சிறுகதை: மரக்கிளியும் கூண்டுக்கிளியும்!

ஓவியம்: பிரபு ராம்
ஓவியம்: பிரபு ராம்

குப்பிற்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியர் சிவராமன், வழியில் இரு மாணவர்கள் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.

கார்த்திக் கேட்டான் “என்னடா பரீட்சைக்குப் படிச்சுட்டியா?”

கண்ணன் சொன்னான் “என்ன படிச்சாலும், பரீட்சைல யோசிக்காம, ஏதேனும் தப்பு பண்ணிடறேன். மார்க் குறைஞ்சு போயிடறது. பரீட்சை எழுதறதுக்கு முன்னாடியே இன்னிக்கு என்ன தப்பு பண்ணப் போறேனோன்னு பயந்துண்டே எழுதறேன்.”

சிவராமன் மனதிற்குள் சிரித்துக்கொண்டார். மாணவர்களுக்கு வரவர தன்னம்பிக்கை குறைவதுதான் இதற்குக் காரணம் என்று அவருக்குப் புரிந்தது. இன்று தன்னம்பிக்கையின் அவசியம் பற்றி மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.

வகுப்பில் நுழைந்த சிவராமன் கதை சொல்ல ஆரம்பித்தார்.

ழகு என்ற கிளி ஜோசியன், ஜோசியம் சொல்ல ஒரு கிளி வளர்த்து வந்தான். கிளியை ஒரு கூட்டினுள் வைத்து எடுத்துச் சென்று, மரத்தடியில் அமர்ந்து, ஜோசியம் கேட்க வருபவர்களுக்காகக் காத்திருப்பான். அவன் முன்னால் நிறைய ஜோசிய அட்டைகள் இருக்கும். அட்டையில் சுவாமி படம் போட்டு பலன் எழுதப்பட்டிருக்கும்.

ஜோசியம் கேட்க யாரேனும் வந்தால், அழகு, கிளிக்கூண்டைத் திறந்து, கிளியை வெளியே விடுவான். கூண்டை விட்டு வெளியே வருகின்ற கிளி, பறக்க முயற்சிக்காது. தத்தி தத்தி நடந்து வந்து, அட்டைகளில் ஒன்றை எடுத்து அழகுவிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் கூண்டுக்குள் சென்றுவிடும். அந்த அட்டையிலுள்ள பலனைப் படித்து அதனை ராகத்துடன் விவரிப்பான் அழகு.

வழக்கம்போல ஒரு நாள் காலையில் மரத்தடிக்கு வந்த அழகு, கிளிக்கூண்டு, ஜோசிய அட்டைகள் ஆகியவற்றை மரத்தடியில் வைத்துவிட்டு, அருகிலிருந்த கடைக்குத் தேநீர் அருந்தச் சென்றான்.

ரத்தின் மீது அமர்ந்திருந்த கிளி ஒன்று பறந்துவந்து கூண்டின் எதிரே நின்றது. கூண்டுக் கிளியைப் பார்த்துக் கேட்டது. “என்னைப் போல சுதந்திரமாகப் பறக்கமால், நீ ஏன் இந்தக் கூண்டில் அடைபட்டு இருக்கிறாய்?”

“எனக்கும் வானத்தில் பறக்க ஆசை. ஆனால் எப்படி முடியும்?” என்றது கூண்டுக்கிளி

“அட்டையை எடுத்துக் கொடுக்க ஜோசியன் கூட்டைத் திறந்து உன்னை வெளியே விடுகிறானே. அப்போது நீ பறந்து விடலாம் அல்லவா?” என்று கேட்டது மரக்கிளி.

“அது எப்படி முடியும்? என்னைப் பிடித்ததும், என்னுடைய இறக்கையை ஏதோ செய்தான். அதனால், நான் பல முறை முயற்சி செய்து பார்த்தும் பறக்க முடியவில்லை. இதுதான் என்னுடைய விதியென்று, நான் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டேன்” என்றது கூண்டுக்கிளி.

சிறிது நேரம் கூண்டுக் கிளியை உற்று நோக்கிப் பார்த்தபடி இருந்த மரத்துக் கிளி சொல்லியது. “இன்று ஜோசியன் அட்டையை எடுக்கக் கதவைத் திறந்தவுடன், வெளியே வந்து, பறந்து விடு. உன்னால் பறக்க முடியும். நம்பிக்கையை இழக்காதே.”

இதை சொல்லிவிட்டு, பறந்து மரத்திலமர்ந்த கிளி, கீழே நடக்கப் போவதைப் பார்க்க ஆயத்தமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ஏற்ற பச்சைப் பயறு கட்லெட்.. சூப்பரான மாலை நேர Snack! 
ஓவியம்: பிரபு ராம்

தேநீர் குடித்துவிட்டு, மரத்தடியில் வந்தமர்ந்தான் கிளி ஜோசியன் அழகு. சற்று நேரத்திற்கெல்லாம், ஒருவன் கிளி ஜோசியம் கேட்க வந்தான். ஜோசிய அட்டையை எடுக்க கிளிக் கூண்டைத் திறந்தான் அழகு. தத்தி தத்தி வெளியே நடந்து வந்த கிளி, அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிறகடித்துப் பறந்து மரக்கிளையில் அமர்ந்தது.

மரத்திலிருந்த கிளி சொல்லியது. “அவன் உன்னைப் பிடிக்க முயற்சிப்பான். நாம் இருவரும் பறந்து வெகு தூரம் சென்று விடுவோம்.” இரண்டு கிளிகளும் தொலை தூரம் பறந்து சென்று வேறொரு மரத்தில் அமர்ந்தன.

கூண்டுக் கிளி கேட்டது “உனக்கு, மந்திரம், மாயம் ஏதேனும் தெரியுமா? இதுவரை நான் பலமுறை முயற்சித்தும் பறக்க முடியவில்லை. ஆனால், இன்று என்னால் எப்படி பறக்க முடிந்தது?”

“இதில் மந்திரம், மாயம் எதுவுமில்லை. உன்னைப் பிடித்தவுடன் உன் இறக்கையை, அந்த ஜோசியன் முறித்துவிட்டான். அது புரியாமல், நீ பறக்க முயற்சித்து இருக்கிறாய். பறக்க முடியவில்லை. அதனால், உன் மனதில், என்னால் இனிமேல் பறக்க முடியாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு விட்டாய். உனக்கு இறக்கை புதிதாக முளைத்து இருப்பதை நீ உணரவில்லை. நம்மால் இனிமேல் பறக்கமுடியாது என்று நீ மனதில் நினைத்துக்கொண்டிருந்ததால் நீ மறுபடியும் பறக்க முயற்சி செய்யவில்லை. இன்று நீ தன்னம்பிக்கையுடன் பறக்க முயற்சி செய்தாய். அதனால் உன்னால் பறக்க முடிந்தது” என்றது மரக்கிளி.

ந்தக் கூண்டுக் கிளியைப்போல நம்மில் பலர் இருக்கிறோம். ஒரு செயலில் ஒரு முறை தோல்வி அடைந்தால் கூட, இந்த செயல் நம்மால் செய்ய முடியாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறோம். அடுத்த முறை, அந்த வேலையைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போது, இது நம்மால் முடியாது, நிச்சயம் தோல்விதான் என்ற அவநம்பிக்கையுடன் அந்தச் செயலைச் செய்ய ஆரம்பிக்கிறோம். குறிப்பாக மாணவர்கள் பலர் நினைத்ததைச் சாதிக்கமுடியாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம் அவர்களிடம் ஏற்படும் தன்னம்பிக்கை குறைவுதான்.

தேர்வு எழுதச் செல்லும்போது, நான் நிச்சயமாக ஏதாவது தப்பு செய்வேன் என்று எண்ணிக்கொண்டு ஏன் செல்ல வேண்டும். மனதில் தேவையற்ற சஞ்சலங்களுடன் செயலில் இறங்கும்போது, கவனச் சிதறல் அதிகமாகி தப்பு செய்கிறோம்.

ஆகவே, எதைச் செய்வதாக இருந்தாலும், என்னால் முடியும், என்ற தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்கள் வசமாகும்.

மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்த திருப்தி ஆசிரியர் சிவராமனுக்கு. மாணவர்களுக்கோ, தாங்கள் புத்துணர்ச்சிப் பெற்று வானத்தில் பறப்பதுபோன்ற மகிழ்ச்சி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com