

மற்றவர்கள் செய்வதை என்னால் செய்துகாட்ட முடியும். நான் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல. மற்றவர்களைவிட இன்னும் சிறந்த முறையில் கடுமையாகக் காரியங்களை என்னால் சுலபமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவனுக்குத்தான் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
ஒருவன் தனக்குத்தானே நண்பனாகச் செயல்பட வேண்டும். தனக்குத்தானே விரோதியாக செயல்படுபவனுக்கு வாழ்க்கையில் வெற்றி கிட்ட வாய்ப்பில்லை. வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுவனுக்கு எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் கிடைப்பது இயற்கையே.
எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் கண்டு பயந்து முயற்சி செய்வதையே விட்டு விடுபவன் மற்றவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து வரும் சாதாரண ஊழியனாகத்தான் உருவெடுக்க முடியும்.
பெரிய வேலைகளைச் செய்துமுடிக்க ஒருவன் நிறையக் கஷ்டப் வேண்டியிருக்கும். ஆனால் செய்து முடித்த பின்பு கிடைக்கும் புகழ் தென்றலாக வந்து அவனை மகிழ்விக்கும்.
நான் தலைசிறந்த விளையாட்டு வீரனாக வந்து பல ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்று என் தாய் நாட்டிற்குப் பெருமை தேடித் தரப் போகிறேன்.
உலகத்தில் இருக்கும் அநியாயங்களைச் சுட்டிக்காட்டிச் சிறந்த புத்தகங்களை எழுதி, மக்களை விழிக்க வைத்து, அநியாயங்களை அகற்றி மனித இனத்தில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தப் போகிறேன்.
'பல புதிய வகை மருந்துகளைக் கண்டுபிடித்து, தற்போது மக்களை மிகவும் துன்புறுத்திவரும் நோய்களை அகற்றி, எண்ணற்றவர்களின் கண்களில் நீரே வராமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்' என்பதைப் போன்ற உயர்ந்த இலட்சியங்களை ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண இலட்சியங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் சாதாரண மனிதனாகத்தான் இருப்பான். உயர்ந்த இலட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டவனுக்குத்தான் உயர்ந்த மனிதனாக உயருவதற்குச் சந்தர்ப்பம் கிட்டும்.தன்னுடைய இலட்சியத்தைத் தேர்ந்தெடுக்கும் போது ஒருவன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவனுக்கு இருதயத்தில் கோளாறு காரணமாகச் சிறிது தூரம் நடந்து சென்றால் கூட மூச்சு வாங்குகிறது. ஆனால் அவன் வட துருவத்திற்கு நடந்து சென்று வெற்றிக்கொடி நட்டுவிட்டு வர வேண்டு மென்று இலட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டால் அவனுக்குத் தோல்வியும் அவமானமும்தான் கிட்டும்.
ஆகையால் தன்னுடைய திறமை, அறிவு, ஆரோக்கியம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தன்னால் செய்து முடிக்கக் கூடிய இலட்சியத்தை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மோசமான முறையில் ஒருவன் வாழ்ந்து வந்தால், அப்படிப்பட்ட பரிதாபமான நிலைக்கு, அவன் ஒருவன்தான் பொறுப்பாளியாக இருக்க முடியும். ஒருவன் வாழ்க்கையில் தோல்வி ஒன்றையே சந்தித்து வந்தால் அதற்கு அவனைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.
விதி என்று ஒன்றும் கிடையாது. தான் விரும்பும் எதிர்காலத்தை ஒருவன் கட்டாயம் தன் உழைப்பின் துணைகொண்டு அடைய முடியும்.
ரோஜாவாக மலர ஒருவனுக்கு திறமையும் வாய்ப்பும் சூழ்நிலையும் இருக்கும்போது, எருக்கம்பூவாக அவன் மலர்ந்தால், அது அவனுடைய சோம்பேறித்தனத்தால் ஏற்பட்டதாகத்தான் இருக்க முடியும்.
ஒருவனது முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைக்கல்லாக தயக்கம் இருக்கிறது. தயக்கத்தோடு செய்யும் காரியங்கள் வெற்றி பெறாது என்பதால் தயக்கத்தை நமது வாழ்க்கையிலிருந்தே அகற்றி வீரக்குரலைக் கேட்டு வீறுநடைபோடுங்கள்.