மறதிக்கு குட் பை சொல்லுங்கள்!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

-ம. வசந்தி

ன்னடா! விழுந்து விழுந்து படிச்ச பேப்பர்ல ஒண்ணுமே எழுத காணமே! என்ன பண்ணுன? என்ற கேள்விக்கு பிள்ளைகள் "மறந்து போச்சு" என்ற பதிலை சொல்வது இன்று பெரும்பாலானவர் வீடுகளில் வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது.

வீட்டில் படித்ததை எல்லாம் திரும்பவும் சொல்லிப் பார்த்து கொள்ளும்போதோ அல்லது புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழுதிப் பார்க்கும்போதோ தடையில்லாமல் சுலபமாக செய்ய முடிகிறது. ஆனால் தேர்வு எழுதும்போது எல்லாமே மறந்துபோய் விடுகிறது.

முதலில் 'ஐயோ!  படித்ததை எல்லாம் மறந்து விடுவோமா' என்ற கவலையை விட்டொழிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த டி20 இறுதிப்போட்டியையே உங்களுக்கு உதாரணமாக சொல்கிறேன். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வீசப்பட்ட ஓவர்களில் இந்தியா வெற்றியை வசமாக்கியது. இதற்கு கடைசி சில ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பயப்படாமலும் கவலை அடையாமலும் பதற்றப்படாமலும் நேர்த்தியாக ஆடிய விதம்தான் வெற்றி கோப்பையை அடைய உதவி செய்தது.

தேர்வு என்பதும் அதுபோலத்தான். ஒருமுக எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் விரைவாக அதே நேரம் பதற்றப்படாமல் ஆடும் கிரிக்கெட் போலத்தான். நீங்கள் இந்த மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற முடியும். பயமும் கவலையும்தான் நமது திறமைகளை வற்றவைத்து விடும் சக்தி கொண்டவை .

இரண்டே அடி அகலமுள்ள ஒரு நடைபாதையில் நடக்கச் சொன்னால் அதில் நடந்து செல்வதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. ஏன் ஓடக் கூட முடியும். ஆனால் அந்த நடைபாதையையே 200 அடி உயரமான ஒரு சுவரின் மேற்பரப்பாக வைத்துக்கொண்டு அதில் நடக்கச் சொன்னால் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற கவலையும் பயமும், ஓரடி எடுத்து வைப்பதற்குள் வெலவெலத்துப் போக வைத்துவிடும். தரையில் இயல்பாக நடந்து செல்வதைப் போன்று நீங்கள் படித்த பாடங்களை வீட்டில் நன்றாக நினைவுப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் உயரத்தில் நடக்கும்பொழுது விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் வருவதைப்போல தேர்வு கூடத்தில் 'மறந்து விடுவோமா 'என்ற பயமும் கவலையும் செயலிழக்க செய்கின்றன.

தேர்வில் வெற்றி பெற விடா முயற்சி, கடும் உழைப்பு,சரியான திட்டமிடல், ஒருமுகச் சிந்தனை ஆகியவை நிச்சயம் தேவை. இவற்றில் எதுவுமே கஷ்டமானதோ நம்மால் முடியாததோ கிடையாது. இவை அனைத்துமே நம்முள் இயல்பாகவும் இயற்கையாகவும் அமைந்துள்ளன. சரியான பயிற்சியின் மூலமும் அமைதியான அணுகுமுறை மூலமும் இவற்றை வெகு சுலபமாக பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
motivation articles

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எந்த ஒரு பாடத்தையும் அவற்றின் அடுத்தடுத்த பாயிண்ட்களோடு இணைத்து உங்களுக்கு பிடித்த பாணியில் பாடல் வடிவில் படித்துக்கொண்டே வந்தால் படித்தது எதுவும் மறந்து போகாது உங்கள் கற்பனா சக்தியும் வளரும்.

சங்க காலத்து கவிஞர்கள் தங்களது கவிதைகளில் எதுகை மோனை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தி எழுதியதற்கு காரணம் எதுகை மோனையுடன் பாடி படிப்பதற்கு வசதியாக இருந்ததால்தான். படித்தவர் நெஞ்சில் பதிந்து அடுத்த தலைமுறை அடுத்த தலைமுறை என்று கடந்து ஆயிரம் 2 ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் மறக்க முடியாததாக அமைந்திருக்கின்றது.

கவலையையும் பயத்தையும் விட்டொழித்து ஒருமுக சிந்தனையோடு படித்தால் மறதிக்கு குட் பை சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com