தேடல் சுகமானது! தேடிப்பார்ப்போமா வாழ்வின் சுவாரசியத்தை!

Search is comfortable!
Motivational articles
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். தேடலில்தான் எத்தனை சுகம். வாழ்க்கையின் ஒவ்வொரு தேடலிலும் வாழ்வின் சுவாரஸ்யத்தை அறிய முடியும். கடலைத்தேடி ஓடும் நதிபோல, திசையைத் தேடி ஓடும் காற்று போல வாழ்வில் எது வேண்டுமோ அதைத் தேடிச் செல்வதுதான் சிறப்பு.

வாழ்க்கை பயணத்தில் தேடல்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுவே வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது இல்லாவிட்டால் ஊர் வம்புகள் பேசி சோம்பேறிகளாக வாழ வேண்டியதுதான். வாழ்க்கையில் தேடல் இல்லாவிட்டால் தேங்கிய நீரைப்போல சமூகம் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். எனவே நதியைப் போல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வில் வசந்தம் வீசும்.

காட்டுவாசியில் இருந்து கம்ப்யூட்டர்வாசி ஆனவரைக்கும் மனிதர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கிற தேடல்தான். வாழ்க்கையின் சுவாரசியமே இந்த தேடல்தான். தேடல் மட்டும் இல்லையென்றால் மத்த விலங்குகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போயிருக்கும். தேடுவதோ தேடப்படுவதோ பெரிதில்லை.

இதையும் படியுங்கள்:
நீங்க ரிஸ்க் எடுக்கத் துணிபவரா? நிச்சயம் வெற்றி உங்களுக்கே!
Search is comfortable!

ஆனால் நம்மை  தேடுவோர் இன்றி இருப்பது தான் கொடிது. இருப்பினும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க தேடலை விட்டுவிடாமல் தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம்.

ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம்தான். நாம் அடையும் ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கைதான். வாழ்க்கை ஒரு தேடல். தேடலில் எத்தனையோ விஷயங்களை நாம் தொலைத்திருப்போம். ஆனால் தேடிக்கொண்டு இருக்கும் இலக்கை மட்டும் கைநழுவ விடாமல் தேடிக்கொண்டே இருப்பதுதான் சிறப்பு. உலகில் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.

சிறு குழந்தையாக இருக்கும்பொழுது துவங்கிய ஓட்டம் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தேடல் இல்லாத வாழ்க்கை என்பது கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல் திசை அறியாது மூழ்கி போகும்.

முதலில் நமக்கு எது தேவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.  வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பு, அனுபவம் என்ற இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது. எதிர்ப்படும் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

கற்றுக் கொள்வதுடன் நின்று விடாமல் சாதித்துக் காட்டவும் முயலவேண்டும். தேடல் உள்ளவரை மட்டுமே நம்மால் வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை உணரமுடியும்.  தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தேடல் ஒன்றே நிரந்தரம். தேடாமல் எதுவும் கிடைப்பதுவும் இல்லை, நம்மை வந்து அடைவதும் இல்லை.

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டேதான் இருப்போம். அறிவைத் தேடுவோம். வேலையை தேடுவோம். பணத்தைத் தேடுவோம். பொன்னையும் பொருளையும் தேடுவோம். மண்ணைத் தேடுவோம். தேடலில் தோல்வி உண்டானால் இறைவனைத் தேடுவோம். ஆகமொத்தம் வாழ்வில் ஏதாவது ஒன்றை நம் மனம் தேடிக் கொண்டேதான் இருக்கும். அது மனித இயல்பு.

இதையும் படியுங்கள்:
உங்கள் எண்ணங்களை சீராக்கும் 6 விஷயங்கள்!
Search is comfortable!

யோகிகளும் ஞானிகளும் தேடுதல் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று கூறுகிறார்கள். அதனை அப்படித்தான் அணுகவேண்டும் என்றும் கூறுகிறார்கள். அப்போதுதான் வாழ்வில் ஒருவிதமான ஆர்வமும்,  பிடிப்பும் உண்டாகும். வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் கிடைக்கும். வாழ்க்கை சலிப்பு தட்டாது என்று கூறுகிறார்கள்.

தேடித்தான் பார்ப்போமே வாழ்வின் சுவாரசியத்தை!

logo
Kalki Online
kalkionline.com