
தியாகம் செய்யாத பூமியும்; வீரத்தைப் போற்றாத நாடும் நிலைபெற்றதில்லை. குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் உண்டு. தங்கள் வீதியில் வாழும் நம் மக்களுக்காக தியாகம் செய்தவர்களை பார்த்திருக்கிறோம். தங்கள் கிராமத்திற்காக தியாகம் செய்தவர்களை கண்டிருக்கிறோம். தங்கள் தேசத்திற்காக தியாகம் செய்தவர்களை ஏடுதோறும் படித்திருக்கிறோம்.
ஆனால் எல்லோராலும் தியாகம் செய்துவிட இயலுமா என்றால் இயலாது. தம்மை அழித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களால் தான் தியாகத்தை மகிழ்வுடன் செய்ய இயலும்.
மற்ற மன்னர்களைப் போன்று வரி கட்ட சம்மதித்து இருந்தால் சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதர் வெள்ளையர் குண்டுக்கு பலியாகி இருக்க மாட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் தொங்கியிருக்க மாட்டார். மற்ற அரசு ஊழியர்களைப் போன்று பணியை மட்டும் உயிர்மூச்காக கொண்டிருந்தால் வாஞ்சி ஆஷ்துரையைச் சுட்டு வீழ்த்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மடித்திருக்க மாட்டான்.
குடும்ப வறுமையை பெரிதாக நினைத்திருந்தால் திருப்பூர் குமரன் கொடியைக் காப்பதற்காக அடிபட்டு செத்திருக்க மாட்டான். மற்ற கவிஞர்களைப் போன்று வருமானம் மட்டுமே பெரிதன எண்ணி இருந்தால் மகாகவி சுப்பிரமணிய பாரதி தொடர் தொல்லைகளால் அவதிப்பட்டிருக்கமாட்டார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரனார், சிவா போன்றவர்களின் தியாகத் தழும்புகள் தான் தீப்பந்தங்களாகி வெள்ளையர்களை தீர்த்துக் கட்டியது. இந்த தேசம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் தியாகம் தேவைப்பட்டபோது, இதுபோன்ற தியாகம் செய்தவர்களை நாம் எந்நாளும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகஸ்ட் பிறந்தாலே அவரவர் எண்ணங்களில் இவை அனைத்தும் அலை அலையாய் வந்து மோதுவது இயல்பு.
கார்கில் போரில் மடிந்தவர்கள், தினசரி நாட்டுக்காக உயிர்விடும் ஜவான்களையும் இது போன்ற தருணங்களில் நினைவில் கொண்டு அவர்களின் தியாகத்திற்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்.