சிறுகதை - சந்தர்ப்பக் கைதிகள்!

short story...
short story...

-ஆர். வெங்கடேஷ்

ன்புள்ள கலாவுக்கு.

நலம். நலமறிய அவா.

உனக்குக் கடிதம் எழுத வேண்டும், வேண்டும் என்று மனசு அடித்துக்கொள்கிறது. என்னென்னவோ சொல்ல வேண்டும், கொட்ட வேண்டும் என்று வரிவரியாய் மனசுக்குள் வார்த்தைகள். கூடவே என்னவோ தடை. என்னவென்று தெரியவில்லை. இந்த அறைக்கு. வந்து பத்து நாட்களாகி விட்டன. ஒவ்வொரு இரவும் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அப்படியே தூங்கியும் போய்விடுவேன்.

மறுநாள் காலை எப்போதும் போல் வெப்பம். பயங்கர வெப்பம். இது நடுவே குளித்து, மூன்று பிரெட் துண்டு களைத் தின்றுவிட்டு, காத்திருக்கும் பஸ்ஸுக்கு ஓட்டம். கூடவே ஒரு நூற்றியிருபது பேர். எல்லாரும் சொந்த மண்ணை விட்டு இந்த ரியாத் புழுதியில் குப்பை கொட்ட வந்தவர்கள்.

பணம். அது மட்டும்தான் குறிக்கோள். உன்னுடையதும் அதுதானே? அதற்கான உன் மௌனப் போராட்டம்தான். என்னை இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறது.

நான் சாதாரணமானவன். கனவுகளில்லாதவன். படித்த காலத்தில், முதல் ராங்க் வாங்கினவனை தூரே நின்று ரசித்திருக்கிறேன். பொறாமைப்பட்டதில்லை.

அலைச்சலில்லை. பரபரப்பில்லை. ஒரே சீரான ஓட்டம். வேலை கிடைத்தது. சம்பளம் வந்தது. அது போதும். மிச்சம் பிடிக்க முடிந்தபோது மிச்சம். கடன் வாங்கியதில்லை. ஒழுங்காய் சாதம் போட்ட அம்மா. தேவைப்பட்ட விஷயம் மட்டும் கேட்ட அப்பா.

உன்னைப் பார்த்துவிட்டு அம்மா ஓஹோ என்று சொன்னபோதும் ஏதும் சலனமில்லை. பார்த்தபோதும் ஒன்றுமில்லை. பிடித்திருந்தது. கல்யாணமும் ஆயிற்று. என்னைப்போல் நீயும் ஒருத்தி. அப்படித்தான் நினைத்திருக்கிறேன்.

உன் எண்ணங்கள் எனக்குத் தெரியவில்லை. நாலு வரி சேர்ந்து பேசினது, கல்யாணமான மூன்று மாதம் கழித்துத்தான். உன்னைப் பற்றித் தெரியாமலே இருந்திருக்கிறேன். தெரிந்தபோது... என்ன சொல்வது?

ந்தப் பேச்சு இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்போது முதல்முறையாய் கம்பெனி லாக் அவுட் ஆனது. திறந்து விடும் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்த நாட்களவை.

நல்ல மத்தியானம். தூங்கி எழுந்து புதுக்காப்பியோடு முற்றத்துத் தூணில் சாய்ந்திருந்தேன் .

"பேக்டரி எப்போ திறப்பா?"

"திறந்துடுவா. பத்து, பதினஞ்சு நாளாகும். யூனியன்ல போய்ப் பேசிண்டிருக்கா."

"இந்த லாக்-அவுட் ஆன நாளுக்கெல்லாம் சம்பளம் தருவாளா?"

'தெரியலை. அரைச் சம்பளம் தரலாம். அதான் திறந்துடப் போறாளே. அப்புறம் என்ன?"

"அப்போ, இது மாதிரிதான் லைஃப் புல்லா இருக்குமா?"

"இது மாதிரின்னா?"

''பேக்டரிய மூடிண்டு, திறந்துண்டு...."

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். கம்பெனியில் சேர்ந்த முதல் ஐந்து வருடங்களிலேயே இரண்டு முறை லாக்- அவுட் ஆகியிருந்தது.

"அப்படின்னு இல்ல. நன்னாதான் போயிண்டிருக்கு கம்பெனி. ஒரு சில பேர் தகராறு பண்றாங்க. அதனால லாக்அவுட் ஆகிடறது.''

“சரி. அதுக்காக, இந்தக் கம்பெனிய நம்பிண்டே இருக்க முடியுமா?”

அதுவரை யோசித்திராத விஷயம். இப்படியே போய்க்கொண்டிருப்போம் என்றுதான் நினைத்திருக்கிறேன். லாக்அவுட்டானால் கொஞ்சம் சிரமம். திருப்பியும் அடித்துப் பிடித்து திறந்துவிடுவார்கள். நாலாயிரம் தொழிலாளிகள் வயிற்றில் அடிக்க யாருக்கு மனசு வரும்? தைரியம்தான். நம்பிக்கைதான்.

இரண்டாவது முறை லாக்அவுட் ஆனபோது, உனக்கு எட்டு மாதம். செலவுக்குப் பணமில்லாதபோது, பெரியண்ணா உதவினார். பிரகாஷ் பிறந்தான். சந்தோஷமான அந்த நேரத்தில் மீண்டும் உத்யோகம் பற்றிப் பேச்சு வந்தது. இப்போது புதுக் காரணம். புது வேகம்.

"இவன வளக்க வேண்டாமா?  படிக்க வெக்க வேண்டாமா? இதுமாதிரி லாக்அவுட் ஆயிண்டிருந்தா, எதிர்காலத்துல என்ன பண்ணப் போறோம்?"

பிரகாஷை மடியில் போட்டுக்கொண்டு கேட்டாய். நியாயமான கேள்வியாகத்தான் தோன்றியது. ஆனால் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்? படிப்பு குறைவு. ஒவ்வொருவரிடமும் சொல்லி, சொல்லிவைத்து, பெறப்பட்ட உத்தியோகம். எந்த உறுதியில் வேலையை மாற்றிக்கொள்ள முடியும்? தெரியவில்லை. நிலைமை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வாழ்வதுதான் சரியென்று தோன்றியது. சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லை. எதிர்காலம், அது நம் கைகளிலில்லை. எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கும்.

ப்புறம் ரேவதி பிறந்தாள். உன் கோபம் அதிகமானது. இப்போதே அவள் கல்யாணம் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாய். விளையாட்டாய் நான் சொன்னவைகளை விபரீதமாக்கிக்கொண்டாய்.

"ரேவதிக்கு நாம பாக்கணுமான்ன? அவளே பாத்துக்கறா!"

"ஏன், நீங்களே ஓடச் சொல்வேள் போல யிருக்கு?"

"ஓடினா என்ன பண்ண முடியும்?"

"என்னால நாண்டுண்டு சாக முடியும்!"

நான் அதிர்ந்து போனேன். உள்ளடங்கினேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை பணம்தான் என்ற உன் எண்ணம் புரிபட்டது. இந்த வெளிச்சத்தில் உன் பிற செயல்களும் புரிபட்டன. நல்ல புடைவை, நல்ல நகை, சொந்த வீடு. சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகம், வாழ்வு என்ற லட்சியங்கள் தெளிவாயின.

நான் லட்சியங்களற்று வளர்ந்தவன். உன் லட்சியங்கள் மலைப்பு தந்தன. பயமுறுத்தின. அதைவிட, அவையெல்லாம் தேவையா என்றும் யோசித்தேன். எனக்குத் தேவையில்லை என்று தோன்றியது.

இதன்பிறகு, நான் ஒரு பெரிய தப்பு செய்தேன். என் லட்சியமின்மையைச் சொல்லியிருக்கக் கூடாது. சொல்லிவிட்டேன். உன் மெளனப் போராட்டத்தின் தொடக்கம் இங்குதான்.

அப்புறம் உன் பேச்சில், செயலில், உணர்வில் உத்வேகம் இல்லை. கடனுக்கு மாரடிக்கத் தொடங்கினாய். என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தியது தெரியுமா, உனது புழுக்கம்? உனது வரட்டுத்தனம் என்னை வாட்டியது.

நான் வேகமற்றவன்தான். லட்சியமற்றவன்தான். ஆனால் நான் உணர்வற்றனில்லை. எல்லோரும் சந்தோஷிப்பது எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் புத்தாடை பூண்டு பண்டிகைகளில் குதூகலிப்பது பிடிக்கும். நாலு பேரோடு சத்தமாய்ப் பேசிக்கொண்டு சாப்பிடுவது பிடிக்கும்.

ஆனால், எல்லாவற்றிலும் சந்தோஷம் அருகியது. மந்தத்தனம் புகுந்துகொண்டது. மௌனமாய் உன்னை நீ வாட்டிக்கொள்வது வீடு முழுவதும் வியாபித்தது. வீட்டுக்கு வரவே பிடிக்கவில்லை. சில சமயம், அப்படியே எங்காவது நடந்து போய்விடலாமா என்று தோன்றியதுண்டு. உன்னை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சுருக்கம் இல்லாத 8 கோடைக்கால பயண ஆடைகள்!
short story...

பணம்தான் இன்றைய உலகின் மகிழ்ச்சிக்கான அடிப்படை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. உன்னிடம் பேசுவதுகூட இயல்பில்லாமல் போனது. யாரோ நான்காவது நபரிடம் காட்டும் முகம். ஒரு நிலைக்குப் பின் லேசான பயம்கூட தலையெடுக்கத் தொடங்கியது.

சொல்லி வைத்தாற்போல். கம்பெனியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்கிக்கொண்டது. டைரக்டர்கள் மாறினார்கள். கருணையெல்லாம் உதவாது என்றார்கள். உற்பத்தி வேண்டும். காசு வேண்டும். மனிதர்களைவிட இயந்திரங்கள் வாய்பேசா சேவகர்கள். நாலாயிரத்தை இரண்டாயிரம் பேராக்கு. ‘வி.ஆர்.எஸ்.ஸில் வீட்டுக்குப் போ' என்றார்கள். அப்போதுதான் கம்பெனியை மீண்டும் லாபமடையச் செய்ய முடியும் என்றார்கள்.

எவ்வளவோ சண்டை போட்டபோதும். பதினைந்து வருடம் குப்பை கொட்டியது போதும், போடா' என்று விட்டார்கள். வீட்டுக்கு வந்து உட்கார்ந்தபோது. வயது நாற்பத்திரண்டு. உடம்பு, ஒரு சுகத்துக்குப் பழகி விட்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது, பயமாக இருந்தது.

வேலை இல்லை. ஜீவனத்துக்கு, செட்டில்மெண்ட் பண்ணி அனுப்பிய பணத்தின் வட்டிதான். சிறியவர்களாகவும் இல்லாமல், பெரியவர்களாகவும் இல்லாமல் இரண்டு குழந்தைகள். கூடவே புழுக்கத்தில் இறுகிப்போன நீ.

எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.

அப்போதும் உனக்குக் கருணையில்லை. உன் பார்வை,  என்னைக் குத்தம் சொல்லியது. உன் செயல்கள், என்னை இகழ்ந்து பேசின. நான் துவண்டேன்.

நடந்தவைகளுக்கெல்லாம் நானா பொறுப்பு?  உலகம் இழுத்த இழுப்புக்கு நான் ஆடியிருக்கிறேன். வேறென்ன செய்ய முடியும்? உனக்கேன் இது புரியவில்லை? எனக்குப் புரியவைக்கவும் தெரியவில்லை.

விளைவு, ஒதுங்குதல். உனக்குத் தேவையானதை உனக்கும், எனக்குத் தேவையானதை எனக்கும் அருள இறைவனிடம் வேண்டினேன். யார் யாரிடமோ சொல்லி, ஹெவி வெஹிகல் டிரைவராக ரியாத் வந்து விழுந்தேன்.

சம்பளம் ரியாலில். இன்னும் இரண்டு வருடங்களில் உன் லட்சியங்கள் பூர்த்தியாகி விடலாம். அப்புறம்,  உன் வார்த்தைகளில் 'உட்கார்ந்து சாப்பிடலாம்.'

ஆனால், இதனாலெல்லாம் என்ன பயன்?

அல்ப பணத்துக்காக அந்நிய தேச வாசம். தேவையில்லாப் பிரிவு. குழந்தைகளற்ற தனிமை. ஏன் என்று கேட்கவும் ஆளில்லை. கேரியர் சாதம். கண்ணில் விஷம் கொண்டு காத்திருக்கும் மேலாளர். பேசினால், வீட்டுக்குத் துரத்தி விடுவார்கள். அடிமை வாழ்வு.

சந்தோஷமில்லை. வாழ்க்கைக்கு எது முக்கியமோ, அது இல்லை. அப்புறம் என்னத்துக்கு வாழ்க்கை?

யார் மேல் கோபப்படுவது என்று தெரியவில்லை. என்னை வியாபித்திருப்பது மொத்தமும் நீதான். என்னை இயக்குவதும் நீதான்.

ஏன் என்னை இப்படிக் கொல்லாமல் கொல்கிறாய்?

வருத்தத்துடன், எம். ஆர். கண்ணன்.

இதையும் படியுங்கள்:
நன்றி சொல்ல நேரமில்லையா? அடடா!
short story...

றுநாள் தூங்கியெழுந்த கண்ணன். அவசரமாய் கடிதமெழுதியபோது, மேற்கண்ட கடிதத்தின் முதல் இரண்டு வரிகள் மட்டுமே இருந்தன. அப்புறம், குழந்தைகளின் நலம் விசாரித்து, படிப்பு விசாரித்து, வங்கி மூலம் அனுப்பியிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி, கலாவுக்குத் தன் பூரண அன்பைத் தெரிவித்திருந்தான்.

பின்குறிப்பு:-

கல்கி 12  நவம்பர்  1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com