
உலகின் ஒப்பற்ற ஒரு நீதி நூல்தான் பகவத்கீதை. மஹா பாரதப் போர் நடைபெறும் ஒரு நாளுக்கு முன்னர் அர்ஜூனன் போர்க்களத்தில் தனது உறவினர்கள், குரு, குடி மக்களோடு போர் புரியமாட்டேன் என்று போரில் இருந்து பின் வாங்குவான். அப்போது ஶ்ரீகிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசிப்பதுதான் கீதையாக புகழ் பெற்றது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்பது, இலட்சியங்கள் கொண்டு மற்றவருக்கு பயனுள்ள வகையில் வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது.
பகவத் கீதை ஒர் ஆன்மீக வழிகாட்டியாக விளங்குகிறது. இது மனிதனின் நுண்ணறிவு, சுய விழிப்புணர்வு, பற்றற்ற தன்மை மற்றும் பக்தியை வளர்க்க ஊக்குவிக்கிறது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வெற்றியை அடையத் தூண்டும் பகவத் கீதையின் சில உபதேசங்களைப் பார்ப்போம்:
•மகிழ்ச்சியும் சோகமும் மாறிவரும் கால நிலைகளைப் போன்று தற்காலிகமானது. மகிழ்ச்சியும் சோகமும் மாறி மாறி வந்து சேரும். ஆனால், இவை எதுவும் நிரந்தரம் இல்லை. நம் புலன்கள் மூலம் இவற்றை அடக்கவேண்டும். கோபப்படாமல் அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எதைக் கொண்டுவருகிறதோ அதை நாம் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும், அமைதியாகவும் இணக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
•ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையைச் செய்ய மட்டுமே உரிமை உண்டு. அதன் முடிவுகளை எதிர்பார்க்கும் உரிமை இல்லை. உங்கள் செயல்களின் முடிவுகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் உங்களால் முடிந்தவரை உங்கள் கடமையை செய்வதில் கவனம் செலுத்துங்கள். பலனை எதிர்பார்த்து எதுவும் செய்ய வேண்டாம்.
•நீங்கள் செய்யும் வேலையால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கவலைப்படாமல் உங்கள் வேலையைச் செய்யுங்கள். முடிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்காமல் செயல்படுவது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் எதிர்பார்ப்புகளிலிருந்து உங்களை விடுவித்து, கையில் இருக்கும் பணியில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இந்த தன்னலமற்ற அணுகுமுறை இறுதியில் உங்களை உயர்ந்த நிலைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் இட்டுச்செல்லும்.
•நீங்கள் உயர்ந்த மனிதராக இருந்தால்தான் மற்றவர்கள் உங்களை பின்பற்றுவார்கள். உங்களின் செயல்கள் மற்றவர்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். மக்கள் உயர்ந்த மனிதர்களை பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். உயர்ந்தவர்கள் சொல் வேதவாக்காக மாறுகிறது. நீங்கள் உயர்ந்தவராக இல்லாவிட்டால் உங்கள் சொல் யாராலும் மதிக்கப்படாது.
•நீங்கள் எவ்வளவுதான் மற்றவரின் வேலையை செய்தாலும் அதன் பலன் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் செயல்களில் நீங்கள் வெற்றியடைய முடியும்.