
துயரங்களுக்கான விதையினை நாமேதான் தூவிக்கொள்கிறோம். பலருடைய வாழ்க்கையில் இருள் படர்வதற்கு, சரியான மனித உறவுகளை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளாததே காரணமாகிவிடுகிறது.
உறவுகள் சரியான அடிப்படையில் அமையாதபோது, அவநம்பிக்கை வெகு சுலபத்தில் தோன்றிவிடுகிறது. மற்றவர்களிடம் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதைப்போல் பெரிய சொத்து எதுவும் இல்லை. மனிதர்களைப் பற்றிய அவநம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டேபோனால் எவரிடமும் நம்மால் ஒட்ட முடியாமல் போய்விடும்.
நெருக்கமானவர்களை ஒவ்வொருவராக விலக்கிக் கொண்டே போனால், ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் தனிமை பெற்று விடுவோம். எவரிடமும் உறவு இல்லாத தனிமையைப் போன்ற சோகம் எதுவும் இல்லை அதனை உணர்ந்துதான் நமது முன்னோர்கள் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றார்கள்.
துன்பத்தை பலரோடு பகிர்ந்துகொள்ளும்போது அதன் சுமை குறைகிறது; இன்பத்தை பகிர்ந்து கொள்ளும்போது அதன் சுவைபெருகுகிறது எனவேதான் தனிமைப்பட்டுப்போகும் போது இரண்டு வித இழப்புகளுக்கு நாம் ஆளாகிறோம். ஒன்று துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாததால் அதன் கனம் மிக அதிகரித்து நம்மை அழுத்துகிறது.
இன்பத்தை பகிர்ந்து கொள்ளமுடியாமல் போவதால் அதன் முழுச் சுவையினையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது நம்முடைய வாழ்க்கையில் இருள் கவிழ்ந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வை நாம் பெறத்தொடங்குகிறோம்.
மற்றவர்களோடு நமக்குள்ள தொடர்புகள் ஆரோக்கிய மானவையாக அமைய வேண்டும். நல்ல நண்பர்கள் துன்ப காலத்தில் பணம் கொடுத்து உதவாமல் போகலாம். ஆனால் நீங்கள் மனத்தளர்ச்சி அடையும்போது அவர்கள் அளிக்கின்ற உற்சாகமும், சொல்கின்ற ஆறுதலும் உங்களுக்குப் பெரும் பலமாக அமையும்.
மனம் தளர்ச்சி அடையும்போது மற்றவர்களின் இதமான வார்த்தைகள் தெம்பு ஊட்டுகின்றன. மனத்தளவில் நீங்கள் பலம் அடைகின்றபோது வாழ்க்கைச் சோதனையில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்கிற நம்பிக்கை ஏற்படும். தனிமை துயரம் அளிப்பதும். பலரோடு சேர்ந்திருத்தல் மகிழ்ச்சி அளிப்பதும், வாழ்க்கையில் அன்றாடம் நாம் பார்க்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் மற்றவர்களோடு ஒட்டாமல் தனிமைப்பட்டு வாழ்கின்றபோது நல்ல நண்பர்கள் நமக்கு கிடைக்காமல் போய் விடுகிறார்கள்.
ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்சன் நட்பைப்பற்றிச் சொல்லும்போது, ' உங்கள் நட்பை எப்போதும் சீர்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறுகிறார். அதாவது நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமாகவும், அளவளாவி மகிழ்வதன் மூலமாகவும் நமது நட்பினை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள முடியும்,
நண்பர்களுடனும், ஏனையோருடனும் பழகப்பழக துன்பங்கள் நம்மை அறியாமலே மறையத் தொடங்குகின்றன.