
இரவும், பகலும் இயற்கையின் நியதி. அதேபோல் வாழ்க்கை என்ற பயணத்தில் வெற்றியும், தோல்வியும் தவிர்க்க முடியாதவை.
வெற்றியை வரவேற்று கொண்டாடும் மனித மனம், இனம் ஏனோ தோல்வியை சந்திக்க தயங்குகின்றது. வெற்றி உத்வேகத்தை அதிகரித்து, மேலும் சாதிக்க தூண்டுகின்றது.
அதே சமயத்தில் தோல்வி துவளச் செய்கின்றது. சோர்வு கொள்ள வைக்கின்றது. நிதானமாக யோசித்து, சிந்தித்து பார்த்தால் தோல்வி வழி வகுக்கும் நன்மைகள் கண்களுக்கு புலப்படும்.
அவற்றைப் பற்றி காண்போம்.
தடையில்லாமல் வெகுவேகமாக வண்டிகளில் பயணிப்பவர்களை கன்ட்ரோல் செய்ய சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர்கள் (speed breakers ) இருப்பதை காணலாம். அவைகள் அப்படி இருப்பதால் கட்டுப்பாடின்றி வேகமாக செல்லும் வண்டிகளை கட்டுப்படுத்த இந்த வகை ஸ்பீட் பிரேக்கர்கள் பெரிதும் உதவுகின்றன.
அதேபோல் சரிவர இயங்காத சமயத்தில் தோல்வி என்ற முட்டுக்கட்டை, கட்டுப்பாட்டின்றி இயங்கும் நிறுவனங்கள், வாழ்க்கை முறை ஆகியவைகளுக்கு தடையாக செயல்பட்டு முன்னேறி செல்வதை நிறுத்துகின்றது. அவ்வாறு தோல்வி என்னும் நிகழ்வு செய்வதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது தோல்விக்கான காரண, காரியங்கள் மற்றும் அதற்கான விவரங்களை அறிந்துக்கொள்ள நேரமும், சாந்தர்ப்பமும் அளிக்கின்றது.
மேலும் அலசி, ஆராயந்து தேவைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்து கொள்ளவும், சரிசெய்து கொள்ளவும், புதிய முறைகளை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் வழங்கப் படுக்கின்றது.
ஒருவேளை தோல்வி என்ற நிகழ்வு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படாமல் போனால் சரி செய்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டாமல் மேலும் பயணித்து பெரிய நஷ்டம் அல்லது தோல்வி கதவை தட்டி ஒட்டு மொத்தமாக இழக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் அல்லவா. இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள தோல்வி கெட்டதிலும் ஒரு நல்லது ஆகும் (blessing in disguise).
நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் சந்திக்கும் தோல்விகளையும் வரவேற்று அத்தகைய தோல்விகளில் கற்றுக்கொள்ள பாடங்கள் பற்றி அறிந்துக்கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி கற்றுக்கொண்ட பாடங்களால் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறும் முனைப்பில் தங்கள் முழு கவனத்தை ஈடுபடுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தோல்வி என்ற தொய்வு. ஏற்பட்ட நிலையிலும் ஒருபோதும் அத்தகைய தோல்விகளை கண்டுத் துவளவோ அல்லது அஞ்சவோ மாட்டார்கள்.
இப்படிப்பட்டவர்கள் நன்றாக அறிவார்கள் வாழ்கை பயணத்தில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கம் என்று.
மேலும் தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டேயிருப்பது எப்பொழுதும் சாத்தியம் இல்லை என்று அவர்களுக்கு தெரியும். அனுபவத்தின் அடிப்படையில் இடையில் வரும் தோல்விகள் திருத்திக்கொள்ள அடிக்கப்படும் எச்சரிக்கை மணிகள் என்று.
தோல்வியை எதிர்கொண்டு முறியடித்து மேலும் முன்னேற ஒவ்வொரு தோல்வியும் அளிக்கும் வாய்ப்புக்கள் என்பது தோல்விகளை கண்டு அஞ்சாதவர்கள் அறிந்துக்கொண்ட உண்மை ஆகும்.
எனவே இத்தகையவர்கள் தோல்விகளை தடங்கல்களாகவோ, இடர்கள் அல்லது தடைக் கற்களாகவோ கருதாமல், ஏற்பட்ட நிகழ்வுகளாக எடுத்துக்கொண்டு வாழ்க்கைப் பயனத்தை தொடர்வார்கள்.