

1. ஆசையும் பேராசையும்
வாழ்க்கையில் ஆசைப்படுங்கள்; ஆனால், பேராசையை அகற்றுங்கள். அப்போதுதான் ஆளுமைப் பண்புகள் நமக்குள் ஆணிவேறாகப் பதிந்து, ஆற்றலோடும் ஆணித்தரமாகவும் செயல் வடிவம் உருவாகும். அதன் மூலம் ஆற்றும் சக்தி அபரிமிதமாக வெளிப்பட்டு, முன்னேற்றத்திற்கான நிகழ்வுகளைப் பதியச் செய்யும். எனவே, பேராசைப்படுவதை அகற்றுவோம்; அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்துவோம்.
2. சோம்பலை விரட்டுவோம்
உயர்வான வாழ்க்கைக்குச் சோம்பலே முதல் எதிரி என்பதை நாம் மறக்கக் கூடாது. மரங்களின் மேல் படர்ந்து அதன் சக்தியை உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் போல், நம் நிழலாகப் படர்ந்து நம்முடைய திறமையையும் சுறுசுறுப்பையும் முடக்கம் செய்யும் சோம்பலை விரட்டிவிட்டு, உயர்வுக்கு வித்திடுவோம்.
3. ஒழுக்கமே உயிர்
மனித வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது இதயம் போன்றது. ஒழுக்கமின்மை என்பது புற்றுநோய் போன்று மனிதனைச் சிதைத்து, கல்லறைக்கு இட்டுச் செல்லும் வல்லமை கொண்டது. எளிமையாக வாழ்ந்தாலும் வலிமையாக வாழ்ந்தாலும், ஒருபோதும் ஒழுக்கம் பிறழாமல் வாழ்வோம்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்ற ஐயன் வள்ளுவனின் குறளுக்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்.
4. பொறாமை தவிர்த்து பெருந்தன்மை கொள்வோம்
வாழ்க்கையில் பொறாமைப் பற்றினை அகற்றி, பெருந்தன்மை குணத்தோடு வாழ்வோம். இல்லையெனில், அது நம்முடைய மன அமைதியை இழக்கச் செய்து, தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்குத்(The secret to success) தடையாக இருக்கும். மற்றவர்களைப் பாராட்டும் வண்ணம் நம் எண்ணங்களை வளர்த்து மகிழ்வோம்.
5. நேர்மையே உயிர்மூச்சு
நேர்மை என்பது நாம் சுவாசிக்கும் உயிர்மூச்சை விட மேலானது என்பதை உணர்ந்து வாழ்ந்தால், வாழ்வில் உயர்வும் போற்றுதலுக்குரிய சிறப்பும் நம்மை உச்சம் தொட்டு அழகுபார்க்கும். எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையை நழுவவிடாமல், அதனைத் தழுவி வாழ்வோம் என்னும் மன உறுதியோடு வாழ்ந்து காட்டுவோம்.
6. ஐம்புலன் அடக்கம்
வாழ்க்கையில் ஐம்புலன்களை அடக்கி வாழக் கற்றுக்கொள்வோம். பார்வையில் களங்கம் ஏற்படுவதைத் தவிர்த்து, நல்லவற்றைப் பிடித்து வாழும் பக்குவம் அடைவோம். காதுகளில் விழும் தீயவற்றை விடுத்து, நல்லவற்றை அனுபவமாக எடுத்துக்கொள்வோம். சுவாசக் காற்றில் மனிதம் கலப்போம்; வாய்மையில் புனிதம் காப்போம். இவற்றுடன் வாழ்க்கையில் சிகரம் தொடுவோம்.
7. தெளிவான இலக்கு
குறிக்கோள் இல்லாமல் எதற்கும் பயன்படாத காட்டாறு போன்று வாழாமல், நாம் அடையும் இலக்குகளைத் தெளிவாக வடிவமைப்போம். அவற்றை அடைய நிதானம், முன்னெச்சரிக்கை இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு பயணிக்கும் வல்லமை பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.
8. அனுபவப் பக்குவம்
பக்குவம் என்பது நாம் எடுத்து வைக்கும் தடம்; அது நமக்கு அனுபவமாகவும், தீமைகளைத் தீர்க்கும் நண்பனாகவும் இருக்கும். அது சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையை நமக்குள் ஏற்படுத்தும். பிரச்சினைகள் எழும்போது "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று செயல்படாமல், நிதானமாக எதிர்கொள்ளும் மனதிடத்தைக் கொடுக்கும். எனவே, நமக்குக் கிடைக்கும் பக்குவத்தைப் பக்குவமாகக் கையாளப் பழகுவோம்.
9. அறநெறி வாழ்க்கை
"எப்படியும் வாழலாம்" என்று வாழ்வது மனதையும் அறநெறிகளையும் சிறைப்படுத்தி, வாழ்க்கையை வீழ்த்திவிடும். இதை உணர்ந்து, "இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற அறநெறிகளைக் காத்து, நயமாய் வாழ்ந்து, தரமாய் தலைநிமிர்ந்து வான்புகழ் பெறுவோம்!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here