முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கூச்ச சுபாவம்! எப்படி மாற்றுவது?

Motivation Image
Motivation Imagepixabay.com

சிலர் இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும். வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதருக்கு பலருடன் பேசவும் பழகவும் வேண்டியிருக்கும். அதனால் கூச்ச சுபாவத்தை மாற்றிக் கொண்டால் தான் எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். கூச்சத்தை அகற்றி தன்னம்பிக்கையின் அளவை அதிகரிக்க சில யோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. முதலில் உங்களுக்கு கூச்ச சுபாவம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். கூச்சம் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் உங்களது செயல்களை பாதிக்கும். எனவே அதைத் தவிர்க்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

2. பிறருடன் பேச வேண்டும் என்று மனது ஆசைப்பட்டாலும் கூச்ச சுபாவத்தினால் அதை தவிர்ப்பது உண்டு. அதிலும் புதியவருடன் ஒரு உரையாடலை தொடங்க வேண்டும் என்றாலே சிலருக்கு கை கால்கள் தந்தியடிக்கும். உள்ளங்கை வியர்த்து விடும். பஸ் ஸ்டாப்பில் ஒருவரை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், ‘’இன்னைக்கு பஸ் வழக்கமான டயத்துக்கு வருமா இல்லையான்னு தெரியல, கிளைமேட் வேற ரொம்ப மோசமா இருக்கு’ என்பாத்து போன்ற சிறிய உரையாடல்களை பேச ஆரம்பிக்கலாம்.

3. ஒருவர்  தனக்குள்ளேயே நேர்மறையாக பேசி பழகுதல் வேண்டும். அது அவர்களுக்கு மிகப்பெரிய சக்தியை தரும். தன்னம்பிக்கையின் அளவையும் உயர்த்தும். ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நமது மனது அதை நம்ப வேண்டும். ‘’நான்   பிறருடன் நன்றாக பழகுவேன்’’ என்று அடிக்கடி தனக்குள்ளேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், பிறரிடம் நட்புணர்வோடு பழகத் தேவையான நம்பிக்கையும் அது கொடுக்கும்.

4. பலரும் கம்போர்ட் சோன் எனப்படும் தனக்கு சௌகரியமான நிலையிலேயே இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வார்கள் ஆனால் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் நிகழாது. கூச்சத்தை அகற்ற வேண்டும் என்றால் அந்த சௌகரியமான எல்லையில் இருந்து வெளியே வர வேண்டும். அதாவது பிறருடன் பேச வேண்டும் என்கிற அந்த செயலை ஆரம்பிக்க வேண்டும். இந்த செயல் அசௌகரியமாக உணர்ந்தாலும் அது போகப் போக வெற்றியைத் தரும்.

5. ஒரு புதியவருடன் சிறிய அளவில் பேசினாலும் அது உங்களுக்கு வெற்றிதான். உங்களுக்கே ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஸ்வீட் சாப்பிட்டு அந்த வெற்றியை கொண்டாடுங்கள். சின்ன சின்ன வெற்றிகளை கொண்டாட ஆரம்பித்தால் நீங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய கூச்ச சுபாவம் மறைந்து கொண்டு வருகிறது என்று அர்த்தம். 

6. எப்போதும் உங்கள் மேல் கருணையோடு இருங்கள். கூச்சத்தை ஒழிக்கிற முயற்சியில் அவ்வப்போது சிறு தடங்கல்கள் வந்தாலும் அதற்காக உங்களை கோபித்துக் கொள்ள வேண்டாம். இது சகஜம்தான் என்று நினைப்போடு மீண்டும் உங்கள் முயற்சியை தொடங்குங்கள். வாழ்க்கை என்பதே ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான். அதனால் உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் தட்டிக் கொடுத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே ஒரு நல்ல நண்பனாக மாறிக்கொண்டு கருணையோடும் புரிதலோடும் உங்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சருமத்திற்கு பீட்ருட் தரும் ‘அழகு’ நன்மைகள்!
Motivation Image

7.  இன்று புதிதாக எத்தனை பேரிடம் பேசினீர்கள், எத்தனை வார்த்தைகள் பேசினீர்கள், எத்தனை நிமிஷங்கள் பேசினீர்கள் என்பதை குறித்துக் கொண்டே வந்தால், தினமும் இரவு படுக்க போகும் முன்பு அந்த நோட்டை எடுத்துப் பார்த்தால் உங்கள் மனம் மகிழும். உங்களால் முழுவதுமாக இந்த கூச்ச சுபாவத்தை விட்டு விட முடியும் என்பதும் புரியும். 

8.எப்போதும் உங்களுக்கு சப்போர்ட் செய்யக்கூடிய ஊக்குவிக்க கூடிய ஆட்களுடன் இருங்கள். அவர்கள் உங்களுக்கு தன்னம்பிக்கையையும் நேர்மறையான எண்ணங்களையும் கடத்துவார்கள்

9. சற்றே பொறுமையாக இருங்கள். ஒரு இரவிலேயே அல்லது வெகு விரைவிலேயே கூச்ச சுபாவத்தை ஒழித்து விட முடியும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு சில காலம் பிடிக்கும். அதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக மிக அவசியம் என்பதை உணருங்கள். பொறுமையாக முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஒரு நாள் நிச்சயமாக கூச்ச சுபாவம் மாறி, வெற்றிகளை எட்ட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com