
இக்காலத்தில் வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் நிறைந்தது அலுவலக வாழ்க்கை. அவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சில சமயங்களில் கடுமையாக உழைப்பதை விட புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும். முன்கூட்டியே திட்டமிடுவது வேலையில் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும். வேலையை தொடங்கும் முன் ஒரு நோட்பேடில் அன்றைய பணிகளைப் பற்றிய குறிப்பை எழுதிக் கொள்வது பணி டென்ஷனைக் குறைக்கும்.
பணி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வது, குறிக்கோள்களை அமைத்து அன்றாட பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்வது, தொழில் சார்ந்த புதிய நுட்பங்களை அறிந்து வைத்திருத்தல் போன்றவை. நம் அலுவலக வாழ்க்கையை மேம்படுத்த உதவும். தொழில்முறை வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது ஒருவரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சக ஊழியர்களுடன் உங்கள் செயல்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும்போது அங்கே நல்ல உறவு நீடிக்கும். மேலும் நம் கீழே பணிபுரிபவர்கள் சொல்ல வருவதை இடைமறிக்காமல் காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம். வீண் அரட்டை, வம்பு போனறவைகளில் நேரத்தை விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. வேலையில் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்ற வேண்டும். தாமதமாக வருதல், அலுவலக நேரம் முடிவதற்கு முன்பே வெளியேறுதல் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். பணியை எளிதில் முடிக்க நேர மேலாண்மை அவசியம்.
அலுவலகத்தில் முக்கியமாக நம் மேல் அதிகாரிகளிடம் பேசும்போது குரலை உயர்த்தாமல் தணிவாக நாம் சொல்லவந்ததை சுருக்கமாகச் சொல்லப் பழகுவது நல்லது. சில வேளைகளில் நாம் சொல்வது சரி எனத் தோன்றினாலும் வாதம் செய்யாமல் அமைதிகாக்க வேண்டும். சரியான சந்தர்ப்பத்தில் அதிகாரியிடம் நம் கருத்துக்களைப் பகர்ந்து கொள்ளலாம்.
“இன்னும் சிறப்பாக செய்திருப்பேன்” “இந்த வேலையை என்னால்தான் செய்ய முடியும்” போன்ற வார்த்தைகள் அதிகாரிகளிடம் சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் நமது அவசர தேவைகளுக்கு லீவு கிடைப்பது என்பது கூட குதிரைக் கொம்புதான். லீவு சாங்ஷனுக்கு சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
நாம் எவ்வளவுதான் திறம்பட வேலையை செய்து முடித்திருந்தாலும் அதை பெருமையாகக் கூறுவதை பெரும்பாலும் அதிகாரிகள் விரும்புவதில்லை. அலுவலக வேலைகளில், நிதானம் பொறுமை, பிரச்னைகளை கையாளும் முறை, பிறரிடம் பேசும் விதம் என பலவற்றைக் கற்றுக்கொள்வது அவசியம். திறமையான நேர மேலாண்மை நம்மை திறம்பட செயல்படுத்த வைக்கும்.
ஒழுங்கான நடைமுறைகளை பின்பற்றினால் அலுவலக வாழ்க்கையை சிறப்பாகவும் வெற்றிகரமானதாகவும் மாற்றி மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.