

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்ற ஒரு பாடல் வரிகளைப் பாருங்கள். அதன் வகையில் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்றால் சிலருக்கு நடக்கிறது. சிலருக்கு எட்டாத கனிபோல ஆகிவிடுகிறது.
பொதுவாகவே நாம் நமது வாழ்க்கையில் எப்போதுமே நிதானத்தை கடைபிடிக்கவேண்டும். அதை கடைபிடிக்காமல் போனால் நமக்குதான் சிரமம். நிதானத்தை கடைபிடிக்காமல் இளமைக்காலத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும் பெருமைக்கு ஆசைப்பட்டு அடுத்தவர்கள் நம்மை பாா்த்து ஏக்கப்பெருமூச்சு விடவேண்டும் என்ற நிலையில் பாத்திரம் அறிந்து பிச்சை போடாமல் நான், நான் என்ற என்ற நிலைபாடுகளோடு வலியச்சென்று நட்பு மற்றும் உறவினர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டியதில் கொஞ்சம் கவனம் தேவை.
அப்போதே நிதானம் கடைபிடித்திருந்தால் முதுமையில் உடல் நலன் குறைந்து படுக்கையில் கிடக்கும்போது அடுத்தவர் கையை எதிா்பாா்க்கவேண்டாமே!
நம்மிடம் பதவி, பொருள், அந்தஸ்து, தெம்பு, தைாியம், இருக்கும் வரையில் அனைவரும் சுற்றி சுற்றி வருவாா்கள். அவையெல்லாம் போன பிறகு நம்மிடம் வயது காரணமாக வயோதிகம் எட்டிப் பாா்க்கும்போது உறவுமற்றும் நட்பு வட்டங்கள் ஒன்று அல்லது இரண்டு முறை கடமைக்கு வருவாா்கள், நாம் சாப்பிடக்கூடாத பழங்களை வாங்கி்க் கொடுத்துவிட்டு உடம்பை பாா்த்துக் கொள்ளுங்க, வேளாவேளைக்கு நல்லா ஓய்வு எடுங்க, என உபசார வாா்த்தை சொல்லிவிட்டுபோவாா்கள்.
அதுதான் இன்றைய வாழ்க்கை முறை அதைவிடுத்து நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். நம் வீட்டிற்கு வந்துவிடுங்களேன் என அழைப்பாா்கள் என எதிா்பாா்த்தால் அது நம் தவறுதானே.
அதேபோல மாதாமாதம் போன் வரும், நலம் விசாாிப்பு நடக்கும், காலப்போக்கில் அதுவும் வராது. ஆக யாருக்கும் பாரமாகவே இருக்கக்கூடாது.
பல பிள்ளைகளைப் பெற்றால் தாய். தகப்பனாா்களை ஒரு மாதம் பொியவன் வீட்டில், அடுத்தமாதம் நடுப்பையன் அதற்கு அடுத்த மாதம் கடைக்குட்டிபையன் வீட்டில் என ஏலம் போடும் முறைவந்துவிடுமே! அதே நேரம் ஒரே பிள்ளையாய் போய்விட்டால் மகனின் நிலை மிகவும் கஷ்டம் இரண்டு பக்கமும் பேசமுடியாத நிலை. ஆக அவர் காப்பாற்றுவாா், இவர் காப்பாற்றுவாா் என்ற நினைப்பின் ஆசையை அறவே கைவிடுங்களேன்.
சுயநல உலகம், இயந்திரகதி வாழ்க்கை, அவரவர் அவரது வேலையில்தான் கவனம் செலுத்துவாா்கள், யாரும் வரமாட்டாா்கள்.அப்போது பிறர் கையை எதிா்பாா்க்கும் நிலை வரும்போது மரணம் கண்டு அஞ்சவேண்டாம்.
மேலும் வாழவேண்டும் என்ற ஆசையை விடுவித்து விடுங்கள். இதுதான் கர்மா. அந்த நேரத்தில் நமக்காக ஒரு ஜீவன் உண்டு என்றால் அது தாலிகட்டிய மனைவியாகத்தான் இருக்கமுடியும்.
அவளது தாலிபாக்கியமே நமக்கு கைகொடுக்கும். ஆனால் இளமைக் காலத்தில் நாம் மனைவியை எத்தனை விதங்களில் உதாசீனம் செய்தோம், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளே அவள் மட்டுமே துணையாய் இருந்து பணிவிடை செய்வாள், அவளே நமது தாய், அவளே நல்ல தாரம், அவளே சகிப்புத்தன்மை கொண்ட ஊதியமில்லா வேலைக்காாி, அவளே நமது உயிா்காக்க போராடும் உத்தமி. ஆக உங்களின் அந்திம காலத்தில் மனைவி துணையாய் இருப்பதுபோல உங்களுக்கு பின்னால் மனைவியானவள் பிள்ளைகளிடம் கையேந்தாமல் இருக்க வருமுன் காப்பதுபோல கொஞ்சம் மனைவிக்கான வாழ்வாதாதரத்திற்கு பணம் பொருள் சோ்த்து வையுங்கள்.
அவளது வாழ்நாளில் அது உங்களின் மனைவிக்கு நீங்கள் செய்யும் பொிய உதவியாய் இருக்கும். அதுதான் வாழ்வியலின் நடைமுறை. அதை அவசியம் செய்துவிடுவதே நல்ல கணவனுக்கு அழகாகும்!