நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதில் அனைவருமே அவர்களுக்கான பணம் சேமிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பது முக்கியம். குறிப்பாக ஏழைகள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி முறையாக சேமிப்பது என்பதற்கான திட்டம் வகுக்க வேண்டும். ஏழைகள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைவிட எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் சில யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஏழைகளும் எளிதாக பணத்தை சேமிக்க முடியும்.
பட்ஜெட்: ஏழைகள் பணத்தை சேமிப்பதற்கு முதலில் பட்ஜெட் உருவாக்க வேண்டியது அவசியம். உங்களது வருமானம் மற்றும் செலவுகளை மதிப்பீடு செய்து, நீங்கள் எதில் எல்லாம் வீண் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கண்டறியவும். உங்களது விருப்பத்தை விட தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, உண்மையிலேயே உங்களுக்கு பயன்படும் பொருட்களை வாங்குங்கள். தேவையில்லாமல் பிறரைப் பார்த்து பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்.
பட்டியலை உருவாக்கவும்: நீங்கள் கடைக்கு செல்வதற்கு முன் எதுபோன்ற பொருட்களை வாங்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து பட்டியலை உருவாக்குவோம். அதை மீறி வேறு பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். இது உங்களது பணத்தை அதிக அளவில் சேமிக்க உதவும். நீங்கள் என்ன வாங்கப் போகிறீர்கள் என்பதே தெரியாமல் கடைக்கு சென்றால், பார்க்கும் அனைத்தையும் வாங்க வேண்டும் என்றே தோன்றும். இந்த நடைமுறையானது பணத்தை வீண்விரயம் செய்வதைக் குறைக்க உதவும்.
விலைகளைப் பாருங்கள்: பொருட்களை வாங்கும்போது வெவ்வேறு கடைகள் அல்லது ஆன்லைன் தளங்களில் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். அவசரம் இல்லை என்றால் தள்ளுபடி காலத்திற்காக காத்திருக்கவும். அல்லது கூப்பன் ஏதாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தமாக வாங்கவும்: வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தினசரி வாங்காமல் மொத்தமாக வாங்குவது பணத்தை சேமிக்க உதவும். பொருட்களை வாங்குவதற்கு முன் உங்களிடம் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள், எப்போது தீரப் போகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கவும்: தேவையில்லாமல் புதிய பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்காமல், செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கி பணத்தை சேமிக்கவும். மின்னணு சாதனங்கள், வாகனங்கள் போன்றவை, செகண்ட் ஹேண்டில் வாங்குவதால் உங்களது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, செலவைக் குறைத்து, நிம்மதியான வாழ்க்கைக்கு பங்களிக்கும்.
உணவில் கவனம் செலுத்துங்கள்: தேவையில்லாமல் வெளியே சென்று சாப்பிடுவதால் உங்களது பணம் அதிகமாக செலவாகும். எனவே உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடவும். நீங்கள் வெளியே சென்று சாப்பிடுவதை விட மளிகை பொருட்கள் வாங்கி நீங்களாகவே சமைப்பது செலவு குறைவாக இருக்கும். அப்படியும் வெளியே சென்று சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், உயர்தர உணவகங்களுக்கு செல்லாமல், ஓரளவுக்கு தரமான குறைந்த விலையுடைய உணவகங்களுக்குச் செல்லவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ஏழைகள் தங்களுடைய பணத்தை கணிசமாக சேமிக்க முடியும்.