உலகம் முழுவதும் போர், பஞ்சம் என பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் தோன்றிய ஒரு தத்துவமான 'ஸ்தோயிசம்' (Stoicism) மீண்டும் பிரபலமடைந்து வருகிறது.
கஷ்டங்களைத் தவிர்த்து, நம் கட்டுப்பாட்டில் உள்ளதை மட்டுமே நம்பி வாழ்வது எப்படி என்பதை இந்தத் தத்துவம் நமக்கு உதவுகிறது.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸில் (Athens) ஜீனோ ஆஃப் சிட்டியம் (Zeno of Citium) என்பவரால் கொண்டுவரபட்ட ஒரு தத்துவமே ஸ்தோயிசம் (Stoicism). இதன் அடிப்படைச் சாரம் மிகவும் எளிமையானது. மகிழ்ச்சி என்பது வெளிப்புற நிகழ்வுகளிலோ அல்லது பொருட்களிலோ இல்லை; அது நம்முடைய உள் மனப்பான்மை மற்றும் நடத்தையில் உள்ளது.
ஸ்தோயிக் தத்துவவாதிகள், வாழ்க்கை என்பது எதிர்பாராத சோதனைகள் நிறைந்தது என்றும், மகிழ்ச்சி மற்றும் துன்பம் இரண்டும் இயற்கையான நிகழ்வுகளே என்றும் நம்பினர். வெளிப்புற உலகை மாற்ற முடியாது, ஆனால் அந்த நிகழ்வுகளுக்கு நாம் எப்படிக் கருத்து தெரிவிக்கிறோம், எப்படி எதிர்கொள்கிறோம், என்பதை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதே ஸ்தோயிசத்தின் சாரம்.
ஸ்தோயிக் கோட்பாட்டின் மூன்று நிலைகள்
ஸ்தோயிசத்தின் வழிகாட்டும் கொள்கைகளை மூன்று முக்கியத் தூண்களாகப் பிரிக்கலாம்:
1. கட்டுப்பாட்டு குறித்து புரிந்துகொள்ளுதல் (Dichotomy of Control):
நம் கட்டுப்பாட்டில் உள்ளது: நம்முடைய எண்ணங்கள், தீர்ப்புகள், விருப்பங்கள், முடிவுகள் மற்றும் செயல்கள் மட்டுமே.
நம் கட்டுப்பாட்டில் இல்லாதது: மற்றவர்களின் கருத்துகள், கடந்த காலம், உடல்நலப் பிரச்சனைகள், மற்றவர்களின் செயல்கள் மற்றும் மரணம்.
ஸ்தோயிக் பயிற்சி என்பது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, நம்மால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டும் சக்தியைச் செலுத்துவதாகும்.
அறம் மட்டுமே நன்மை:
ஸ்தோயிக் தத்துவத்தில், செல்வம், புகழ் அல்லது அழகு ஆகியவை உண்மையான நன்மைகள் அல்ல. அறிவு, தைரியம், நீதி மற்றும் நிதானம் ஆகிய நான்கு அறங்களே உண்மையான நன்மைகள் ஆகும். இந்த அறங்களுடன் வாழ முயற்சிப்பதே ஒரு முழுமையான வாழ்க்கை.
இயற்கையுடன் இணங்கி வாழ்தல்:
பிரபஞ்சத்தின் ஒழுங்கு மற்றும் அறிவுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதில் முறைப்படி சிந்திப்பது மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக நமது கடமைகளைச் செய்வது ஆகியவை அடங்கும்.
இன்றைய வாழ்வில் ஸ்தோயிசம்:
இன்றைய வேகமான உலகில், ஸ்தோயிசம் மன உறுதி மற்றும் சகிப்புத்தன்மையின் கவசமாகச் செயல்படுகிறது. உதாரணமாக, போக்குவரத்து நெரிசலில் கோபப்படுவதை விட (கட்டுப்பாடற்றது), நாம் அமைதியாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும் முடிவெடுப்போம் (கட்டுப்பாட்டில் உள்ளது). இந்தச் சிந்தனை, மன அழுத்தத்தைக் குறைத்து, சவால்களைச் சாத்தியமான கற்றல் அனுபவங்களாக அணுக உதவுகிறது. எமர்ஜென்சி மற்றும் போர் காலங்களில், மனதை நிலையாக வைத்திருக்க இராணுவத் தலைவர்கள் கூட ஸ்தோயிக் தத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்தோயிசத்தைப் பயிற்சி செய்வது என்பது உணர்ச்சிகள் அற்றவராக மாறுவது அல்ல, மாறாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படுவதாகும்.