பல துறைகளில் அவர் வித்தகராக இருந்தார். பின்னாளில் பெரிய சாதனையாளராக அவர் ஆகக்கூடும் என்று அவரை இளம் வயதில் பார்த்த யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க பாட்டார்கள்.
பள்ளியில் அவர் அப்படியொன்றும் கெட்டிக்கார மாணவராக இருக்கவில்லை. அவருக்கு ஏற்பட்டது போன்ற சோதனைகள்வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவர் அத்தனை இன்னல்களையும் கடந்தார்.
அவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அவரது தந்தை காலமாகி விட்டிருந்தார். தாயார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய் வழிப் பாட்டியிடமே அவர் வளர வேண்டியதாயிற்று.
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தன் தாய் முகத்தைப் பார்க்கவே இல்லை. பாட்டி மிகவும் அன்பாகக் கவனித்துக் கொண்டார் என்றாலும் அவருக்குப் பெற்றோரைப் பிரிந்து வாழும் வாழ்க்கையால் தன் மதிப்புக் குறைவாகவே இருந்தது.
தான் ஒரு திறமைக்குறைவான சிறுவன் என்றுதான் அவர் தன்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தார். மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதற்குத் தயக்கம் காட்டினார். இதனால் அவருடன் படித்து வந்த மாணவர்கள் அவரைக் கேலி செய்தார்கள்.
உடன் படிப்பவர்களின் எந்த நடவடிக்கைகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டார். இப்படி ஒதுங்கி வாழும் இயல்பினால் அவரால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றார்
இதனால் அவர் தனது வகுப்பு மாணவர்கள் மத்தியில் கேலிக்குரியவராக ஆனார். ஒரு நாள் அவருடன் படித்து வந்த ஒரு தடியன் இவரை நையப் புடைத்து விட்டான். இவன் எங்கே நம்மை எதிர்க்கப் போகிறான் என்பது அவனது நினைப்பு.
ஆனால் இவர் அந்த முரடனை அடித்து வீழ்த்திவிட்டார் இதைப் பார்த்த அவருடைய வகுப்பு மாணவர்கள் ஆச்சரியத்தால் விழி பிதுங்கிப் போனார்கள். அவருக்கே கூட இது பெரும் வியப்பைத் தந்தது.
எப்படி அந்த முரட்டு மாணவனை அடித்து வீழ்த்த முடிந்தது என்று அவருக்கே ஆச்சரியமாக இருந்தது அவருடைய இந்தத் துணிச்சலுக்கு காரணம் அவரது எதிர்பாராத கிராமப்புற வாழ்க்கைதான் காரணம் பாட்டியின் பண்ணையில் அவருக்கு உதவியாகப் பல வேலைகளைச் செய்து வந்ததன் மூலம் பெற்ற உடல் திறன் அவருக்கு அந்த சமயத்தில் உதவியது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவரது பள்ளி மாணவர்கள் அவரை மிகுந்த மரியாதையோடு நடத்த ஆரம்பித்தார்கள். இவர் பெரிய தலைவர் ஆகிவிட்டார். இது அவருக்குள் இருந்த தன் மதிப்புக் குறைவை மாற்றி அமைத்தது.
அதன் பிறகு தான் செய்யும் காரியம் எதையும் தன்னம்பிக் கையோடு செய்யத் தொடங்கினார். அதற்குப் பிறகு அவருக்குப் படிப்பது எளிதாயிற்று. தேர்வுகளில் மிக நல்ல மதிப்பெண்களை அவரால் பெற முடிந்தது. அப்புறம் வாழ்நாள் முழுவதும் அவர் சாதித்துக் கொண்டே இருந்தார்.
அவர் யார் என்று தெரிகிறதா? புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்து சொன்னவர் வெள்ளை ஒளியில் ஏழு வண்ணங்கள் இருக்கின்றன என்பதை நிரூபித்தவர் கால்குலஸ் என்னும் கணித வகையை அறிமுகம் செய்தவர் அவர்தான் ஸர் ஐசக் நியூட்டன்.
இதுபோல் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி நடக்கக் கூடும். அப்போது நம்முடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வெற்றிப் பாதைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.