
நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டை அடிப்பவர்களில் பலர் நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.அதுவும் மேடைகளில் ஏறிப் பேசவேண்டும் எனில் அவ்வளவுதான் வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் அனேகம்.
வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்தக் கூச்சத்தினால் தொடர் தோல்விகளையே சிலர் சந்திக்கின்றனர். இந்தக் கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என்று பலர் புலம்புவதைக் கேட்டு இருப்போம்.
சின்னத் தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். கூச்ச இயல்பு உள்ளவர் தம் குறைகளையே பெரிதுபடுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறார்கள். குறைகளை உணர்ந்துகொள்ள வேண்டியதுதான்.
ஆனால் அந்தக் குறைகள் என்னென்ன, பயமா, கவலையா, எத்தகைய பயம் என்பதை அலசி, ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தக் குறைகள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்கி நிற்பதில் பயன் ஏதும் இல்லை. தன்னால் மற்றவர்களைப்போல இயல்பாகவும், இயற்கையாகவும் பேச முடியும் என்ற நம்பிக்கை மிகத்தேவை.
இந்த நம்பிக்கை வாய்ப்புகளை எதிர்நோக்க உதவும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்போது வெற்றி தானாக வருகிறது. வசதிகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது என்பதில் அக்கறை கொள்ளவேண்டும்.
திருப்புமுனையாக ஏதாவது நிகழ்ந்துதான் கூச்ச இயல்பு மறைய வேண்டும் என்று காத்து இருக்கக் கூடாது. பேச்சுத் திறமையோ, வாதத்திறமையோ அவசியம் இருந்துதான் ஆகவேண்டும் என்பது இல்லை.
கலந்துரையாடலில் இயல்பாகச் சேர்ந்துகொண்டு, பேசக் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திப் பேசவேண்டும். தன்னாலும் தனிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பி உரையாட வேண்டும். சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டு பிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.
திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்த விதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால்தான் ஒரு ஆப்ரகாம் லிங்கன் உதித்தார்!
ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம். ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!
இன்னும் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள்தான்!
ஒன்றே ஒன்றுதான். கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது.
கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவர்களால்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்லமுடியும்..! கூச்சம் என்பது உங்களுக்குள் இருக்கும் திறமையை முடக்கிவிடும்.