உண்மையான திருப்தி என்றால் என்ன? நிறைவுடன் வாழ சில வழிகள்!

Motivation articles
Some ways to live a fulfilling life!
Published on

வாழ்க்கையில் எத்தனை கோடி இருந்தாலும் திருப்தி அடையாதவர்கள் நிறைய பேர். சம்பாதித்து சேர்த்த கோடிகளைக் காப்பற்ற இன்னும், இன்னும் என்று அலைவார்கள். சாப்பாடு இன்றி உறக்கம் இன்றி போதும் என்ற திருப்தியின்றி வாழ்ந்துவிட்டு, முதுமையில் இவ்வளவு சம்பாதித்து என்ன பயன் என்று புலம்புவார்கள்.

செல்வமற்று மிக சாதாரண நிலையில் இருந்தாலும் திருப்தியுடன் தினம் சிரித்து, சந்தோஷித்து இருப்பவர் களும் உண்டு. காலையில் கலயத்தில் இருக்கும் பழைய சோற்றுக் கஞ்சியைக் குடித்துவிட்டு, உழைத்துக் களைத்து வரும் நூறோ இருநூறோ பொண்டாட்டி கையில கொடுத்துட்டு கிழிஞ்ச பாயில புள்ளையைக் கொஞ்சிகிட்டே திருப்தியாக தூங்கறவங்களும் உண்டு.

மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டேதான் இருக்கும். மனம் ஒரு குரங்கு என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா? நன்றாக கவனித்துப் பாருங்கள். குரங்கு ஒரு நிலையில் எப்போதும் இருக்காது. அடுத்து அடுத்து என மரத்திற்கு மரம் தாவுவதுபோல் மனிதனின் மனமும் திருப்தியில்லாமல் அங்குமிங்கும் தாவும் என்பதால்.

இப்படி கார், வீடு, மண், நட்பு, உறவு என எதிலும்  திருப்தி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நாம் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்று நிராசையில் முடியும். என்ன கிடைத்தாலும் திருப்தி அடையாதவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி எப்படி இருக்கும்? திருப்தி என்னும் தாரக மந்திரத்தை நாம் கைகொண்டால் என்றும் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
துணிவுடன் செயல்படுங்கள்: வெற்றிக்கான தெளிவான வழிமுறை!
Motivation articles

அதற்குத்தான் இந்த முல்லா கதை ஒரு சான்று. முல்லாவுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. வீடு எவ்வளவோ அழகாக இருந்தும் அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால் அவருக்கு அலுப்பு தட்டிவிட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்பு தட்டிவிட்டது!

அவர் ஒரு வீட்டுத்தரகரை கூப்பிட்டு “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. உடனே விற்க விரும்புகிறேன்” என்று சொன்னார். அடுத்தநாள் செய்தித்தாள்ளில் அந்த தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டும் விளம்பரம் கொடுத்திருந்தார். இந்த விளம்பரத்தை மீண்டும் மீண்டும் படித்தார் முல்லா.

தரகரை உடனே அழைத்தார். “என் வீட்டை விற்க வேண்டாம். உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் ஏங்கிக்கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்துகொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் எனக்கு உணர்த்திவிட்டது. இதுவே போதும்” என்றார்.

மக்களே! இருப்பதைவிட்டு இன்னும், இன்னும் என்று ஆசைப்படுவதைவிட இருப்பதிலேயே சிறந்தவைகளை அடைய முயற்சிப்பதே திருப்தியான வாழ்வின் ரகசியம். என்ன சரிதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com