

பொதுவாக பெரிய நடிகரோ விளையாட்டு வீரர்களோ அல்லது பிரபலமானவர்களோ அவர்களின் வெற்றி நாடறியும் வகையில் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். ஆனால் சாதாரண மனிதர்கள் வாழ்வில் வெற்றி அடையும் போது அது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவதில்லை. எனவே நமது சின்ன சின்ன வெற்றிகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது அதற்கான காரணத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக நமது வளர்ச்சி மற்றும் அக்கறையில் மகிழ்பவர்கள் நமது குடும்பத்தார், மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே. அவர்களல்லாமல் பிறர் ஒரு மனிதனின் தனிப்பட்ட வெற்றிகளுக்கு அவ்வளவாக மகிழ்வதில்லை.
தமக்கு யார் என்றே அறிமுகமில்லாத நபர்கள் ஏதேனும் சாதித்தால் அதைக் கொண்டாடுவது மனிதர்கள் வழக்கம். ஆனால் அதுவே தங்களுக்குத் தெரிந்த நபரோ, பக்கத்து வீட்டுக்காரர்களோ அல்லது கூட வேலை செய்பவர்களோ ஏதேனும் சிறியதாக சாதனை செய்தால் அவர்கள் மகிழ்வதில்லை. அதற்கு பதிலாக பொறாமைப் படுகிறார்கள். ஏனென்றால் தன்னைவிட அவர்களுடைய தகுதி உயர்ந்து விட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
தனக்குத் தெரிந்த அல்லது தன்னுடன் பணிபுரியும் ஒருவன் திடீரென்று புகழ் பெறுவதோ, பணக்காரனாவதோ, வெற்றி பெறுவதோ அவர்களுக்கு பிடிப்பதில்லை. அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்யும். அவர்களுக்கு அவருடைய வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் பல இரவுகள், பல நாட்கள் பாடுபட்டு உழைத்ததோ, எடுத்துக்கொண்ட முயற்சிகளோ, தியாகமோ எதுவுமே தெரியாது, எனவே நீங்கள் நிலையான வெற்றியை அடையும் வரை சின்ன சின்ன வெற்றிகள் தரும் சந்தோஷங்களை யாரிடமும் பகிர வேண்டாம், அவற்றை அவர்களால் தாங்க முடியாது. அதனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வேண்டுமென்றே தடுப்பது போல தேவையில்லாத யோசனைகள் சொல்வது அல்லது உங்களுடைய முயற்சிகளுக்கு குறுக்கீடு செய்வது போல தொந்தரவு தருவது, போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
ஆனால் அதே சமயம் உங்கள் மேல் அக்கறை வைத்திருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினரிடம் உங்களுடைய வெற்றிகளை பகிர்ந்து கொள்வது தவறு இல்லை. அதேபோல நல்ல மனம் கொண்டவர்கள் பிறர் மேல் பொறாமைப்படுவதும் இடையூறு செய்வதும் இல்லை.
எனவே சின்ன சின்ன வெற்றிகளை பிறரிடம் பகிரவேண்டாம். ஒரு நாள் பெரும் வெற்றி பெறும் போது, அவர்களுக்கு சொல்லுங்கள். அதற்குள் நீங்கள் பிரபலமானவராக உருவாகி இருப்பீர்கள். ‘’ எனக்கு அப்பவே தெரியும், நீ இப்படி பெரிய ஆளா வருவேன்னு’’ என்று கூட முன்பு பொறாமைப்பட்ட ஆசாமிகள் சொல்லக்கூடும். அதை ஒரு அழகிய புன்னகையுடன் கடந்து விடுங்கள்.