
நாம் சிறுவயதாக இருந்தபொழுது கையில் காசு கிடைத்துவிட்டால் போதும். கடைக்குச் சென்று விரும்பிய புத்தகங்களை எல்லாம் வாங்கி படிப்பதில் அலாதி பிரியம் உண்டு. அதிலும் வீட்டில் நிறைய பேர் இருந்தால் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு படித்த காலம் அது. இதற்காக கடைசியில் புத்தகத்தை படிப்பதும் உண்டு. முதலிலேயே படித்தால் சீக்கிரமாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சரியாக படிக்கமாட்டோம். ஆதலால் எல்லோரும் படித்து முடித்த பிறகு படித்தால் நிதானமாக படிக்கலாம் என்று கடைசியாக படித்த தருணங்கள் உண்டு. அப்படி புத்தகங்களை படிப்பதிலும் படைப்பதிலும் இரண்டு வகை உண்டு.
பொழுதுபோக்குக்கும் ஒரு சிலரின் அதி தீவிரத்தை வெளிப்படுத்துவதற்கும் பல புத்தகங்கள் பயன்பட்டிருக்கின்றன. சில புத்தகங்கள் சமூக மாற்றத்திற்கும், சரித்திர நிகழ்வுகளுக்கும் தூண்டுகோலாக இருந்திருக்கின்றன. ஒரு புத்தகத்தை தூக்கம் வருவதற்காக படிப்பவர்கள் உண்டு. காலத்தைக் கடத்துவதற்காக படிப்பவர்கள், இன்னும் சிலர் படிக்க வேண்டுமே என்பதற்காக படிப்பவர்களும் உண்டு.
ஆனால் படிப்பு என்பது படிக்கின்ற ஒருவருக்கு பயன்பட்டால் மட்டும் போதாது. ஒருவரின் படிப்பு மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அவனைச் சார்ந்து இருக்கும் சமூகத்திற்கும் அவரது படிப்பு பயன் அளிக்க வேண்டும். இல்லை எனில் அவர் படித்த புத்தகத்திற்கும் படித்தவருக்கும் ஏதொரு பயனும் இல்லை.
மனிதர்களில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்வது வாய்ப்புகளும் சுற்றுச்சூழல் சார்புகளுமாகும். சுற்றுச்சூழல் சார்புகளில் நண்பர்கள் போன்று புத்தகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
துன்பத்தில் உறங்கும் ஒருவனை முன்னேற்ற வழியில் அழைத்துச் செல்ல, பெரும் சுமைகளை தாங்கி நிற்பவனை அந்த சுமைகளை மறந்து விட்டு செயலாற்ற வைக்க; நோயாளியை நோயின் கொடுமையை மறக்கச் செய்ய; நண்பர் இல்லாதவர்களுக்கு நண்பராக; தனித்தவர்களின் தோழராக; மகிழ்ச்சியற்றவர்களின் மகிழ்ச்சிக்கு இன்பம் பயப்பதாக, நம்பிக்கையற்றவர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக, உற்சாகமற்றவர்களின் உற்சாகம் பெருக, ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பவைகள் இவை அனைத்திற்கும் இருளில் ஒளிரும் விளக்காக விளங்குவது புத்தகங்கள்தான்.
ஒரு நூலானது பல்வேறு மனிதர்களுடைய வாழ்க்கையை புரட்சியாக்கி இருக்கிறது. புலவர்களாகவும், பெருந்தகைகளாகவும், தத்துவ ஞானிகள் ஆகவும், தளபதிகளாகவும் ஆக்கி இருக்கிறது.
குழந்தைகளையும், வளரும் இளம் தலைமுறையினர் மற்றும் ஒரு சராசரி வாசகனையும் ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க வைத்து விட்டால், அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் நல்ல கருத்துக்களின்படி நடக்க கற்றுக் கொடுத்துவிட்டால், அனைவரும் முன்னேறலாம். இவர்களால் சமூகம் முன்னேறும். சமூகம் முன்னேறினால் பின்னர் நாடு முன்னேறும்.
ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல் படிக்க வேண்டும் என்று ஆங்கிலமேதை ஜான்சன் கூறியுள்ளார். ஆதலால் எழுதுபவர்களும் எக்கச்சக்கமாக படிக்க வேண்டும். படிப்போம்; பயனுற வாழ்வோம்!
பணத்தின் பின்னால்
ஓடுவதை விட
நல்ல புத்தகங்களின்
பின்னால் ஓடுவோம்!