
நிறைய மனிதர்கள் சுயவிமர்சனம் என்று சொன்ன உடனேயே நம்முடைய குறைகளைக் கண்டறிவது என்று நினைக்கிறார்கள். ஏன் இன்னும் பலரும் விமர்சனம் என்றாலே தவறுகளைச் சுட்டிக்காட்டுவது என்று நினைக்கின்றனர். விமர்சனம் என்ற சொல்லுக்கு நிச்சயமாக தவறுகளைக் கண்டுபிடிப்பது என்பது மட்டும் பொருளல்ல. உங்களிடம் உள்ள நல்ல குணங்களையும் கண்டுபிடிப்பதுதான் சுயவிமர்சனத்தின் வேலை.
இன்னும் சொல்லப்போனால் நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆசுவாசமாக சற்றே அமர்ந்து நம்மையே நாம் விமர்சனம் செய்துகொள்ள நேரமே கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நேரத்திலும் நாம் நிச்சயமாக நம்மைப் பற்றிய கணிப்பீடுகளில் செலவிடுவதில்லை.
அப்படியிருக்க இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகள் உருவாவது நன்மைக்குத்தான். இதைச் சாக்காக வைத்து நம்மையே நாம் அலசிப் பார்க்கலாம். எனவே மோசமான கணிப்புகளிலும் சில நல்லவைகள் உள்ளன என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது உங்களையே நீங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பை அந்த மோசமான கணிப்புதானே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யார் அடித்தாலும் அழும்போது மோசமான கண்கள் சுத்தமாகின்றதே.
உங்களையே நீங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளும்போது அதில் ஒரு பாசிட்டிவ் தன்மை இருக்கவேண்டும். அவர் என்ன அதாவது "நான் என்ன செய்யவில்லை" என்றோ" நல்ல மதிப்பீடு பெற அவர் என்ன செய்தார்" என்றோ கேட்டுக்கொண்டால் நீங்கள் ஒரு எதிர்மறையான சிந்தனையில் செல்லுகிறீர்கள் அதாவது 'நெகடிவ்' வாகச் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அதையே சற்று மாற்றி "நான் சிறப்பாகச்செய்ய என்ன செய்திருக்க வேண்டும் '' அல்லது நான் இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி " என்று கேட்டுக் கொள்ளும்போது உங்கள் கேள்விகளே நல்லவிதமாக இருப்பதை நீங்கள் உணரலாம். அதனால் அவைகள் கண்டிப்பாக நல்ல பலனைத்தரும்.
ஒருவேளை நிர்வாகம் மதிப்பீடு செய்வதற்கு வைத்திருந்த அளவுகோள்களில் ஏதேனும் தவறு இருப்பதுபோல் உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் மௌனமாக அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இன்றைய சூழ்நிலையில் இல்லை.
இன்று நிர்வாகம் பணியாற்றுபவர்களுக்கு நல்ல மரியாதையை அளிக்கிறது. அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லுகிறது. ஆனால் உங்கள் மனத்தில் நிர்வாகத்தின் சில அளவுகோல்களில் இருக்கும் சந்தேகத்தை கேட்கும் விதத்தில்தான் கேட்கவேண்டும்.
அதை நிர்வாகத்திடம் மிகவும் எளிமையாகவும் ஜாக்கிரதையாகவும் கத்தாமல் நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள். கோபப்படுவதை விட நிதானமாக இருப்பதின் மூலம் நிறைய வேலைகளை சாதிக்கலாம் என்பதை மறக்காதீர்கள். நிதானமாக அதே நேரம் திண்ணமாக உங்கள் எண்ணங்களை உங்கள் மேலதிகாரியிடம் எடுத்துச் சொல்லுங்கள் .எதைச் சொல்கிறோம் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம்.
மேலதிகாரி என்றில்லை யாரிடமும் அவர்கள் கருத்துக்கு மாறுபட்டக் கருத்தைச் சொல்லலாம். ஆனால் அடுத்தவர் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லும் கலை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.