மௌனமும் புன்னகையும் இவ்வுலகில் சாதிக்காதது எதுவும் இல்லை. மௌனமும் புன்னகையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பிரச்னைகளை தீர்க்கும். மௌனமோ பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்கும். புன்னகை என்பது எந்த ஒரு மொழியையும் மொழிபெயர்த்து செய்து விடக்கூடிய திறன் பெற்றவை. புன்னகை என்ற மந்திரம் மட்டும் நம்மிடம் இருந்தால் நண்பர்களை எளிதாக பெற்றுவிடலாம்.
முகத்தில் புன்னகையும் அகத்தில் நம்பிக்கையும் இருந்தால் போதும் இந்த உலகினை எளிதாக வென்று விடலாம். எப்பேர்பட்ட கவலைகளும் எதிராளியின் ஒரு சிறு புன்முறுவல் மூலம் கரைந்து விடும். கோபம் எப்படி நோயை உண்டாக்குமோ அதுபோல் புன்னகை என்பது சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும்.
மௌனம் மிகவும் சக்தி வாய்ந்தது. மௌனம் சர்வாத்த சாதகம் என்பார்கள். சுமுகமான நிலை இல்லாத இடத்தில் மௌனத்தை நடைமுறை படுத்தும் பொழுது சண்டையிடாமல், விவாதிக்காமல், உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழக்காமல் நம்மை கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது.
நமக்கு பிடிக்காத ஒரு நிகழ்வு நடைபெறும் சமயம் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த மௌனம் சிறந்த ஆயுதமாக பயன்படுகிறது. வெளிப்புற அமைதி (மௌனம் காத்தல்) மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை ஒரு வாக்குவாதத்திலிருந்து விலகிச் செல்லும் பொழுது நம்மால் அதன் சக்தியை நன்கு உணரமுடியும்.
பலவீனமான தருணங்களில் நாம் நம்மை இழந்து கூச்சலிடும் போது பிரச்சனைகள் அதிகமாகின்றன. அதுவே அந்த இடத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க நம் பலம் கூடுகிறது. மௌனம் நம் மனதிற்கும், ஆன்மாவிற்கும் நல்லது. அவை நம்மை அவமானப்படாமல் காக்கிறது.
சில சமயங்களில் நாம் மௌனம் காக்கும் பொழுது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் பயம் கொள்கிறார்கள். நாம் என்ன நினைக்கிறோம், என்ன நடவடிக்கை எடுப்போம் என்று தெரியாததால் தேவையில்லாமல் நம்மிடம் மோதாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.
புன்னகையால் பதட்டமான சூழ்நிலையை தணிக்க முடியும். மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், ஈர்க்கவும் முடியும். புன்னகை என்பது அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான அறிகுறிகளாகும்.மௌனமும் புன்னகையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள். இவற்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
மௌனம் எந்த இடத்திலெல்லாம் சிறந்தது தெரியுமா? நம்மைத் தவறாக புரிந்து கொள்பவர்களிடமும், புறக்கணிப்பவர்களிடமும், நம்மை விலக்குபவர்களிடமும், புண்படுத்துபவர்களிடமும் அமைதியே சிறந்த பதிலாக அமையும்.
மௌனத்திற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. சில இடங்களில் நம் மௌனம் நாம் வலிமையானவர் என்பதை உணர்த்தும். சில சமயங்களில், எந்த சூழ்நிலையிலும் யாரையும் புரிந்து கொண்டு அனுசரித்துச் செல்லும் திறன் உள்ளவர் என்று கொள்ளும். சில நேரங்களில் நம் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் பராமரிக்க உதவும். சில இடங்களிலோ நாம் ஆழமாக காயப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும். மௌனத்தாலும், புன்னகையாலும் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை.
மொத்தத்தில் மௌனமும் புன்னகையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள். உண்மைதானே நண்பர்களே!