

என்னால் அது முடியும் அவசியம் நான் அதை செய்து முடிப்பேன் என்று தன்னை திடமாக எவனொருவன் நம்புகிறானோ அவன் முன்பு முன்னேற்ற தடைகள் எல்லாம் நொறுங்கிப்போகும். அவனை பிறர் இகழ்ந்தாலும் இழிவாகப் பேசினாலும் அல்லது அவனைப் பற்றி தாழ்வாக எழுதினாலும் சிறிதளவு கூட அவனை தோல்வியுறச் செய்யாது.
எவ்வளவு பெரிய இடையூறுகள் ஏற்பட்டாலும் அவனுடைய விழிகள் மட்டும் தன் குறிக்கோளை அடையும் வழியிலேயே நிற்கும். இதனால் அவன் முன்னேறி செல்வதை முன்னேற்றத்தை எவராலும் தடுக்க இயலாது.
நீங்கள் நல்ல வேலை பார்க்க வேண்டும் என விரும்பினால் வெற்றி பெற்ற மன்னன்போல தெளிந்த முகத்துடன் தேர்வு குழுவினர் கூடியிருக்கும் அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். உங்களுடைய உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கை வெளியே ஒளி காணவேண்டும்.
அவர்கள் எத்தகைய நபரை தேடிக் கொண்டிருக் கிறார்களோ அத்தகையவராய் நீங்கள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். ஆற்றல் உள்ள அறிஞனாகவும் வேலைகளை விரைந்து முடிக்கின்ற உழைப்பாளியாகவும் அவர்கள் முன்பு நீங்கள் திகழவேண்டும்.
உங்களை நம்பியே நீங்கள் வாழ்வதுதான் உங்களுக்கு செல்வமும் சிறப்புமாக இருக்கிறது. உலகத்திலேயே உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும்தான் நிகரில்லாத மூலதனம் ஆகும். இடையூறுகளை எல்லாம் அழிப்பதும், அரும்பெரும் செயல்களை எல்லாம் செய்வதற்கும் செய்யப்போவதும் நம்பிக்கையே ஆகும்.
மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய ஆற்றலில் தளராத நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் விடுதலைப் போரில் அவரது நம்பிக்கை பன்மடங்காக பெருகியது. அக்காலத்தில் ஆங்கிலேயருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். உலக நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கு ஆங்கிலேயருக்கு சொந்தமாய் இருந்தது. ஆங்கிலேயர்களின் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை என்ற செய்தி நிலவி வந்தாலும், ஆங்கிலேயரின் பிடரி மயிரை பிடித்து ஆட்டியது காந்தியடிகளிடம் இருந்த தளராத தன்னம்பிக்கையே ஆகும்.
படைபலம் இன்றி தன்னம்பிக்கை கொண்டு பாரத நாட்டின் அடிமை தலையை அறுத்தெறிந்தவர் அண்ணல் காந்தியடிகள். உறங்கிக் கிடந்த பாரத மக்களை தட்டி எழுப்பி ஒற்றுமைப்படுத்தியது அவர் கொண்டிருந்த தன்னம்பிக்கையின் செயலே ஆகும்.
எந்த ஒரு காரியத்தை துவங்கும் பொழுதும் 'இதில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக ஒரு நிலைப்பட்டு எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். உங்களுடைய உறுதிபாட்டிலேயே பாதி வெற்றி உறுதியாகிவிடும்.
மாவீரன் நெப்போலியன், நான் எதை மேற்கொண்டேனோ அதில் வெற்றி பெற்றேன். காரணம் நான் அதை முழு மனதுடன் விரும்பியதே என்றான். ஆகவே உங்களை மட்டும் நம்பி உயர்வான இடத்திற்கு செல்லுங்கள்.