
ஒரு நல்ல செயலினைத் தொடங்க நினைத்து விட்டீர்களா? உடனே செயலில் இறங்குங்கள். செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தபின், நாளை பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போடக்கூடாது. எந்தச் செயலையும் தள்ளிப் போட்டுக்கொண்டே செல்வதால் அதில் பிடிப்பு இல்லாமல் போய்விடும். ஆர்வம் குன்றிவிட்டால், செயல்பாட்டின் வேகமும் குறைந்துவிடும்.
ஒரு சில நண்பர்கள் இணைந்து காலையில் பேசுவார்கள். ஏதாவது தொழில் செய்து, சிறந்த நிலையை அடையவேண்டும் என அனைவரும் விரும்புவார்கள்.
"எதையாவது புதுமையாய்ச் செய்தால்தான் வெற்றிபெற முடியும்" என ஒருவர் ஆலோசனை கூறினார். புதுமையாகச் செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் அல்லது கிடைக்காமலும் போகலாம் என்றார். மற்றொருவர் இப்படியாகத் தினமும் கூடி தேநீர் குடிக்கும்போது எதையாவது திட்டமிட்டுச் செய்யலாம் என அவரவர் பேசியபடியே சென்றார்கள்.
தினசரி பத்திரிக்கையில் பார்க்கும், ஏதாவது தொழில் விளம்பரத்தைப் பற்றித் தீவிரமாகப் பேசுவார்கள். நாமும் அந்தத் தொழிலைச் செய்து பார்த்தால் என்ன என்று பேசியே பொழுதைக் கழித்தார்கள்.
ஒருவர் ஒரு தொழிலைச் செய்யலாம் என்று கூறினால் ஒருவர் அது சரி வராது என்றும் மற்றவர்கள் வேண்டாம் என்றும் கூறிவிடுவர். அப்பொழுது புதிதாக டிஷ்- ஆண்டனா வந்திருந்தது. வீடுகளுக்கெல்லாம் கேபிள் கனெக்ஷன் கொடுத்து, அதையே தொழிலாகச் செய்யலாம் என்றும் விளம்பரம் வந்திருந்தது.
இதனைப் பற்றியும் இவர்களின் கூட்டம் விரிவாய் ஆராய்ச்சி செய்து, பேசிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம்போல ஆண்டிகள் பலர் கூடி மடம் கட்டும் கதையாய் கூடுவதும், பேசுவதும், கலைந்து செல்வதுமாய் இருந்தார்கள். ஆனால், விரைவில் வேறு ஒருவர் கேபிள் திட்டத்தை அரங்கேற்றினார். அவரிடம் உறுப்பினர்கள் உடனே சேர்ந்து பயன் பெற்றார்கள். அவர் செலவு செய்த பணத்தையும் எடுத்து. அத்தொழிலில் தொடர்ந்து லாபமும் பார்த்து வருகிறார்.
அவரது செயல்பாட்டைப் பார்த்ததும் இந்த மடத்துப் பேச்சாளர்கள் "அடடா இத்தொழிலை நாம் செய்யாமல் விட்டு விட்டோமே" என்றார்கள்.
உலகில் யாராலும் மீண்டும் சம்பாதிக்க முடியாத ஒன்று இருக்குமானால், அது காலம் மட்டுமே ஆகும். எனவே கிடைத்த நாட்களைப் பயன்படுத்திச் செயல்படுவதே புத்திசாலித்தனம் ஆகும்.
நேற்று முடிந்த நாள் நமக்கு என்றும் திரும்பக் கிடைக்கப் போவது இல்லை. இன்று கிடைத்திருக்கும் நாள் மட்டும்தான் உறுதியான நாள்.
நாளை என்பதை ஆண்டவன்தான் அறிவான். எனவே, செய்யவிருக்கும் செயலைத் தள்ளிப்போடாமல் உறுதியான நிலையிலும், சாதிக்கவேண்டும் என்ற துடிப்புடனும் இன்றே செயல்படுங்கள் நன்மை என்றும் பெறுங்கள்.