

திறமை உடைய அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை. இதற்குக் காரணம் திறமை உடைய பலர் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருப்பதுதான்.
தாழ்வு மனப்பான்மை நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. 'என்னால் இந்தச் செயலைச் செய்ய முடியுமா?' என்று சந்தேகம் ஏற்பட்டால் நிச்சயமாக உங்களால் அந்தச் செயலைச் செய்யவே முடியாது.
'என்னால் நிச்சயம் அதைச் செய்ய முடியும்' என்று நம்பிக்கையோடு (Self Confidence) ஒரு செயலைச் செய்தால் நிச்சயமாக அந்தச் செயலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
உளவியல் ரீதியாக "முடியும்" என்ற நம்பிக்கை நம்முன் உறுதியாக இருக்கின்றபோது நாம் புதிய உத்வேகத்துடன் செயல்படுகிறோம். நம்முடைய இலக்கை அடைகிறோம். எத்தனை தடைக்கற்கள் எதிர்ப் பட்டாலும் நம்மால் சமாளித்து வெற்றிபெற முடிகிறது.
முடியும் என்று நினைத்தால்தான் மனிதன் இன்று ஆறறிவு ஜீவராசியாக இருக்கிறான். முடியாது என்று நினைத்திருந்தால் அவன் இன்னும் ஐந்தறிவு ஜீவராசியாகவே காடுகளில் அலைந்து கொண்டிருப்பான்.
பிரெஞ்சு சரித்திரத்தையே மாற்றியமைத்த மாபெரும் வீரரான நெப்போலியன் பிறப்பால் தாழ்ந்தவர். மிகவும் குள்ளமான உருவத்தை உடையவர். வீரனுக்குத் தேவையான ஆஜானுபாகுவான தோற்றம் இல்லாதவர்.
ஆனாலும் நெப்போலியன் தன்னுள் தாழ்வு மனப்பான்மையை வளரவிடவில்லை. தன்னுடைய குறைகளை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. முடியாது என்பதே என் அகராதியில் கிடையாது என்றார் நெப்போலியன்.
அவரது மனத்திடம்தான் வரலாற்றின் ஏடுகளில் அவரது பொற்பெயரைச் செதுக்கச் செய்திருக்கிறது.
ஒவ்வொரு சாதனையாளரும் இப்படித்தான். தாழ்வு மனப்பான்மையைத் துரத்தியடித்து விடுகிறார்கள். தன்னுள் அதை அண்ட விடுவதேயில்லை. தாழ்வு மனப்பான்மை நம் நம்பிக்கையைக் கரையான்போல அரித்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
காந்தியடிகளையே எடுத்துக்கொள்வோம். சிறுவயதில் அவரும் ஒரு சராசரி மனிதனைப்போலத்தான் இருந்தார். ஆனால் அவருக்குத் தன்னம்பிக்கை அதிகம்.
"இந்தக் கிழவனா இந்தியாவை நம்மிடமிருந்து மீட்கப் போகிறார்?" என்று எண்ணி நகையாடிய ஆங்கிலேயரை நம் நாட்டைவிட்டே துரத்தினார்.
அவர் தமக்கு வயதாயிற்று. இனிமேல் தன்னால் எதையும் சாதிக்க முடியாது. நாம் வாழ்வில் தளர்ந்துவிட்டோம் என்று அவர் கருதினாரா.? இல்லையே!
வயதான காலத்தில்கூட அவர் ஓர் இளைஞரைப் போலத்தானே நடந்துகொண்டார். குறைகள் இயல்பானவை. அவற்றை தவிர்க்க முயலவேண்டுமே தவிர அது கண்டு அஞ்சக் கூடாது. நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்ற தாழ்வுமனப்பான்மை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
வாழ்க்கை என்பது ஒரு முறைதான். இப்பூமிக்கு வந்தோம் சாதித்தோம் என்று வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.