கவனம் செலுத்தாதபோது எடுத்துக்கொண்ட வேலையைச் சிறப்பாக முடிப்பது என்பது இயலாத காரியம். எல்லா வெற்றியாளர்களின் சரித்திரத்திலுப் அவர்கள் தங்கள் செயல் மீது காட்டிய அக்கறையும், உறுதிப்பாடும் முக்கியமாக விளங்குகின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் மீதும் கவனம் சிதறாமல் கருத்துடன் செயலாற்ற வேண்டும். இல்லையேல் எதிர்பாராத தவறுகள் இழக்க நேரிடும். வேலையை ஆரம்பித்து விட்டாலேயே முழு கவனமும் அந்த வேலையில்தான் இருப்பதாக பலர் தவறாக எண்ணுகிறார்கள். வேலை ஆரம்பிக்கும்போது இருக்கும் கவனம் நாளாக நாளாக சிதறிவிடும் வாய்ப்புகள் ஏற்படும்.
கவனம் சிதறாமல் இருக்கும்போது உழைப்பு சரியான பாதையில் செல்லும். தேவையற்ற தவறுகளும் எதிர்பாராத தோல்விகளும் ஏற்படாது. சிக்கலான விஷயங்களை முதலில் செய்ய வேண்டும். உதாரணமாக பாடங்கள் படிக்கும்போது அறிவியல் பாடத்தை கடினமாக உணருவீர்கள். அந்த பாடத்தின் மீது அக்கறை காட்டி முதலில் அதைப் படிக்க வேண்டும். அப்போது கவனச்சிதறல் ஏற்படாது. தள்ளி வைக்க முடியாது என்று தெரிந்து கவனமாகச் செய்யும் போது உழைப்பு உறுதி பெறும்.
நேரத்தை விரயம் செய்யும் செயல்களில் குறித்து கவனமுடன் இருங்கள். அவசர சூழல்களில் கடினமாக உழைக்கும்போது எந்தச் செயலை முதலில் செய்வது, எதை சிறிது நேரம் கடத்திச் செய்வது என திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். இலக்கைக் குறித்து தொடர்ந்து மனதில் வைத்து உழைக்க வேண்டும். இல்லையேல் இலக்கு ஒரு திசையிலும், செயல் வேறு திசையிலும் இருக்கும். அத்தகைய சூழலில் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
கவனம் செலுத்துதல் என்பது இலக்கை அடைய நிலையான உற்சாகத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் அடுத்து என்ன செய்வது என்று தொடர்ந்து சிந்தித்து ஆர்வமுடன் செயல்படுவதாகவும் இருப்பது. இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்துபவர்கள் அதை அடைந்துவிடுகின்றனர். தோல்விகள் ஏற்படும் போதும் கவனம் சிதறி விடக்கூடாது. உழைப்பு எதிர்பார்த்த பலனைத் தருவதற்கும், எதிர்காலம் சிறப்புற அமைவதற்கும், செயல்களின் மீது நீங்கள் காட்டும் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். மேலும் கடின உழைப்பிற்கு இது மிகவும் முக்கியமானது.