குறைகளை கண்டு வருந்துவதை நிறுத்துங்கள்! ஜெயிக்க இந்த ஒரு வித்தை தெரிந்தால் போதும்!

judo motivation story
success in lifecredit AI Image
Updated on

"நான் எதற்குமே லாயக்கில்லை; என்னிடம் எந்தத் திறமையும் இல்லை" என்று நினைத்து வருத்தப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால், உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடிப்பதற்குப் பதில், உங்கள் குறைகளை முதலில் கண்டுபிடியுங்கள். ஏன் குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கதையை முழுதாகப் படியுங்கள்.

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு ஜூடோ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால், சில வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் அவனுக்கு இடது கை போய்விட்டது. ஆனாலும் அந்தச் சிறுவன் மனம் தளரவில்லை. எப்படியாவது ஜூடோ கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்க, இவனது குறையைப் பொருட்படுத்தாமல் இவனுக்கு ஜூடோ வித்தையைக் கற்றுக்கொடுக்க ஒரு குரு முன்வந்தார். ஆனால், இவனுக்கு ஒரேயொரு குத்து வித்தையை மட்டுமே அவர் சொல்லிக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் ஒரு குத்து வித்தை மட்டும் சொல்லிக்கொடுக்கிறார், போகப்போக மற்றதைச் சொல்லிக்கொடுப்பார் என்று நினைத்துக்கொண்டு, அவரிடம் எதுவும் கேட்காமல் அதையே அந்தச் சிறுவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், ஆறேழு மாதங்கள் கடந்தும் அந்தச் சிறுவனுக்கு அதே வித்தையை மட்டுமே பயிற்சி செய்யச் சொன்னார் குரு. சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், அவரை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் மனம் வரவில்லை.

இப்படியே நாட்கள் ஓடின. அந்தச் சமயம் அந்த ஊரில் ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டிக்கு இந்தச் சிறுவனின் பெயரையும் குரு கொடுத்திருந்தார். ஆனால் சிறுவனுக்கோ பயம். இருப்பது ஒற்றை கை, கற்றுக்கொண்டதோ ஒற்றை வித்தை; இதை வைத்துக்கொண்டு எப்படிப் போட்டியில் சண்டை போடுவது என்று எண்ணினான்.

ஒற்றைக் கையோடு வந்த இந்தச் சிறுவனை மற்ற போட்டியாளர்கள் சாதாரணமாக எண்ணினார்கள். ஆனால், அவர்கள் எல்லோருடைய முகத்திலும் கரியைப் பூசுவது போல அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது இந்தச் சிறுவன்தான்!

அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம்; அந்தச் சிறுவனுக்கும் தான். உடனே அந்தச் சிறுவன் தன் குருவிடம் சென்று, "எப்படி குருவே, என்னுடைய ஒற்றைக் கையை வைத்துக்கொண்டு, அந்த ஒற்றைக் குத்து வித்தையினால் என்னால் இந்தப் போட்டியில் ஜெயிக்க முடிந்தது?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு சொன்னார்: "இரண்டே காரணங்கள்தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து வித்தை; இதை எல்லோராலும் எளிதில் செய்ய முடியாது. இரண்டாவது, ஒரு வீரன் இந்தக் குத்து வித்தையைப் பிரயோகிக்கும்போது அதைத் தடுக்க எதிரில் இருப்பவர்கள் அந்த வீரனின் இடது கையைப் பிடித்து மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லாததால் யாராலும் உன்னைத் தடுக்க முடியவில்லை," என்று சொன்னாராம்.

இதையும் படியுங்கள்:
விதைத்தது விளையும்; செய்தது திரும்பும்... மனதை உருக்கும் சம்பவம்!
judo motivation story

உங்களிடம் இருக்கும் திறமையை மெருகேற்றுவதை விட, உங்களிடம் இருக்கும் குறைகள் என்னவென்பதைக் கண்டுபிடித்து அதை நிறையாக மாற்றிவிட்டால், உங்களை வெல்ல யாராலும் முடியாது! உங்களுடைய பலவீனமே (success in life) மிகப்பெரிய பலமாக மாறும்!

logo
Kalki Online
kalkionline.com