
தோல்விகளைச் சந்திக்காத ஜீவன்களே உலகத்தில் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் வெற்றியைப்போல தோல்வியும் உங்களுக்கு உதவுவதற்காக நிகழக் கூடியதுதான்.
இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு வெற்றியின் பாதையிலும் ஏராளமான தோல்வித் தடங்கள் தென்படுவதே யதார்த்தம்! ஆனால், குழந்தை பருவத்திலிருந்தே 'தோல்வியே கூடாது. எப்போதும் எதிலும் வெற்றியே வேண்டும்' என்ற திணிக்கப்பட்ட மனநிலையில் வளர்த்தெடுக்கப்படுகிறோம்.
எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தோல்வி வழியில் இடறும்போது, பதறிப் போகிறோம். அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகவும், காரணங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியாகவும் எதையேனும் பற்றிக்கொள்ளத் தேடுகிறோம். சிலருக்கு அப்படியான காரண கற்பிதங்களில் ஒன்றுதான்... தற்கொலை முயற்சி. விபரீதம் புரியாத இந்த புதைகுழி மனப்பான்மையில் கால் வைப்பவர்கள், தம்மை அறியாது ஒரு கட்டத்தில் புதைந்து போவதும் உண்டு.
இல்லை என்பது எல்லோருக்கும் உண்டு. 'எனக்கு மட்டும் எதுவுமே இல்லை' என்கிற எண்ணம் கூடாது. பிரச்சினைகள் சிறிதோ, பெரிதோ.... அற்பமானதோ .. நேரடியாகச் சந்திப்பதும், போராட முயல்வதுமே ஆரோக்கியமான குணம். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும், விடுபட்டு ஓட முயற்சிப்பதும் எதிர்மறை விளைவுகளையே தரும்.
பொதுவாக, டீன்ஏஜ் பிள்ளைகள் பெற்றோரின் கதகதப்பான அரவணைப்பில் வளர்பவர்கள், திடீரென சூழல் தரும் சுதந்திரத்தை எதிர்கொள்ள முடியாது தடுமாறுவார்கள். தன்னுடைய வயதுக்கு இயல்பான செய்கைகள் கூட குற்ற உணர்வைத் தோற்றுவிக்க, உள்ளுக்குள் குமைந்து போவார்கள். தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள ஏதேனும் அற்ப காரணங்களைக் கற்பித்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.
மிதமிஞ்சிய கட்டுப்பாடான வளர்ப்பு, அளவுக்கு மீறிய ஆன்மிக நம்பிக்கைகள் போன்றவையும் கூட அதிகப்படியான குற்ற உணர்வுக்கு காரணமாகக்கூடும். வெளியில் அதிகமாகப் பிறரிடம் பழகினால், இந்த சூழ்நிலை மாற்றம் சரியாக வாய்ப்புண்டு.
இன்னொரு பக்கம், இம்மாதிரி எண்ண விபரீதங்கள் மனநிலை பலவீனமானவர்களுக்கு மட்டுமே அதிகம் இருக்கும். எனவே, எண்ணங்களை வலுப்படுத்த உடலுக்கும், மனதுக்குமான பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பரந்துபட்ட வாசிப்பு, அறிவான ஆன்மிகம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை இதற்கு உதவும்.
இந்த வயதில் மற்றவர் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பும் மனப்பான்மை இயல்பானது. இந்த மனப்பான்மையில் சற்று தூக்கலாக, தன்னைப் பற்றிய எண்ணம் மட்டுமே இருப்பவர்கள், ஏதாவது ஏடாகூடத்தைச் சொல்லியோ, செய்தோ மற்றவர் கவனம் தன் பக்கம் இருந்தாக வேண்டும் என்கிற பிரயாசையுடன் செயல்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளிலும் தற்கொலை பிரயோகமோ, முயற்சியோ தென்படலாம்.
ஒரு எண்ணம் தவறென்று தெரிந்து பின்னரும் அதிலிருந்து விடுபட முடியாது, திரும்பத்திரும்ப தலைகாட்டும் அந்த எண்ணங்களால் நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் தென்பட்டால், அது எண்ண சுழற்சி நோயாக இருக்கவும் வாய்ப்புண்டு.
இந்த இரண்டு சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் உடனடி மனநல ஆலோசனை அவசியம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பருடன் மனநல மருத்துவரையோ, கவுன்சிலிங் செய்பவரையோ அணுகினால் சுலபத்தில் பிரச்சினையிலிருந்து விடுபட அவர்கள் உதவுவார்கள்.
எப்போதுமே, ஒரு எண்ணம் விபரீதமாக நெருடினால், உங்கள் மனதுக்கு நெருக்கமான, சற்று பக்குவமான நபரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது. அது பாரத்தைக் குறைக்கும். அவர்கள் தரும் அனுபவ ஆலோசனைகளே கூட சில சமயம் தீர்வைத் தந்துவிடும். இதுதவிர, சூழ்நிலை மாற்றமும் அவசியம். தனிமையைத் தவிர்க்க வேண்டியது கட்டாயம்.