

நமது எண்ணங்களே வாழ்க்கையை வடிவமைக்கும் அற்புத சக்தியாகும். எண்ணம் போல் வாழ்வு என்று அறிஞர்களும் பெரியவர்களும் கூறுகின்றனர். ஈர்ப்பு விதியை பயன்படுத்தி ஒருவர் தாம் எண்ணிய விஷயங்களை எப்படி அடைவது என இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஈர்ப்பு விதியின் அடிப்படைக் கொள்கை!
ஈர்ப்பு விதி என்பது ஒத்தவை ஒத்ததை ஈர்க்கும் என்கிற அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டது. அதாவது ஒருவரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறதோ, அதுதான் அவரது வாழ்க்கையிலும் நடக்கும் என்பது தான் ஈர்ப்பு விதியின் முக்கியமான அம்சமாகும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது நேர்மறையான வைப்ரேஷன்களை வெளியிடுகிறார். அதனால் நல்ல விஷயங்கள் அவரை வந்து சேர்கின்றன. அதே சமயம் கோபம், விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு மேன்மேலும் கஷ்டங்கள் மட்டுமே வந்து சேரும்.
ஈர்ப்பு விதி பற்றிய புத்தகங்கள்!
ஈர்ப்பு விதியின் அதிசய சக்தி பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அதில் ரோண்டா பைர்னின் ‘தி சீக்ரெட்’ புத்தகம் உலகப் புகழ் பெற்றது. நாம் நினைக்கும் ஆசைப்படும் விஷயங்களை பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது இப்புத்தகம். எஸ்தர் & ஜெர்ரி ஹிக்ஸ் எழுதிய “கேட்பவர்களுக்குக் கிடைக்கும்” என்ற புத்தகம், எண்ணங்களுடன் உணர்ச்சிகள் கலக்கும் போது ஒருவர் தான் விரும்பும் விஷயத்தை விரைவில் அடையலாம் என்கிறது. ‘தி சயின்ஸ் ஆப் கெட்டிங் ரிச்’ என்ற புத்தகம் இலக்குகள் கொண்ட ஒருவர் தனது எண்ணத்தை பிரபஞ்சத்தில் பதிய வைத்து, அதற்கு ஏற்றார் போல் செயல்பட்டால், பிரபஞ்சம் கேட்டதை கொடுக்கும் என்கிறது.
கனவு நனவான கதை!
நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் & க்ரோ ரிச் என்ற புத்தகத்தில் வரும் எட்வினின் கதை ஈர்ப்பு விதியின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏழையான எட்வினுக்கு தாமஸ் எடிசனின் பிசினஸ் பார்ட்னராக வேண்டும் என்பது தீராத ஆசை. எடிசனின் லாபில் சாதாரண வேலைக்காரனாக சேர்கிறார். மனதளவில் தன்னை எடிசனின் பார்ட்னராக நம்பி பல வருடங்கள் அங்கே வேலை செய்கிறார். எடிசன் கண்டுபிடித்த ஒரு புதிய இயந்திரத்தை வெற்றிகரமாக விற்று கடைசியில் எடிசனின் பார்ட்னராகவே ஆகிறார்.
ஈர்ப்பு விதியை நடைமுறைப்படுத்த உதவும் உத்திகள்!
1. தெளிவான குறிக்கோள்
“எனக்கு நிறையப் பணம் வேண்டும்” என்ற குறிக்கோளுக்குப் பதிலாக ‘டிசம்பர் 31க்குள் ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும்’ என்று துல்லியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
2. நன்றி உணர்வு
ஏற்கனவே கிடைத்த விஷயங்களுக்கு நன்றி சொல்வது ஒரு உயர்வான நேர்மறையான அதிர்வை உருவாக்குகிறது.
3. காட்சிப்படுத்துதல்
விரும்பியவற்றை அடைந்து விட்டது போல மனதில் தினமும் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும்.
4. உறுதிமொழிகள்
‘நான் வெற்றிகரமானவன், எதையும் சாதிக்க வல்லவன்’ என்பது போன்ற நேர்மறையான வாக்கியங்களை தினமும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்.
ஈர்ப்பு விதி உண்மையா?
ஈர்ப்பு விதி பற்றி சில எதிர்ப்புகள் நிலவுகின்றன. ‘ஒருவர் கஷ்டப்படுவதற்குக் காரணம் அவரது எண்ணம் தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு பிரபஞ்ச விதி அல்லது ஆன்மிக சாயம் பூசுவது அனாவசியம் என்கிற விமர்சனமும் நிலவுகிறது. நம்மை மீறி நடக்கும் அசம்பாவிதங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் ஒருவரால் தமது எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை மட்டுமே முன்னேற்றும் சக்தியாக இருக்கிறது. அது ஈர்ப்பு விதியின் மீது வைக்கும் நம்பிக்கையாக இருந்து விட்டுப் போகட்டுமே?