பிரச்னைகளை எப்படிக் கையாள்வது? ஒரு எளிய வழிகாட்டி!
வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்போது, முதலில் பிரச்னைகள் எங்கே ஆரம்பம் ஆனது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். (Motivational articles) பிரச்னைக்குரிய நபர்கள் வெளியில் இருந்தால், அவர்களை தூரத்தில் வையுங்கள்.
அந்த பிரச்னை உங்களிடம் இருந்தால் அதற்கு தீர்வுக்கான விடயம் தேடுங்கள். கண்ணத்தில் கைவைத்து உட்கார்ந்து விடாதீர்கள். நிம்மதி என்றும் உங்கள் அருகில் நிலைத்திருக்கும்.
வாழ்க்கையில் பிரச்னைகள் என்பது நிலவைப் போன்றது நிலவு தேய்பிறையில் ஒருமுறை காணாமல் போகும். வளர்பிறையில் ஒரு முறை முழுமையாக தோன்றும்.
அப்படி என்றால், பிரச்னைகளை நீங்கள் சரியாக கையாண்டால், அது உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி மறைந்து விடும். அப்படி செய்யத்தவறினால், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒருநாள் பூதாகரமாக தோன்றும்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கோபம் வருவது இயற்கை. அந்த கோபம் அடித்தளத்தில் இருந்து வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வன்மத்தின் முதல் நிலை கோபம்தான். அந்த கோபத்தை உங்கள் வாழ்க்கைக்கு கேடயமாக பயன்படுத்த வேண்டுமேயன்றி, அதனை ஒருபோதும் ஆயுதமாக பயன்படுத்த நினைக்கக் கூடாது.
வாழ்க்கையில் எப்போதும், நீங்கள் நீங்களாகவே இருந்துவிட்டால், உங்கள் உயர்வுக்கான காரணிகள் உருவாகி, அதுவே உங்களை சிறந்த ஆசானாக வழி நடத்திச் செல்லும் வல்லமை படைக்கும். அப்போது உங்கள் உள்ளத்தில் வேறு எந்த விதமான தவறான எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.
ஒருபோதும் உங்களை முந்திச் செல்லும் நபர்களை நினைத்து மனதை சஞ்சலப்படுத்தாதீர்கள். ஏனெனில் மனம் விழுந்தால், காலம் கடந்து போகும். உங்களுடைய வெற்றிக்கு வித்திடும் விதை உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தையும் நீங்கள் சரியான வழிமுறைகளோடு பின்படுத்த நினைத்தாலும், இவ்வுலகில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பிரச்னைகள் செய்ய முற்படுவார்கள் சில பில்லுருவிகள். அவர்களை கண்டு கொள்ளாமல், உங்கள் வேலையை மட்டும் மனதில் புடம் போட்டு, தடம் பதிக்க பாருங்கள்.
குடும்பங்களிலும் சுவரில் கடிகாரம் மாட்டி இருக்கும். அலுவலகங்களிலும் சுவர் கடிகாரம் மாட்டி இருக்கும். மது விற்பனை செய்யும் இடத்திலும் சுவர் கடிகாரம் மாட்டி இருக்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அந்த சுவர் கடிகாரம் விடியலின் தூண்டு கோலாக இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் சுவர் கடிகாரம் உங்களின் உழைப்பை அங்கீகரிக்கும். மது விற்பனை செய்யும் இடத்தில் இருக்கும் அதே சுவர் கடிகாரம், உங்கள் எதிர்கால வாழ்க்கையின் நல்ல நேரங்களை விழுங்கிக் கொண்டு இருக்கும் என்பதை மட்டும் புரிந்துகொண்டு செயல் படுங்கள். வாழ்க்கை பிரச்சினைகள் இல்லாமல் சிறப்பாக அமையும்.
வாழ்க்கையில் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழப் பழகுங்கள். பிரச்னைகளை களைந்து, நிம்மதியாக வாழத் தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியை எங்கும் தேடிச்செல்ல வேண்டாம். உங்களிடம் இருப்பதை வைத்துக்கொண்டு, அதற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். படிப்படியாக வளர்ந்து வந்தாலும், ஒருநாள் உயர்ந்து நிற்ப்போம் என்ற நேர்மறை எண்ணங்களை உள்வாங்கி, இன்புற்று வாழ முயற்சி செய்து, வென்று காட்டுங்கள். உங்கள் வெற்றியின் வேர்கள் ஆழப்பதிந்து, நிலையான புகழோடு வாழவைக்கும்!

