கள் கொண்டவர்களுடன் சேர்ந்தால் உதவி செய்வார்கள். மாறாக கால் இல்லாதவர்களைத் துணைக்கு சேர்த்துக்கொண்டால் நீங்களும் ஒழுங்காகச் போய்ச்சேர மாட்டீர்கள். இன்னொன்று உங்கள் சகோதரர்கள் நீங்கள் நினைப்பதையே நினைக்க வேண்டும். உங்களைப் போலவே செயல்பட வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். மற்றவரைத் தன் வழியில் நடத்தப் பார்த்தவர்கள் யாரும் உண்மையான வெற்றி பெற்றதில்லை.
ஆஸ்திரேலியாவில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீயை ஒரு பத்திரிகைக்காக படம் பிடிக்க ஒருவர் போனார். சம்பவம் நடந்த இடத்துக்கு அவரை அழைத்துப்போக விமானம் காத்திருக்கும் என்று சொல்லப்பட்டது. விமான நிலையத்தில் இன்ஜினை ஓடவிட்டுக் காத்திருந்த விமானத்தில் இந்த நபர் பாய்ந்து ஏறி புறப்படு புறப்படு என்று பரபரத்தார். விமானம் சற்றே தடுமாறிவிட்டு வானில் ஏறியது. காட்டுத்தீ பரவிக் கொண்டிருந்த இடத்துக்கு வெகு மேலே விமானம் பறந்ததும் "இன்னும் தாழ்வாகப்போ, அப்போதுதான் பத்திரிகைக்குப் புகைப்படம் எடுக்க முடியும்" என்றார் புகைப்படம் எடுக்கிறவர். உடனே விமானம் ஓட்டிய இளைஞர் "ஐயோ, நீங்கள் பயிற்சியாளர் இல்லையா" என்று பதறினார். தப்பானவரை ஏற்றிக் கொண்டதால் ஆபத்து விமானிக்கு மட்டுமல்ல, பயணிக்கும்தானே?.
சகோதரர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் செய்யுங்கள். மாறாக அவர்களை உங்கள் வழியில் திருப்பப் பார்த்தால் ஆழமான சகதியில் சிக்கிக் கொள்வீர்கள். அதிலிருந்து விடுபட முயற்சி செய்வதிலேயே காலம் கழிந்து விடும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படாமலேயே போய்விடும்.
தன்னம்பிக்கையில் சிறந்தவன். விரக்தி அடைந்தவன். வியாபாரி, மூவரிடமும் பாதி அளவு நீர் நிரம்பிய கண்ணாடி டம்பளர் ஒன்று காட்டப்பட்டது." தம்பளர் பாதி காலியாக இருக்கிறது" என்றான் வாழ்க்கையை வெறுத்தவன். "டம்பளர் பாதி நிரம்பியிருக்கிறது" என்றான் தன்னம்பிக்கையாளன் டம்பளரில் இன்னும் ஒரு பங்கு நீர் ஊற்ற முடியும்" என்றான் வியாபாரி. வணிகம் என்றால் இதுதான். தேவையை அறிந்து செயல்படுவதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. வியாபாரத்தில் வெற்றிபெற அண்ணன் தம்பி என்று பார்க்காதீர்கள். உங்களை அனுசரித்துப்போகும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுங்கள்.