வாழ்க்கையில் வெவ்வேறு தளங்களில் நீங்கள் வெவ்வேறு விஷயங்களையும், வெவ்வேறு ஆட்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற கேள்வி உங்களை அரித்துக்கொண்டே இருக்கும். இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டால் நமக்கென்ன என்று அலட்சியமாக இருப்பீர்களா? தேசமே பொறுப்பேற்றுக் கொண்டு செயலாற்ற வேண்டிய தருணமல்லவா?.
அடிபட்டு தவிப்போரைப் பார்க்கும்போது ஒன்று அவருக்கு முதலுதவி அளிப்பீர்கள். அல்லது மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வீர்கள். மாறாக என்னுடன் தொடர்பில்லாதவை நான் எப்படி கவனிக்க முடியுமா என்று கண்டு கொள்ளாமல் போனால் உங்களுக்கும் பாதையில் கிடைக்கும் கல்லுக்கும் என்ன வித்தியாசம்?. சில சமயம் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களால் கையாள முடியாத எதையும் செய்யாமல் இருப்பது கூட பொறுப்பான செயல்தான்
உங்களுடைய சொந்தத் தொழிலாக இல்லாமல் இருக்கலாம். நீங்கள் உழைத்தால் முதலாளிதானே லாபமடைகிறான் என்று நீங்கள் கடனே என்று வேலை செய்யலாம். உண்மையில் அந்தத் தொழிலை செய்ய உங்களுக்கு முழுத்திறமை இருக்கிறதா என்று இன்னொருவர் முதலீட்டில் கிடைத்திருக்கும் அத்புதமான வாய்ப்பல்லவா அது. இங்கே நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றினார் மேம்படும் போவது உங்கள் முதலாளியின் தொழில் மட்டுமல்ல, உங்கள் திறமையும்தானே?.
பொறுப்புடன் வேலை செய்த தொழிலாளர்கள்தான் பின்னாளில் பெரிய முதலாளிகளால் வளர்ந்திருக் கிறார்கள் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. ஹுய்தி என்ற ஜென் குரு இருந்தார். ஒரு முறை இன்னொரு ஜென் குரு இவரிடம் ஜென் என்றால் என்ன என்று கேட்டார். ஹுய்தி உடனே தன் மூட்டையை கண் கீழே போட்டு விட்டு நிமிர்ந்து நின்றார். "ஜென்னின் நோக்கம் என்ன" என்ற இரண்டாவது கேள்வி கேட்டார். ஹுய்தி கீழே போட்டு மூட்டையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தார். மூட்டையை அவருடையது என்று நினைக்காமல் கீழே போடவும் முடியும். ஸசந்தோஷமாக சுமக்கும் முடியும் என்பதையே அவர் குறிப்பால் உணர்த்தினார்.
வலியில்லாமல் பொறுப்புகளை ஏற்கத் தெரிந்துவிட்டால் அது சுமை இல்லை. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு. முதலில் பொறுப்பு என்பதை செயலாக மட்டுமே நினைப்பதை தவிர்க்க வேண்டும். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள். பொறுப்புகளை இன்னொருவர் சுமத்தியது என்று எண்ணாமல் அதை முழுமனதுடன் ஏற்கப் பழகுங்கள். முழுமையான பொறுப்புணர்வுடன் நீங்கள் இருந்துவிட்டால் அமைதியும், ஆனந்தமும் தானாகவே உங்களைத் தேடிவரும்.